இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல சொகுசுக்கார் நிறுவனமான ஆஸ்டன் மார்டின் (Aston Martin) தனது முதல் மற்றும் கடைசி எலெக்ட்ரிக் காரை வெளியிட்டிருக்கிறது. முதல் மற்றும் கடைசியா? உங்களுடைய கேள்வி காதில் விழுகிறது. ஆனால் உண்மை அதுதான். சமீபத்தில் நடந்த ஷாங்காய் வாகன கண்காட்சியில் ஆஸ்டன் மார்டினின் ரேபிடே இ (Rapide E ) எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

அசத்தலான ஏரோடைனமிக்ஸ், இன்டீரியர் டிசைன் என பார்வையாளர்களை கிறங்கடித்த Rapide E மொத்தமே 155 கார்கள் தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தயரிப்புப் பணியை லகோண்டா நிறுவனத்தின் மூலம் ஆஸ்டன் மார்டின் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் செடான் மற்றும் SUV ரக கார்கள் ஏற்கனவே லகோண்டா நிறுவனத்தின் பெயரிலேயே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்
மணிக்கு அதிகபட்சமாக 155 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்தக்காரில் 602 HP பவருள்ள இரண்டு பேட்டரிகள் உள்ளன. 0 – 60 மைல் வேகத்தை வெறும் நான்கு நொடிகளில் எட்டக்கூடியது இந்த Rapide E . முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 200 மைல் வரை இந்தக்காரில் பயணிக்கலாம். இதே காரில் பெட்ரோல் வெர்ஷனும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
இயக்கத்திற்குத் தேவையான பேட்டரிகள் காரின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. முந்தைய வெர்ஷனில் அனலாகாக இருந்த ஸ்க்ரீன் தற்போது டிஜிட்டலாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஏரோடைனமிக்ஸ்
இந்தக்கார் தயாரிப்பிற்கு முன்னே வாடிக்கையாளர்களின் விருப்பங்களை ஆஸ்டன் மார்டின் நிறுவனம் கேட்டுள்ளது. அனைவரும் V12 என்ஜினில் இருந்து வெளிவரும் சத்தத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். போலவே அதன் பவரையும். ஆகவே இந்நிறுவனத்தின் பொறியியலாளர்கள் ஏற்கனவே வெளிவந்த Rapide S காரினைப் போன்று உருவாக்க திட்டமிட்டுள்ளனர். Rapide S காரனது முழுவதும் CNG (Compressed Natural Gas) ஆல் இயங்குகிறது.

நான்கு கதவுகள் இதில் இருக்கிறது. பெட்ரோலிய கார்களை விட எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவைப்படும் காற்றின் அளவு குறைவு என்பதால் காரின் அடிப்பக்கத்தில் சில மாறுதல்களை பொறியியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். உராய்வின் காரணமாக காரின் இயக்கம் பாதிக்காதவாறு கிரவுண்ட் கிளியரன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரி, என்ன விலை?
Rapide E காருக்கான முன்பதிவு துவங்கிவிட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக்காரின் விலை 250,000 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் Rapide S காரின் விலை 200,000 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.