ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் பட்டியலில் எட்டாம் இடம் வகிக்கிறது. 1995 ஆம் ஆண்டு இந்தியாவில் கால்பதித்த ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்(Honda Cars India Limited) நிறுவனம், இன்று இந்திய வாகனச் சந்தையில் அசைக்க முடியாத ஜாம்பவானாகத் திகழ்கிறது. ஹோண்டாவின் பல கார்கள் தரத்தினாலும், அட்டகாசமான வடிவமைப்பினாலும் ஏராளமான இந்தியர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்திருக்கின்றன.
இந்நிலையில், ஹோண்டா அமேஸ்(Honda Amaze)கார் கடந்த மே மாதம் ஹோண்டா நிறுவனத்தால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த மூன்று மாதத்தில் இதுவரை 30,000 கார்கள் விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஹோண்டாவின் விற்பனை வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

முதன்முதலில் ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட நாடு இந்தியா தான். இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அமேஸ் காரை வடிவமைத்திருந்தது ஹோண்டா நிறுவனம். காம்பேக்ட் செடான்(Compact Sedan) வகையைச் சேர்ந்த இந்தக் காரின் கவர்ச்சிகரமான புறத்தோற்றம், விசாலமான உட்புற வடிவமைப்பு, சிறந்த பாதுகாப்பு வசதிகள் போன்றவை வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மொத்தம் 12 வேரியண்ட்களில் அமேஸ் காரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவற்றுள், பெட்ரோல் சிவிடி மற்றும் டீசல் சிவிடி வேரியண்ட்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தவை ஆகும்.
புதிய மைல்கல்!!
ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனை வளர்ச்சி 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹோண்டாவின் இந்தியச் சந்தை வரலாற்றில் முதன் முறையாக, அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில் 30,000 கார்கள் விற்பனை என்ற சாதனையை ஹோண்டா அமேஸ் கார் தட்டிச்சென்றுள்ளது. வேறு எந்தக் காரும் இக்குறைந்த கால இடைவெளியில் இந்த அளவு விற்பனையைப் பெற்றதில்லை.

இந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூலை கால கட்டத்தில், ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்த மொத்தக் கார்களின் எண்ணிக்கை 62,579 ஆகும். கடந்த 2017 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனம் மொத்தம் 55,647 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதாவது 2018 ஏப்ரல்-ஜூலை காலத்திற்கான ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனை வளர்ச்சி 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அமேஸ் காருக்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பே இந்தச் சாதனை நிகழக் காரணம்.

ஹோண்டா அமேஸ் காருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பு இந்திய வாகனச் சந்தையின் போட்டியை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அமேஸ் காருக்கு பிரம்மாண்ட ஆதரவை வழங்கிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.