பிரபல கார் நிறுவனமான மாருதி, தங்களது காரான டிசையரின் ஸ்பெஷல் எடிஷன்(Special Edition) மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டா அமேஸ்(Honda Amaze), ஹூண்டாய் எக்ஸென்ட்( Hyundai Xcent), ஃபோர்டு ஆஸ்பயர்( Ford Aspire) போன்ற கார்களுடன் போட்டி போடும் வகையில், மாருதி நிறுவனம் டிசையரில் (Maruti Dzire) புது மாற்றங்களைச் செய்திருக்கிறது.
டிசையரின் விலைக் குறைந்த வேரியன்ட்களில், கூடுதல் சிறப்பம்சங்களை உள்ளடக்கி ஸ்பெஷல் எடிஷனைத் தயாரித்திருக்கிறது மாருதி. இப்புது அம்சங்களை பெட்ரோல், டீசல் என இரு வகைகளிலும் அறிமுகப்படுத்திருக்கிறது அந்நிறுவனம்.

என்னென்ன மாறுதல்கள்?
இந்தப் புதிய மாடலில் பவர் விண்டோ, வீல் கவர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன. புளு டூத் வசதியுடன் மியூசிக் சிஸ்டம், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, டிசையரில் உள்ள முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை அப்படியே புது எடிஷனிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விலையானது சாதாரண எல்எக்ஸ்ஐ (LXI) மற்றும் எல்டிஐ(LTI) வேரியண்ட்டுகளைவிட ரூ.30,000 கூடுதல் ஆகும்.
1.2 லிட்டர் கொள்ளவுள்ள பெட்ரோல் எஞ்சின், 82 பிஎச்பி(bhp) பவரையும், 113 என்எம்(NM) டார்க் திறனையும் கொடுக்கவல்லது. டீசலைப் பொறுத்தவரை கொள்ளளவு 1.3 லிட்டர் ஆகும். இந்த எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.
என்ன விலை?
மாருதி டிசையர் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பெட்ரோல் கார் ரூ.5.56 லட்சம் விலையில் கிடைக்கும். டீசல் மாடல் ரூ.6.56 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையானது சாதாரண எல்எக்ஸ்ஐ (LXI) மற்றும் எல்டிஐ(LTI) வேரியண்ட்டுகளை விட ரூ.30,000 கூடுதல் ஆகும். இருப்பினும், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இப்புது மாடல்கள் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், இக்கார் நடுத்தர மக்களைக் குறி வைத்து அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் போன்ற கார்களின் அடிப்படை மாடல்களின் விலையோடு ஒப்பிடும் பொழுது மாருதி டிசையர் ஸ்பெஷல் எடிஷனின் விலை சற்றேரக்குறைய சமம் தான். எனவே, வாடிக்கையாளர்கள் பல கார்களில் இருந்து தங்களுக்குப் பிடித்தமான காரினை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், சந்தைகளில் இந்நிறுவனங்களுக்கிடையே பெரிய போட்டி உருவாகும் சூழல் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.