இப்போதெல்லாம் பெட்ரோல் பங்குகளில் காற்று பிடிக்கும் போது சாதாரண காற்றா? நைட்ரஜனா? என்று கேட்பதை அறிவோம். வாகனங்களுக்கு நைட்ரஜனை நிரப்பலாமா என்று நாமும் யோசித்திருப்போம். சாதாரண காற்றுக்கும் நைட்ரஜனுக்கும் அப்படி என்ன வித்தியாசம்? நைட்ரஜனை நிரப்பினால் என்ன ஆகும் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க..
நீண்ட தூரம் வாகனங்களில் செல்லும் போது பொதுவாக டயர்கள் சூடாவதை நாம் கவனித்திருப்போம். டயர்களில் சாதாரண காற்றை (78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன், 1% நீர் மற்றும் இதர வாயுக்கள்) நிரப்பியிருந்தால் அந்த காற்று இந்த வெப்பத்தினால் விரிவடைந்து காற்றழுத்தம் குறைகிறது. இவ்வாறு காற்று விரிவடைவதால் டியூப்களில் உள்ள நைலான் இழைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் டயர்களும் விரைவில் பாதிக்கப்படும். மேலும் வெடிக்கவும் செய்யும்.

ஆனால் நைட்ரஜனை நிரப்பும் போது இந்த பாதிப்பு வெகுவாக குறைகிறது. ஏனெனில் நைட்ரஜன் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மை உடையது. வெப்பத்தை ஈர்க்காது. இதனால் உராய்வினால் டயர் சூடாகும் போது டியூபின் உள்ளே இருக்கும் நைட்ரஜன் வாயுவில் பெரிய மாற்றம் ஏற்படுவது இல்லை. இதனால் டியூப் பாதிப்படைவது தடுக்கப்படுகிறது. எனவே டயர் அடிக்கடி பழுதாவதும் பஞ்சர் ஆவதும் குறைகிறது.
மேலும் நைட்ரஜன் நிரப்புவதால் டயரில் சீரான காற்றழுத்தம் பராமரிக்கப்படுவதால் வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும். மைலேஜும் சிறப்பாக இருக்கும். எரிபொருளும் சேமிக்கப்படுகிறது.

சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு மிகவும் நுண்ணியது.எனவே டியூபில் உள்ள மெல்லிய இடைவெளி வழியே தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனால் அடிக்கடி நீங்கள் காற்று பிடிக்க நேரிடும். ஆனால் நைட்ரஜன் மூலக்கூறு ஆக்ஸிஜனை விட பெரியது எனவே டியூப் வழியே எளிதாக கசியாது. இதனால் நீங்கள் அடிக்கடி காற்று பிடிக்க தேவையில்லை.
சாதாரண காற்றில் நம்மால் உணர முடியாத அளவிற்கு ஈரப்பதம் இருக்கும். மேலும் ஆக்ஸிஜனின் ஆக்சிடேஷன் போன்ற விளைவுகளால் டியூபை ஒட்டி உள்ள உலோகப் பகுதிகள் துருப்பிடிக்கும். ஆனால் தூய நைட்ரஜனில் ஈரப்பதம் இருக்காது. எனவே இந்த பாதிப்பும் ஏற்படாது.
ஒருவேளை வேறு காரணங்களால் டயர் வெடித்தால்கூட நைட்ரஜன் நிரப்பி இருந்தால் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.இந்த காரணங்களால் தான் விமானம் மற்றும் பந்தய கார்களின் டயர்களில் எப்போதும் நைட்ரஜன் நிரப்பப்படுகிறது .
அதிலும் நீண்ட தூரம் செல்ல நாம் பயன்படுத்தும் கார்களுக்கு நைட்ரஜன் ஏற்றது. இதன் முழு பயனையும் பெற உங்கள் வாகனத்தில் முதலில் பழைய காற்றை முழுவதும் வெளியேற்றிவிட்டு பிறகு நைட்ரஜனை நிரப்ப வேண்டும்.
இதன் ஒரே குறைபாடு என்னவென்றால் இதை பெட்ரோல் பங்குகள் இலவசமாக அளிப்பதில்லை. எப்படியும் டிப்ஸ் என்று சாதாரண காற்றுக்கும் பணம் தரத்தான் போகிறோம். அதற்கு பதில் பாதுகாப்பை கருதி கொஞ்சம் செலவு செய்து நைட்ரஜன் நிரப்பலாம்.