அடுத்த நிதியாண்டில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோவை (Maruti Suzuki Baleno) தயாரிக்க இருப்பதாக டொயோடா தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான கார்கள் வரிசையில் சமீப காலத்தில் முதலிடம் பெறுவது பலேனோ. இந்நிலையில் டொயோடா நிறுவனத்துடன் செய்து கொண்ட கிராஸ் பேட்ஜ் (Cross Badge) மூலம் மாருதி நிறுவனம், தங்களது காரான பலேனோவை அடுத்த ஒரு வருடத்திற்கு தயாரிக்காது என்று அறிவித்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய கார் நிறுவனமான டொயோடா, மாருதி சுஸுகியுடன் உற்பத்தி மற்றும் வியாபாரக் கூட்டணி வைத்திருக்கிறது. இதன் மூலம் அடுத்த நிதியாண்டு பலேனோ கார் உற்பத்தி கர்நாடகாவில் உள்ள டொயோடாவிற்குச் சொந்தமான தொழிற்சாலையில் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்தாண்டு சுமார் 20,000 முதல் 25,000 பலேனோ கார்கள் டொயோட்டாவின் நிறுவனத்தின் மூலம் விற்பனைப்படுத்தப்படும்.
கிராஸ் பேட்ஜ்
1817 ஆம் ஆண்டு டேவிட் ரிக்கார்டோ (David Ricardo) என்பவரால் இம்முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே பொருள், இரண்டு வித்தியாசமான நிறுவனத்தின் பெயரில், வெவ்வேறு கால இடைவெளிகளில் விற்பனைக்கு வரும். இம்முறை பரஸ்பர பொருளாதார முன்னேற்றத்தினை இரு நிறுவனங்களுக்கும் கொடுக்கும். இந்தியாவில் முதன்முறையாக கூட்டணி வைக்கும் டொயோடா மற்றும் மாருதி அடுத்த சில கார்களையும் இப்படித் தயாரிக்கப்போவதாகத் தெரிகிறது.
டொயோடா

உலக அரங்கில் டொயோடாவின் வளர்ச்சி அதிகம் என்ற போதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை சராசரி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. எட்டியோஸ் ( Toyota Etios) அறிமுகத்தின் மூலம் அதிகம் விற்பனையாகும் கார்களின் வகையான ஹாட்ச் பேக்கில் கால் பதித்தது. ஆனால், இது அந்நிறுவனத்திற்கு எதிர்பார்த்த பெருவெற்றியைத் தரவில்லை. எனவே மாருதியுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது டொயோடா. ஹாட்ச் பேக் (Hatchback) ரக கார்களில் பலேனோவை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் அந்நிறுவனத்திற்கு பலன்கள் அதிகம். பெருமளவிலான வாடிக்கையாளர் அடர்த்தியை உருவாக்கவே இம்மாதிரி உத்திகளை கையாண்டு வருகிறது டொயோடா. எனவே, அடுத்தாண்டு சுமார் 20,000 முதல் 25,000 பலேனோ கார்கள் டொயோட்டாவின் நிறுவனத்தின் மூலம் விற்பனைப்படுத்தப்படும். இம்முறையின் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் இருநிறுவனங்களும் மாறி மாறி விற்பனையை மேற்கொள்ளும்.
இதற்குமுன் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) உடன் ஒப்பந்தத்திலிருந்தது சுஸுகி. இது அவ்விரு நிறுவனங்களுக்கும் பெரிய வெற்றிகளைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மஹிந்திரா(Mahindra) – ஃபோர்ட்(Ford) மற்றும் ஃபோக்ஸ்வேகன்(Volkswagen)- டாடா(TATA) இடையிலான கூட்டணியும் பெரிதாய் சோபிக்கவில்லை.
ஆனால் ரெனால்ட்(Renault)- நிஸான்(Nissan) வெற்றியைச் சந்தித்திருக்கிறது. அதேபோல் ஃபோக்ஸ்வேகன்(Volkswagen)-ஸ்கோடா(Skoda) நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்தியாவைப் பொறுத்தவரை டொயோடா- சுஸுகி கூட்டணியின் பலம் பலவீனம் என்ன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.