வாகனங்களின் தேவை என்பது வேறு உயரத்திற்கு இப்போது வளர்ந்துவிட்டது. அதற்கு பிராதன காரணம் போக்குவரத்தின் அவசியம் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது தான். பல முக்கிய நகரங்கள் போக்குவரத்து துறைக்கென கணிசமான தொகையைச் செலவிடுகின்றன. தொழில்துறையோடு நேரடி தொடர்பு கொண்டதால் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்கினைக் கொண்டுள்ளன. இதன் முக்கியத்துவம் கருதி பல தனியார் நிறுவனங்கள் இந்தத் துறையில் கால்பதித்து வருகின்றன. இதுதான் தனியார் வாடகை கார்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் அடிகோலியது. ஆனால் இன்னும் பத்தாண்டுகளில் வாடகை போக்குவரத்து என்னும் துறை மிகப்பிரம்மாண்ட இடத்தை அடைவதற்கான சாத்தியங்கள் துல்லியமாக தெரிகின்றன. இதில் ஒரு பகுதியாகத்தான் வோலோகாப்டர் 2 எக்ஸ் ( Volocopter 2X) பார்க்கப்படுகிறது.

டிரோன் டெக்னாலஜி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள குட்டி ஹெலிகாப்டர் என இதைச்சொல்லலாம். முழுவதும் எலெக்ட்ரிக் பவர் மூலம் இது இயங்கும். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Volocopter GmbH என்னும் நிறுவனம் தான் இந்த வோலோகாப்டரைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டிற்குள் சிங்கப்பூர் வானத்தில் இந்த வோலோகாப்டர் என்னும் ஏர்டாக்சி வட்டமடிக்கும் என நம்பப்படுகிறது. சரி எப்படி என்னவெல்லாம் இருக்கிறது இதில் என பார்ப்போம்.

அதிகபட்சமாக 160 கிலோ வரை எடைதாங்கும் இந்த பறப்பானில் 30 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். சராசரியாக இரண்டு பேர் இதில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் தானியங்கி தொழில்நுட்பத்துடன் இயங்கும் இதனை தரையிலிருந்து விமானி ஒருவர் இயக்குவார். திசைவேகம், தரையிறங்குதல் போன்றவைகளை விமானி ஜாய் ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்துவார். அரிதாக விமானியுடனான கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டாலும் இந்த வோலோகாப்டர் தனித்தும் இயங்கும் வசதிகளைக் கொண்டிருக்கிறது.

Volocopter 2X ல் 18 ரோட்டார்கள் நெருக்கமாக இடம்பெற்றுள்ளன. இவை சிறிய ரக ஹெலிகாப்டர்கள் உருவாக்குவதற்கு நிகரான சப்தத்தை ஏற்படுத்தும். திறனிலும் அதே அளவை எதிர்பார்க்கலாம்.
மின்னணு இழையினால் ஆன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இதில் ஆபத்துகால உதவிக்காக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரிவர்ஸ் பாராசூட் ஒன்றும் இதில் இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே ஜெர்மனியில் இதற்கான பாதுகாப்பு உத்திரவாத பத்திரம் வழங்கப்பட்டு விட்டது. 2017 ல் துபாயில் ஆளில்லா வோலோகாப்டர்கள் வல்லுனர்கள் முன் பறக்கவிடப்பட்டு சோதனையை வெற்றிகரமாக முடித்தது அந்நிறுவனம்.

இந்த திட்டத்தின் விரிவாக்கப்பணிகள் சிங்கப்பூரில் நடைபெற்றுவருகின்றன. இதற்காக ஒப்புதலை சிங்கப்பூர் அரசின் போக்குவரத்துறை அமைச்சகம், பொருளாதார வளர்ச்சி ஆணையம் மற்றும் வான்வெளி போக்குவரத்து துறை ஆகியவை வழங்கிவிட்ட நிலையில் அடுத்த ஆண்டு முதல் அங்கே வோலோகாப்டரின் ஏர்டாக்சி புழக்கத்திற்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.