அவுட்லாண்டர் எஸ்யூவி (Outlander SUV) காரின் விற்பனையை சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நிறுத்திக் கொண்ட மிட்சுபிஷி(Mitsubishi) நிறுவனம், தற்போது மீண்டும் அந்தக் காரினை விற்பனைக்குக் களமிறக்கியிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மாற்றங்கள்
இந்தப் புதிய மாடல், 7 பேர் செல்வதற்கான மூன்று வரிசை இருக்கை அமைப்புகளைக் கொண்டுள்ளது. பழைய மாடலில், 5 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்பு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். புதிய மிட்சுபிஷி அவுட்லாண்டர் எஸ்யூவியில் 6.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 710 வாட் ராக்ஃபோர்டு ஃபாஸ்கேட் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கீ லெஸ் என்ட்ரி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், பேடில் ஷிஃப்ட் வசதி, பார்க்கிங் பிரேக், எலக்ட்ரிக் சன் ரூஃப் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றிருக்கிறது அவுட்லாண்டர் எஸ்யூவி.

ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே?
எல்லா வசதிகளையும் கொண்ட மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற மிட்சுபிஷி அவுட்லாண்டர் எஸ்யூவி ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே சந்தைகளில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய மாடலானது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. பழைய மாடலை விட மிகச் சிறந்த வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இப்புதிய காரில் இடம்பெற்றுள்ளன.
வெளிப்புறத் தோற்றம்
காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய ஏர் டேம் மற்றும் குரோம் பேனல்கள் அற்புதமான தோற்றத்தைக் காருக்கு வழங்குகின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல் நேர விளக்குகள், குரோம் கிரில் அமைப்பு, அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை வெளிப்புறத்தில் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

சக்திவாய்ந்த அவுட்லேண்டர் எஸ்யூவி!!
அவுட்லாண்டர் எஸ்யூவி காரின் எஞ்சின் 2.4 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இந்தக் காரில், டீசல் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 167 பிஎச்பி பவரையும், 222 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புற வடிவமைப்பு மற்றும் எஞ்சின் செயல்திறனை வைத்துப் பார்க்கும் பொழுது, இந்தக் கார் டொயோட்டா ஃபார்ச்சூனர்(Toyota Fortuner), ஃபோர்டு எண்டெவர்(Ford Endeavour) உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். இந்தியாவைப் பொறுத்தவரை ரூ.31.84 லட்சம் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது அவுட்லாண்டர் எஸ்யூவி கார்.