2019-ம் ஆண்டு 5.6% எத்தனால் மட்டுமே பெட்ரோலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது 10% அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை 2030-ம் ஆண்டில் 20% அளவிற்கு உயர்த்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மக்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் நிலையில், பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து இருப்பது தொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோலில் 10% எத்தனால் கலந்திருப்பதால், வாகனங்களில் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால், அது எத்தனாலுடன் கலந்து டேங்கின் அடிப்பகுதியில் தங்கிவிடும் என்றும், இதனால் வாகனத்தை இயக்க முடியாமல் போகும். மேலும் வாகனம் குலுங்கி செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை உயர்த்துவதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. முன்னதாக, 2019-ஆம் ஆண்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
“எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மூலமாக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிலையங்கள் 10% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்து வருகின்றன. மத்திய அரசு 8-6-2019 அன்று வெளியிட்ட உயிரி எரிபொருள் 2018 தொடர்பான தேசிய கொள்கையின்படி, 2030-ஆம் ஆண்டு வாக்கில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”