MG மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து அடுத்த மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் MG Hector காரின் முழு விவரங்களும் வெளிவந்திருப்பதுதான் ஆட்டோமொபைல் உலகத்தின் தற்போதைய ஹாட் டாக். இந்தியாவில் முதன்முறை வெளிவர இருக்கும் இன்டர்நெட் கார் என்பதையும் தாண்டி இதில் வாவ் சொல்லவைக்கும் விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

Overdrive
ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம்
இந்த தொழில்நுட்பம் மூலம் நீங்கள் காருடன் பேசலாம். உங்களுடைய குரலை அது தன்னுடைய மெமரியில் (Voice Recognition) பதிந்துகொள்ளும். 5ஜி இன்பில்ட் சிம் ஒன்று இதனுடன் இருக்கிறது. இதன்மூலம் கால், இணைய உலவி, வை ஃபை, ஜி.பி.எஸ் என பல வசதிகளை ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
4,655 மிமீ நீளம் மற்றும் 2750 மிமீ அகலம் கொண்டுள்ள இந்தக்கார் F-35 விமான மாடலைப்பார்த்து டிசைன் செய்யப்பட்டதாகும். ஏரோடைனமிக் அம்சங்களுக்காக சிறப்பு புறத்தோற்ற வடிவங்கள் இல்லையெனினும், உறுதியான பாடியையே கொண்டுள்ளது. வீல் பேஸ் அதிகம் என்பதால் பயணிகளுக்கு அதிக இடம் கிடைக்கும்.

பெட்ரோல் மாடலைப் பொறுத்தவரை 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 143bhp பவர் மற்றும் 250Nm டார்க்கையும் கொடுக்க முடியும். டீசல் மாடலில் ஃபியட்டின் 2 லிட்டர் டர்போ எஞ்சின்கள் இருக்கிறது. இது 170bhp பவர் மற்றும் 350Nm டார்க்கையும் கொடுக்கவல்லவை. டீசல் மாடல் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடனும், பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடனும் வருகிறது.
இந்தியாவில் முதன்முறையாக 48V திறனுடன் வெளிவரும் ஹைபிரிட் எஸ்யூவி என்ற பெருமையை ஹெக்டர் தட்டிச்செல்கிறது. இதில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரி மூலம் ரீஜெனேடிவ் பிரேக்கிங் சிஸ்டத்தினால் கிடைக்கும் மின்சாரமானது சேமிக்கப்படும்.
7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள ஸ்பீடோ மீட்டர் ஓட்டுனருக்கு காரைப்பற்றிய அனைத்து துல்லிய தகவல்களையும் தரவல்லது. ஐ ஸ்மார்ட் வசதி கொண்ட 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன் செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளில் MG நிறுவனம் அதிக அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. அனைத்து சீட்டிலும் 3 பாய்ன்ட் சீட் பெல்ட்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், குழந்தைகள் சீட்டிற்கென ISOFIX அமைப்பு, பின்புற டிஸ்க் பிரேக் போக ABS, EBD, ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன விலை அழகே!!
MG ஹெக்டர் கார் 5 நிறங்களிலும், ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என 4 வேரியன்ட்களிலும் வெளிவர இருக்கிறது. காரின் விலை 16 முதல் 20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹெக்டர் சாதிக்குமா? சறுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.