வேர்த்து ஒழுகும் மத்தியான வேளைகளில் பெட்ரோல் பங்கின் வாசலில் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது “பேசாம சைக்கிள் வாங்கிடலாம்” எனத் தோன்றியிருக்கிறதா? நாளுக்கு ஒரு விலை, அதற்கும் கூட்டம், இதனால் பெருகிப்போன மாசுபாடு, அதற்காகவே வரும் சுவாச நோய்கள், மறுபடியும் செலவு மருத்துவம் என்னும் பெயரில்…. இதற்கெல்லாம் நெதர்லாந்தில் வேலையில்லை. நம்மைப்போன்று அவர்கள் இல்லை. நம்மவர்களைப்போல் அங்கே அரசு அதிகாரிகளும் இல்லை. அதனால்தான் குடிமக்களுக்கு சைக்கிள் வழங்க 2731 கோடிகளில் பிரம்மாண்டத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது அந்த அரசு.

டச்சும் சைக்கிளும்
பிரான்ஸ், நார்வே, கனடா போன்ற வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் போக்குவரத்திற்கு மக்கள் பெரும்பாலும் சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர். நெதர்லாந்திலும் இதே நிலைமைதான். 1970 ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் ஏற்பட்ட எண்ணெய்க்கான போரில் பல நாடுகள் ஸ்தம்பித்துப்போயின. சிமிழி விளக்கிற்கு ஊற்றக்கூட மண்ணெண்ணெய் இல்லாமல் இருண்டுபோன நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று.
மாற்று எரிபொருள், பேட்டரி, சூரியன், ப்ளூட்டோ என்று மேற்கத்திய நாடுகள் பரபரத்துக் கொண்டிருந்தபோது ஜப்பானியர்களும், நெதர்லந்துக்காரர்களும் ரொம்ப கூலாக சைக்கிள் பயணத்திற்கு மாறினார்கள். அன்றுமுதல் இன்றுவரை அங்கே அலுவலகம், பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் மக்களின் போக்குவரத்திற்கு உதவுவது சைக்கிள்கள் தான். இத்தனைக்கும் வீட்டிலிருந்து சராசரியாக 15 கிலோமீட்டர் தூரத்தில் அலுவலகங்கள் அமைந்திருக்கும். பள்ளி, கல்லூரி ஏன் ஒரு முட்டை வாங்க வேண்டுமென்றாலும் கிலோமீட்டர் கணக்கில் பயணிக்கவேண்டும். ஆனாலும் மக்களுக்கு சைக்கிளின் மீதுள்ள ஈடுபாடு குறையவில்லை.

அரசாங்கம்
நெதர்லாந்து அரசு சைக்கிள் உற்பத்திக்கென 2731 கோடியை ஒதுக்கியுள்ளது. இதனால் இரண்டு லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்று அந்நாட்டு போக்குவரத்துறை தெரிவித்திருக்கிறது. சைக்கிள் உபயோகிப்பாளர்கள் சிரமமின்றி தங்களது பயணங்களை மேற்கொள்ள 15 சாலைகள் போடப்படும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 புதிய வாகனக் காப்பகங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
நெதர்லாந்தின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தங்கள் பிரதான போக்குவரத்திற்கு சைக்கிளேயே பயன்படுத்துகின்றனர். மக்களுக்கு சைக்கிள் வாங்குவதற்கு பல உதவித்தொகை மற்றும் லோன் ஆகியவை அந்த நாட்டின் சார்பில் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் பலவும் இந்த வசதியினை தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கின்றன.
ஏன் சைக்கிள்?
காரணம் மிகவும் எளிமையானது. தங்களிடம் இல்லாத பெட்ரோல் டீசலை வெளிநாடுகளில் எதிர்பார்த்து நிற்கவேண்டாம். அவற்றிற்கு ஆகிற செலவு மிச்சம். மற்றொன்று உடல்நலம். தம் மக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் பொருட்டு இம்மாதிரியான திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. யோசித்துப்பாருங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதி, அதனை சுத்திகரிக்கும் செலவு, வினியோகம், அதனை உபயோகிப்பதால் மக்களுக்கு வரும் ஆபத்துகளில் இருந்து மக்களைக் காப்பதற்காக மருத்துவத்துறையில் செய்ய வேண்டிய முதலீடு, காற்று, நீர், நில மாசுபாடு, அவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்ள தேவைப்படும் பணம் ஆகிய அனைத்தையும் நெதர்லாந்து அரசு சைக்கிள் என்னும் ஒன்றை கேடயம் கொண்டு தடுத்துவிடுகிறது. தொலைநோக்குத் திட்டம் என்று வாய்கிழிய பேசும் நாடுகள் எல்லாம் நெதர்லாந்திடம் பிச்சை கேட்கவேண்டும்.
