தெற்காசியப் பிராந்தியத்தில் உற்பத்தி, வளர்ச்சி, மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியா – சீனா இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. அமேரிக்காவில் அதிபர் மாற்றத்திற்குப் பின்னர் சீனப் பொருட்களுக்கு 25 % வரை வரி விதிக்கப்பட்டது. இதனால் சீனா பொருளாதார சிக்கல்களைச் சந்தித்தது. இந்நிலையில் ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை சீனாவில் நிறுவி வருகின்றனர். இதனால் வருங்காலத்தில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி, பேட்டரி, உதிரி பாகங்கள் ஆகியவைகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் சீனாவையே நம்பி இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட இருக்கிறது.
எலெக்ட்ரிக் கார்
உலகின் முன்னணி நிறுவனங்களான BMW, ரெனால்ட், மெர்சீடிஸ் பென்ஸ், வோக்ஸ்வேகன் ஆகியவை தங்களது எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களை ஐரோப்பாவில் நடத்தி வந்தது. தற்போது இவை அனைத்துமே ஐரோப்பாவிலிருந்து வெளியேறி சீனாவில் தங்களது எலக்ட்ரிக் கார் தொழிற்சாலைகளைத் திறக்க உள்ளன. அமெரிக்காவின் TESLA நிறுவனமும் சீனாவில் தங்களது கிளையைத் தொடங்க உள்ளது. இந்தப் புதிய கிளையில் வருடத்திற்கு 5 லட்சம் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தனைக்கும் அவர்களது அமெரிக்கக் கிளை 1 லட்சம் கார்களைத்தான் தயாரிக்கிறது.

பல எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள் சீனாவிற்குச் செல்ல முக்கியக் காரணம் சீனா மிகப்பெரிய வாகனச் சந்தையைக் கொண்டிருப்பதுதான். எலெக்ட்ரிக் கார் விற்பனை சீனாவில் அதிகம். அங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்துமாறு அந்த அரசே வலியுறுத்திவருகிறது. அதோடு இறக்குமதி வரி குறைவு. ஐரோப்பிய நாடுகளில் புதிய தொழிற்சாலை நிறுவ மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதும் மற்றுமொரு காரணம். அங்கேயே உருவாக்கி விற்பனையையும் அங்கேயே மேற்கொள்ளுவதால் இயல்பை விட 40% அதிக லாபத்தைப் பெறலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
பேட்டரி தொழில்நுட்பம்
இன்று வெளிவரும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களில் லித்தியம் – அயான் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. சீனா இதற்கும் ஓர் வணிக ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது உலகின் முன்னணி பேட்டரி நிறுவனங்களைத் தங்களது நாட்டில் கிளை தொடங்க அழைப்பு விடுத்துள்ளது சீன அரசு. அந்நிறுவனங்களுக்குப் பல சலுகைகளையும் அறிவித்திருக்கிறது. இதன் அடிப்படையில் நெதர்லாந்தைச் சேர்ந்த Lithium Werks நிறுவனம் 180 கோடி அமெரிக்க டாலர் செலவில் சீனாவின் ஷாங்காய் நகரத்திற்கு வெளியே தங்களது புதிய தொழிற்சாலையைக் கட்டி வருகிறது. அமெரிக்க நிறுவனங்களும் சீனாவில் தங்களது கிளைகளைத் துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவிற்குப் பின்னடைவா?
பாரிஸில் நடைபெற்ற உலக வெப்பமயமாதல் மாநாட்டில் உலகின் சராசரி வெப்பநிலையை அடுத்த 100 ஆண்டுகளில் 2 டிகிரி அளவிற்குள் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கவேண்டும் எனத் தீர்மானம் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே பல நாடுகள் பெட்ரோல் டீசல் உபயோகத்தைக் கட்டுப்படுத்த பேட்டரிக் கார்களுக்கு மாறிவருகின்றன. இதனைத் தனது யுக்தியாக சீனா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் வர்த்தகம் நடைபெறுவது வாகனங்கள் தான். இதில் இந்தியா கவனம் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இந்தக்காலத்தில் இத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்வதே சிறந்தது.