அதிவேக பைக் தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி(Kawasaki) , வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கை விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது.
சூப்பர் பைக் ஆர்வலர்களை ஈர்க்கும் விதத்தில் செயல்திறன் அதிகரிக்கப்பட்ட எஞ்சினைப் பொருந்தியுள்ளது கவாஸாகி நிறுவனம். 2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் மொத்தம் மூன்று வித்தியாசமான மாடல்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை 2019 கவாஸாகி நின்ஜா எச்2, எச்2 கார்பன் மற்றும் எச்2ஆர் ஆகும்.

மேம்படுத்தப்பட்ட என்ஜின்!
பழைய மாடலின் என்ஜினை அதிக சக்தியை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தியிருக்கிறது கவாஸாகி நிறுவனம். இந்தப் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 998 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 227 பிஎச்பி பவரையும்(BHP), 141.7 என்எம்(NM) டார்க் திறனையும் வழங்க வல்லது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது இப்புதிய 2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் எஞ்சின் சக்தி 20 பிஎச்பி அதிகம்.

புதிய செயலி அறிமுகம்!!
2019 கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் புதிய டிஎஃப்டி கலர் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேஷ செயலியை கவாஸாகி நிறுவனமே அறிமுகப்படுத்தியிருக்கிறது. ப்ளூடூத் மூலம் எந்நேரமும் அலைபேசி வண்டியுடன் இணைப்பில் இருக்கும். எஞ்சின் நிறுத்தப்பட்டாலோ அல்லது வண்டியிலிருந்து 20 மீட்டருக்கு தூரத்திற்கு மேல் அலைபேசி விலகிச் சென்றுவிட்டாலோ இணைப்புத் துண்டிக்கப்படும். இருப்பினும் இந்தச்செயலியின் மூலம் வண்டி இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வண்டியைப் பற்றிய தகவல்கள் இயக்கத் தரவுகள் மற்றும் அலைபேசியின் செய்திகளை இந்தச் செயலியின் மூலமாகவே பெற முடியும். கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் பிரெம்போ நிறுவனத்தின் ஸ்டைல்மா மோனோபிளாக் காலிபர்கள் கொண்ட பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விசேஷ வண்ணப்பூச்சு கண்ணைக் கவரும் விதத்தில் அமைத்திருக்கிறது.
எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் பொசிஷன் லைட்டுகள் போன்ற சிறப்பம்சங்களும் புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், 2019 கவாஸாகி நின்ஜா எச்2ஆர் பைக்கில் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் காலிபர்களில் புதிய சூப்பர்சார்ஜ்டு என்ற முத்திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விசேஷ வண்ண பூச்சும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விலை எவ்வளவு?
எஞ்சின் மாறுதல் இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சமாகக் கருத்தப்படுகிறது. செப்டம்பர் 1 முதல் இந்தப் புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு அக்டோபர் 31-ந் தேதி நிறைவு பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 கவாஸாகி நின்ஜா எச்2 பைக் ரூ 34.50 லட்சம் எனவும், நின்ஜா எச்2 கார்பன் பைக் ரூ 41 லட்சம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நின்ஜா எச்2ஆர் பைக்கின் விலை ரூ 71 லட்சம் ஆகும். இம்மூன்று பைக் மாடல்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன. முன்பதிவு செய்தவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இப்புதிய சூப்பர் பைக் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.