நிதி ஆயோக் – ன் தலைமையில் மொபிலிட்டி உச்சி மாநாடு கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறைகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் முறைகள் பற்றி விவாதங்கள் நடத்தப்பட்டன. அப்போது பேசிய ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் துணைத் தலைவர் யூய்சன் சங் (Euisun Chunk) பசுமைக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்தார்.

பசுமை கார்கள்
இயற்கையைப் பாதிக்காத வண்ணம் தயாரிக்கப்படும் கார்களே பசுமைக்கார்கள் ஆகும். மேலும், பசுமைக் கார்களின் வருகையால் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுக் காற்று குறையும். தற்போதைய காலகட்டத்தில் மாற்று எரிசக்தி மூலங்களை நோக்கி வாகனத்துறை வேகமாக முன்னேறி வருகிறது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பொதுப் போக்குவரத்துத்துறை விரிவாக்கம் ஆகியவை இத்திட்டத்தின் தேவையை அவசியமாக்கியுள்ளன.

மின்கலன்(Battery) மூலம் இயங்குபவை, மின்னாற்றலின் மூலம் இயங்குபவை மற்றும் ஹைபிரிட் (Hybrid) எனப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு ஹூண்டாய் நிறுவனம் 38 வகையான பசுமைக் கார்களைத் தயாரிக்க இருப்பதாக யூய்சன் சங் தெரிவித்தார்.
எப்போது விற்பனைக்கு?
இன்னும் ஏழு ஆண்டுகளில் பசுமைக்கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 38 பசுமைக்கார்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன. மேலும், “மாற்று எரி சக்தியினால் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடவும் தயாராக உள்ளோம்” எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் கார்

இத்திட்டத்தின் முதல் கட்டமாக Kona SUV காரினை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். மின்னாற்றலினால் இயங்கக் கூடிய இந்தக் கார் 150 Kw சக்தியுள்ள மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அதிக பட்சமாக மணிக்கு 167 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வல்லது. ஒரு முழு சார்ஜிங் மூலம் 482 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் விதத்தில் இக்காரானது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2019 – ஆம் ஆண்டில் Kona SUV இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.