சுங்கச் சாவடிகளில் ஏற்படும் கால விரயத்தைக் குறைக்கப் புதிய திட்டம் ஒன்றினை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்னும் நான்கு மாத காலத்தில் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஃபாஸ்ட்டாக்(Fast Tag) என்னும் இம்முறை RFID (Radio Frequency Identification) தொழில்நுட்பத்தின் வாயிலாக இயங்குகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் கார் நுழையும் போதே RFID மூலம் கட்டணமானது செலுத்தப்படும். அதற்குரிய குறுஞ்செய்தியும் அலைபேசிக்கு வந்து சேரும். இதனால் பணம் செலுத்தக் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஃபாஸ்ட்டாக் எப்படி இயங்குகிறது?
RFID அட்டை, காரின் விண்ட்ஷீல்டில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் வெளிப்படும் ரேடியோ அலைக்கற்றை சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்போரின் இணையத்தோடு இணைக்கப்படும். இதனிடையே காரிலிருந்து வெளிப்படும் அலைக்கற்றையினுள் பொதிந்திருக்கும் வங்கித் தகவல்களை RFID ரீடர் பெற்று, வசூலிப்பவரின் இணையத்திற்கு அனுப்பிவைக்கும். இதன் மூலம் கட்டணமானது வசூலிக்கப்படும்.

வங்கிகளின் மூலமாக ஃபாஸ்ட்டாக் – ல் பணத்தைக் கட்டிவிட்டால் போதுமானது. பணத்தை RFID அட்டை முலமாக வசூலிப்பாளர் பெற்றுக் கொள்வார். தற்போதைய நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, ஃபெடரல் வங்கிகளில் மட்டுமே ஃபாஸ்ட்டாக் – ல் பணம் செலுத்தும் வசதி உள்ளது. இதற்கெனப் பிரத்யேகமாக எல்லா சுங்கச் சாவடிகளிலும் CSC (Common Services Center) என்னும் அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. அதன் மூலமாகவே மக்கள் ஃபாஸ்ட்டாக் வசதியைப் பெறமுடியும்.
பாதுகாப்பானதா?
ஃபாஸ்ட்டாக் வசதியைப் பெற விண்ணப்பிக்கும் போதே காரின் பதிவுச் சான்றிதழ் (RC), உரிமையாளரின் புகைப்படம் போன்றவை வங்கிகளால் பதிவு செய்யப்படுகின்றன. இது தவிர்த்து விண்ணப்பிக்கும் நபர் தங்களது, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், PAN கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை இந்தியாவில் சுமார் 20 % மக்கள் இம்முறையினை உபயோகிக்கிறார்கள். மின்னணுப் பணப்பரிமாற்றத்தினைப் போன்றே இதுவும் வரும் காலங்களில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

பயன்கள்
- சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கையில் பணத்தை எடுத்துச்செல்ல வேண்டாம்.
- எரிபொருள் வீணாகாது.
இத்திட்டத்தினை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காகத் தேசிய நெடுஞ்சாலைத் துறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation) உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவிக்கையில், “இத்திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, இன்னும் நான்கு மாதங்களில் இத்திட்டம் முழுமை பெறும்” என்றார்.