காரில் வெகு தூரம் நீங்கள் பயணிக்க இருக்கிறீர்கள் என்றால் உங்கள் பயணத்தைத் தொடங்குவதன் முன்னர் சில விஷயங்களைச் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் நீண்ட தூரப்பயணத்தில் ஏற்படும் சிறிய தவறுகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்படி உங்கள் காரினில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 விஷயங்களை கீழே காணலாம்.
1. விண்ட் ஷீல்ட் வைப்பர்கள்
தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை, கோடைமழை என மூன்று வித மழை தமிழகத்தில் பெய்வதுண்டு. மழை பெய்தாலும், பெய்யாவிடுனும், தூசி முதலியற்றை நீக்க விண்ட் ஷீல்ட் வைப்பர்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே விண்ட் ஷீல்டை பயணத்திற்கு முன் சரி பார்த்துக்கொள்வது சிறந்தது. சில நேரங்களில் கார் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் வைப்பர் காய்ந்து இறுகிப்போய் இருக்கும். மீண்டும் அவற்றை பயன்படுத்தும்போது கண்ணாடியில் கோடுகளை உருவாக்கி அதன் ஊடுருவும் திறனையும் குறைக்கலாம்.

ஆகவே வைப்பர்களை பரிசோதித்து வேண்டுமென்றால் அவற்றை புதுப்பித்துக் கொள்ளுதல் பாதுகாப்பானது. மேலும் இரவு நேரங்களில் பனி பெய்யும் என்பதால் முடிந்தவரை பகலில் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
2. டயர்களில் உள்ள காற்றழுத்தம்
மேடுபள்ளமான சாலைகளில் பயணிக்கும்போது டயர்களில் உள்ள காற்றழுத்தம் சீராக இல்லையென்றால் சில நேரங்களில் வெடித்துவிடும். சாலைகளில் கிடக்கும் கற்கள் டயர்களை அழுத்துவதன் மூலம் வீக்கங்கள் ஏற்படுவதுண்டு. காரின் தொடர் இயக்கத்தில் டயரின் உள்ளே உள்ள காற்று விரிவடைந்து அந்த வீக்கங்களின் வழியே வெளியேறுவதற்காக அதன்மீது மோதும். இதனால் வீக்கம் பெரிதடைந்து டயர் வெடிப்புக்கு உள்ளாகலாம். எனவே வீக்கங்கள் மற்றும் காற்றழுத்தங்களைக் கண்காணிப்பது முக்கியமான ஒன்றாகும்.

3. விளக்குகள் மற்றும் ஒலிப்பெருக்கி
விளக்குகளைப் பொறுத்தவரை ஹெட்லைட், டைல் லைட், இண்டிகேட்டர் போன்றவற்றை முன்கூட்டியே பரிசோதித்து விடுங்கள். சில நேரங்களில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்போது எலிகள் வயர்களை கடித்துவிடும். இதனால் விளக்குகள், ஒலிப்பெருக்கி ஆகியவை பழுதடைந்துவிடலாம். பயணத்திற்கு முன்பாக வயரிங்குகள், ஒலிப்பெருக்கியின் சத்தம் மற்றும் விளக்குகளின் எரியும் திறனை பரிசோதித்துவிடுங்கள்.

4. காற்று வடிகட்டி
Air Filter எனப்படும் காற்று வடிகட்டி பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும். என்ஜினில் ஆற்றல் உற்பத்திக்காக காற்று கொண்டு செல்லப்படும் இன்டேக்கில் இது வைக்கப்பட்டிருக்கும். தூசுக்களால் அவை பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை மாற்றிவிடுவது சிறந்தது. இல்லையெனில் துகள்கள் எஞ்சினுள் சென்றுவிடும். சில நேரங்களில் கரித்துகள்கள் உள்ளே செல்வதுண்டு. வலுவான ஹைடிரோ கார்பன்கள் அவை. இதனால் என்ஜினின் தரம் குறையலாம்.

5. எஞ்சின் பெல்ட்
என்ஜினிற்கு பக்கவாட்டில் இருக்கும் பெல்ட்டில் பளபளப்பான பகுதிகள் இருக்கிறதா என்று பார்க்கவும். மேலும் கைகளால் அழுத்தி டென்ஷனை சரிபார்க்கவும். பளபளப்பான பகுதிகள் தேய்வடைந்ததால் வருபவை. இவை மிகவும் ஆபத்தானவை. பெல்ட்டின் பட்டைகளில் விரிசல்கள் இல்லாததையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. தேவையென்றால் மாற்றிவிடவும். ஏனெனில் நீண்ட தூரப் பயணத்தின்போது பெல்ட்டில் அதிகமான வெப்பம் பரவும். இதனால் அவை துண்டித்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

