இந்தியர்களுக்கு மாருதி சுஸுகி கார்கள் என்றால் எப்போதுமே பிரியம் ஜாஸ்தி. சராசரி மத்திய வர்க்க இந்தியன் ஒருவனது ஒட்டுமொத்த கார் ஆசையையும் பூர்த்தி செய்யும் இந்த நிறுவனத்தின் கார்கள் தான் இந்தியாவில் அதிகம் விற்கின்றன. வரும் 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு டீசல் கார் தயாரிப்பை நிறுத்தப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது அதன் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியலைகளை கிளப்பியுள்ளது. அமலுக்கு வரும் BSVI மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறையின் காரணமாக அந்த நிறுவனம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
மாருதி சுஸுகியிடம் தற்போது 1.3 லிட்டர் ஃபியட் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் DDiS இன்ஜின்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பால் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, S கிராஸ், பெலினோ, விட்டாரா ப்ரீஸா போன்ற கார்களில் டீசல் வேரியன்ட்கள் நிறுத்தப்பட இருக்கிறது.
தற்போதைய நிலையில் அந்நிறுவனத்திடம் 16 பெட்ரோல் கார் மாடல்களை வைத்துள்ளது. எனவே வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் அவற்றை எல்லாம் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்யவேண்டும். மேலும் சியாஸ் கார் மாடலில் டீசல் வேரியன்ட் மட்டுமே வெளிவருகிறது. இதற்காக புதிய பெட்ரோல் எஞ்சினைத் தயாரிக்கும் திட்டம் மாருதியிடம் உள்ளது. ஏனெனில் சுமார் 1000 கோடி செலவில் சியாஸ் டீசல் மாடல் தயாரிப்பு பிளான்ட் போடப்பட்டது. அதனை பெட்ரோல் வேரியண்டாக மாற்ற ஆகும் செலவு குறித்த விவாதத்தில் இருக்கிறது மாருதி.

வேகன் ஆர் காரை எலெக்ட்ரிக் வேரியன்டாக களமிறக்கப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதே போல் S கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரீஸா மாடல்களில் தற்போது டீசல் மாடல் மட்டுமே வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த மாடல்களுக்கான பெட்ரோல் எஞ்சின் தயாரிக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.