ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் ரேபிட் மாடல் விற்பனைக்கு வெளி வந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது நாம் அறிந்த விஷயமே. இந்த மாடலின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர ஸ்கோடா நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைக் கையாண்டுள்ளது. ரேபிட் காரில் புதிய அம்சங்களை சேர்த்து ஸ்கோடா ரேபிட் ஒனிக்ஸ்(Rapid Onyx) என்ற பெயரில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கிறது ஸ்கோடா.

டிசைனில் மிரட்டும் ஓனிக்ஸ்
இந்த கார் லேபிஸ் புளூ (Lapiz Blue) மற்றும் கேண்டி ஒயிட் (Candy White) ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது. காரின் முகப்பு கிரில் அமைப்பு மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் பளபளப்பான கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டிருப்பது முத்தாய்ப்பாகத் தெரிகிறது. கிரில் அமைப்பைச் சுற்றிலும் குரோம் பீடிங் பொருத்தப்பட்டிருக்கிறது. அதே போன்று, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பின்னணியிலும் கருப்பு வர்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16 அங்குல கருப்பு வண்ண கிளப்பர் அலாய் சக்கரங்கள் காரின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கின்றன.

காரின் உட்புறத்தில் இரண்டு வண்ணங்களின் கலவை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எபோனி – சேண்ட்(Ebony – Sand) என்ற கருப்பு மற்றும் மணல் வண்ணத்தில் உட்புற பாகங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறன. தோலினால் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள் உட்புறத்தை பிரீமியமாகக் காட்டுகிறது. காரில் 6.5 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. இது தவிர ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இக்காரில் இடம் பெற்றுள்ளன.
இயக்கத் திறன்
காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 BHP பவரைத் தர வல்லது. மேலும், இந்த எஞ்சினால் 153 NM டார்க் திறனைக் கொடுக்க இயலும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 109 BHP பவரையும், 250 NM டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடல் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

இந்தியாவில் பண்டிகைக் காலம் வர இருப்பதால் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கோடு ஸ்கோடா நிறுவனம் ஒனிக்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தக் காரின் ஆரம்ப விலை 9.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடாவின் ரேபிட், ஆக்டேவியா போன்று வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா? இந்தப் புதிய ஓனிக்ஸ் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.