அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்டு இந்தியா (Ford india) நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் பல சிக்கன நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. புது ஆட்களை வேலையில் சேர்ப்பதை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. பழைய தொழிலாளர்களை பணிநீக்கமும் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 2020 – ஆம் ஆண்டு வரை புதிய கார்களை வெளியிடப் போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி ..
இந்திய வாகன வர்த்தகத்தில் ஒரு சதவிகிதம் ஃபோர்டு நிறுவனத்தைச் சேர்ந்ததாகும். கடந்த சில வருடங்களாக அந்நிறுவனத்தின் கார்கள் பெரிய அளவிற்கு விற்பனை ஆகவில்லை. 1995 – ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கிவரும் ஃபோர்டு நிறுவனம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. ஃபோர்டு இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் ஏற்றுமதியே அதிக லாபத்தைக் கொடுக்கிறது. வாகன மற்றும் உதிரி பாகங்களின் ஏற்றுமதியில் சென்ற ஆண்டு 22,393 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இது 2016 – 17 ஆம் ஆண்டில் நடந்த ஏற்றுமதியை விட அதிகம். அதே நேரத்தில் உள்நாட்டு வருமானத்தைப் பொறுத்தவரை அதன் வளர்ச்சி ஒரு சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
2020 வரை கார்களின் அறிமுகம் கிடையாது!!

வர்த்தகத்தில் நிலவும் மந்த நிலையினைப் போக்க பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது ஃபோர்டு இந்தியா நிறுவனம். தேவைக்கு அதிகமாக இருக்கும் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாகத் தெரிகிறது. ஆட்களை வேலைக்குச் சேர்ப்பதையும் நிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு 39% வரை நிர்வாகச் செலவுகளை குறைத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் உள்ள கிளைகளையும் மூட திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. பொருளாதார நெருக்கடியால் 2020 – ஆம் ஆண்டுவரை எந்தப் புதிய கார்களையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக மஹிந்திரா நிறுவனத்ததுடன் இணைந்து இயங்க உள்ளதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் இதே சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் இந்தியாவிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,” பொருளாதார முன்னேற்றத்திற்கான எல்லா வழிகளையும் திறம்பட மேற்கொண்டு வருகிறோம். மேலும், வேலையிலிருக்கும் ஒவ்வொருவரின் திறன் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டுள்ளோம் என்றார்.