குற்றங்களை அதிவிரைவாகத் தடுக்கவும், பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்கவும் துபாய் நகர காவல்துறையினருக்கு பறக்கும் பைக்குகளை அந்த அரசு அளிக்க இருக்கிறது. ரஷியாவைச் சேர்ந்த Hoversurf நிறுவனம் துபாய் அரசிற்கு பறக்கும் பைக்குகளைத் தயாரித்து விற்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. காவல்துறையினருக்கு பைக்கினை ஓட்டி பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாகனத்தை முன்கூட்டியே கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். இதனால் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் பறப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் பைக்
முழுவதும் பேட்டரியால் இயங்கும் விதத்தில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. மேலும் இதனால் 272 கிலோவரை எடையினைத் தாங்க முடியும்.
கடந்த 2017 – ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனத்தை வாங்கும் பொருட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் Hoversurf நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஒரு வாகனத்தை 1,50,000 அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஐக்கிய அமீரகம் ஒத்துக்கொண்டது.
பறக்கப் பயிற்சி
eVTOL (electric vertical take-off and landing) என்னும் தொழில்நுட்பத்தின் படி இயங்கும் S3 2019 ரக வாகனம் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாக அரசிடம் ஒப்படைக்கப்படும். இதனை ஓட்டுவதற்கு தனியாக எவ்வித ஓட்டுனர் உரிமையையும் பெறத் தேவையில்லை. இயக்குவதற்கும் எளிதாக இருப்பதனால் அவசர காலங்களில் துரிதமாகச் செயல்படலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் காலங்களில் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய பறக்கும் கார்களைத் தயாரிக்க இருப்பதாக Hoversurf நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டுற்குள் 30 முதல் 40 வாகனங்களை நிறுவனம் அளிக்க இருக்கிறது. இதற்காக மூன்று வாகனத் தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்துள்ளது Hoversurf நிறுவனம்.