உலகம் முழுவதும் வாடகை டாக்ஸிகளுக்கான தேவையும் எப்போதும் அதிகரித்து வருகிறது. இதன் எதிர்காலத்தை ஜெர்மனியைச் சேர்ந்த லிலியம் நிறுவனம் பறக்கும் டாக்சியை வடிவமைத்து வருகிறது. பேட்டரி மூலம் இயங்கக்கூடிய இந்த குட்டி விமானம் ஒரு மணி நேரத்தில் 300 கிலோ மீட்டர் வரை பயணிக்கக்கூடியது. இதில் 5 பேர் ஒரே நேரத்தில் பயணிக்கலாம். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்து விட்டால் 300 கிலோ மீட்டர்கள் இதனால் பயணிக்க முடியும்.

இதற்கென ஒரு செயலியையும் அந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் சென்றடைய வேண்டிய இடத்தை நாம் போன் மூலம் குறிப்பிட்டால் போதும். பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பதை இதுவரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. ஆனாலும் சாதாரண டாக்சிகளுக்கு ஆகும் செலவுதான் இதற்கும் வரும் என்கிறார் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ரெமோ கெர்பர் (Remo Gerber).
இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு பறந்து செல்வதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்க இருக்கிறோம் என இந்நிறுவனத்தின் தலைவர் டேனியல் வீகன்ட் (Daniel Wiegand) தெரிவித்துள்ளார்.

லிலியம் மட்டுமல்லாது அமெரிக்காவின் மிகப் பெரிய வாடகைக் கார் நிறுவனமான உபேர் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து பறக்கும் டாக்ஸியை 2023ம் ஆண்டு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் மற்றொரு பெருநிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் கார்களை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட லிலியம் நிறுவனம் பல கட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த விமானத்தின் இறுதி வடிவத்தை உருவாக்கியிருக்கிறது. ஸ்கைப் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிக்லஸ் சென்ஸ்ட்ரோமின் (Niklas Zennström) அட்டாமிக்கா மற்றும் சீனாவின் மிகப்பெரும் தொழில்நுட்பத்துறை நிறுவனமான டான்சென்ட்(Tencent) ஆகிய நிறுவனங்கள் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு லிலியத்தின் இந்த தயாரிப்பில் முதலீடு செய்திருக்கின்றன.

அடுத்த பத்து ஆண்டுகளில் பறக்கும் டாக்சிகள் பரவலாக புழக்கத்திற்கு வந்திருக்கும். ஆகவே ஆகாயத்திலும் சிக்னல் கம்பங்களை அரசு நிறுவும் காலமும் வரலாம்.