ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருபவை அதிரடி சண்டைக்காட்சிகள், அழகான நடிகைகள் மற்றும் கதாநாயகனின் கார். “இத்துனூண்டு காருக்குள்ள இத்தனை வசதிகளா” இன்று புருவம் நெற்றிக்கு ஏறும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

ஜேம்ஸ் பாண்டின் கார்கள் மூக்குப் பகுதியில் இருந்து முளைக்கும் துப்பாக்கிகள், சைலன்ஸர் புகையோடு வெளியேறி பின்னால் வரும் வில்லன்களின் மூஞ்சியை காலி செய்யும் பச்சை நிற வாயு, முன் மற்றும் பின் பக்கங்களில் காரை நெருங்கும் வாகனங்களை நசுக்கும் பேட்டரி ரேம்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் கபாலம் வழியாக வெளியேறும் வசதி என ஒரு மினி பீரங்கியாக அந்த கார் படத்தில் வலம் வரும். இதைப் பார்த்து சிலிர்த்துப் போய் சில்லறையை சிதறவிட்டவர்கள் ஏராளம். இந்த மவுசை குறிவைத்தே ஆஸ்டன் மார்டின் நிறுவனம் தனது டிபி 5 காரை மீண்டும் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
சீன் கானரி ஜேம்ஸ்பாண்டாக நடித்த திரைப்படம் தான் கோல்ட் பிங்கர். படம் முழுவதும் கள்ளத்தனமாக தங்க பிசினஸ் செய்யும் பிரகஸ்பதி ஒருவரை பிடிக்க ஜேம்ஸ்பாண்ட் அலைந்து திரிவார். இதில் பாண்ட் உபயோகித்த கார் தான் இந்த ஆஸ்டன் மார்ட்டின் dp 5. இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷைர் மாகாணத்தில் 1964 ஆம் ஆண்டு இந்த மாடல் கார்களை ஆஸ்டன் மார்டின் தயாரித்தது. இப்போது இவை வெளிவருவதில்லை. அந்த நிறுவனமும் தனது தொழிற்சாலையை வார்விகஷயர் மாகாணத்திற்கு மாற்றிவிட்டது.
ஆனால் தற்பொழுது 25 ஆஸ்டன் மார்ட்டின் டி பி5 கார்களை நிறுவனம் தயாரித்து வருகிறது.இதற்கு 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கதாநாயகியைத் தவிர படத்தில் நீங்கள் பார்த்த அனைத்து வசதிகளும் இந்த பிரத்தியேக எடிஷன் காரிலும் உண்டு. இவை போக மேலும் மூன்று கார்களும் தயாரிக்கப்பட உள்ளன. அதில் ஒன்று ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்திற்கும், மற்றொன்று ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு தயாரிப்பு உதவிகளை செய்யும் Eon நிறுவனத்திற்கு வழங்கப்படும். மூன்றாவது காரானது ஆசிரமம் ஒன்றிற்காக ஏலத்தில் விடப்பட இருக்கிறது.

en.wikipedia.org
1997ஆம் ஆண்டு ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்திய டி பி5 கார் திருடு போனது. மிகுந்த சிரமங்களுக்கு பின்னர் அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த காரை மீண்டும் தயாரிக்க அந்த நிறுவனம் முயற்சித்ததாக கூறப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டே ஒரு தாராள சிகாமணி 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை முன்பணமாக கட்டி “எப்போ கார் வந்தாலும் ஒன்னு எனக்கு” என்று பதிவு செய்துவிட்டார். இதனையடுத்து இந்தக்காருக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள நினைத்தது. அதன் விளைவுதான் இந்த 28 கார்கள். கதாநாயகர்கள் மாறிவிட்டார்கள் காலம் மாறி விட்டது ஆனால் காரின் மீதான மோகம் மட்டும் இன்னும் வாழவே இல்லை.