6. ஆயிலின் அளவு
என்ஜினின் சீரான இயக்கத்திற்கு ஆயில் அவசியம். பவர் ஸ்ட்ரோக்கின் பொது வெளிப்படும் வெப்பத்தில் இருந்து என்ஜினின் பாகங்களைக் காப்பதற்கு ஆயிலின் தேவை அவசியம். ஆயிலின் அளவு குறைவது NOX வெளியீட்டை அதிகரிக்கும். காற்று மாசுபாட்டுக்கும் வழிவகுக்கும். என்ஜினுக்கு அருகிலேயே ஆயில் டிப் ஸ்டிக் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை வெளியே எடுத்து உள்பாகத்தினை துணியினால் துடைத்துவிடவேண்டும். பின்னர் மறுபடி அதனைப் பொருத்தி வெளியே எடுக்க வேண்டும். இப்போது அதில் இருக்கும் ஆயிலின் அளவை அதிலுள்ள அளவுகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். உள்ளே இருக்கும் ஆயில் வெளிர் மஞ்சளாகவோ, வெளிர் பச்சை நிறத்திலோ தான் இருக்க வேண்டும். கருப்பாக இருப்பின் உடனடியாக அதனை மாற்றிவிடுவது நல்லது.

7. பேட்டரி முனைகள்
பேட்டரிகளைப் பொறுத்தவரை அதன் முனைகளை துருப்பிடித்திருக்கிறதா ? என்று பார்க்க வேண்டும். விண்ட் ஷீல்ட் வைப்பர், விளக்குகள், ஒலிப்பெருக்கி போன்ற அனைத்து மின்சாதனங்களுக்கும் பேட்டரியின் பாதுகாப்பு அவசியம். துருக்கள் முனைகளில் தென்பட்டால் ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை அதைச் சுற்றிப் போடவும். சிறிது நேரம் கழித்து பிரஷ் மூலம் தேய்த்து துருக்களை நீக்கிவிடலாம். பிரஷை நீரால் நனைத்து பயன்படுத்துவது இன்னும் துரிதகதியில் துருக்களை நீக்கிவிடும். கடைசியாக ஒருமுறை தூய நீரால் அந்த இடத்தை துடைத்துவிட வேண்டும்.

8. பிரேக் பேட்
ஒவ்வொரு 50,000 கிலோமீட்டருக்கு ஒரு முறை பிரேக் பேடை மாற்றிவிட வேண்டும். கார் தொடர்ந்து இயக்கத்திலே இருக்கும் பட்சத்தில் காலிபர்கள் சூடாகி பிரேக் சரிவர இயங்காமல் போகலாம். அந்த நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பிரேக்கை அழுத்துவதன் மூலமே வண்டியை நிறுத்த முடியும். இவற்றை தவிர்ப்பதற்கு பயணத்தின் இடையே சிறிது நேரம் வண்டிக்கு ஓய்வளிக்கலாம். அப்போது வெயில் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி வைக்க வேண்டும். இப்பிரச்சனை தொடர்ந்தால் புது பேட்கள் மாற்றுவதே சிறந்தது.

9. தூய்மை மற்றும் பாதுகாப்பு
காரின் உட்புறத்தில் மூலை முடுக்குளிலெல்லாம் தூசுகள் பரவி இருக்கும். கார் வேகமாக பயணிக்கும் போது காற்றின் வேகத்தினால் அவை வெளிக்கிளம்பி காருக்குள்ளே சுற்றிவரத் துவங்கும். இது தும்மல் அலர்ஜி போன்றவற்றை சிலருக்கு அளிக்கலாம். எனவே பயணத்திற்கு முன்பாகவே கம்ப்ரஸர் மூலமாக அனைத்து தூசுக்களையும் வெளியேற்றி விடுவது நல்லது. இதனால் நல்ல புத்துணர்ச்சியினை அடைய முடியும். காரின் வெளிப்புறத்தையும் கழுவி விடுவது நல்லது. அதே போல் காரின் டேஷ் போர்டில் ஏதும் எச்சரிக்கைகள் காட்டப்படுகிறதா ? சீட்பெல்ட் சரிவர வேலை செய்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

10. ஆவணங்கள் மற்றும் மருத்துவ முதலுதவி சாதனங்கள்

வாகனத்திற்குரிய அனைத்து சான்றிதழ்களையும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும். கருவிகளை எடுத்துச் செல்வதும் சிறந்தது. வாகனத்தில் ஏற்படும் சிறிய சிறிய குறைபாடுகளுக்குத் தகுந்தபடி கருவிகளை காரினில் எப்போதும் வைத்திருப்பது நல்லது. அடுத்தபடியாக மருத்துவ சாதனங்கள் எப்போதும் வாகனத்தினுள் இருக்க வேண்டும். மேலும் இவை நம் தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள். இதனால் வழியில் ஏற்படும் சிற்சில தடங்கல்களை நாம் யாருடைய உதவியும் இன்றி நாமே சமாளித்துக்கொள்ள முடியும்.