ஏ.கே.47 (AK 47) ரக துப்பாக்கிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். குறிப்பாக தமிழ்ப் படங்களில் வரும் வில்லன்களின் மூன்றாவது கை அதுதான். இப்படிப் புகழ்பெற்ற துப்பாக்கியை முதன்முதலில் தயாரித்தது ரஷியாவைச் சேர்ந்த கலாஷ்னிக்கோவ் (Kalashnikov) நிறுவனம் தான். தற்போது மின்னாற்றலினால் இயங்கக்கூடிய கார்(Electric car) ஒன்றை தயாரித்திருக்கிறது அந்நிறுவனம். பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா (Tesla) வுடன் போட்டிபோடும் விதமாக கலாஷ்னிகோவ் தங்களது காரைக் களமிறக்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆண்டு நடந்த ராணுவக் கண்காட்சியில் இந்த மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.

1970 – ஆம் ஆண்டு வெளிவந்த ஹேட்ச்பேக் காரான ஐ இசட்.எச் 2125 கோம்பி (Izh 2125 Combi) யின் வடிவத்தினைப் போன்றே இதுவும் காம்பேக்ட்டாக(Compact) வெளிவந்திருக்கிறது. கோம்பி என்றால் ரஷிய மொழியில் காம்பெக்ட் என்று அர்த்தமாம். அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காரைப்பற்றிய முழுத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மணிக்கு 90 கிலோவாட் சக்தியை அளிக்கக்கூடிய மின்கலன் பொருத்தப்பட்டுள்ளது இதன் விசேஷ அம்சமாகும். இதன் க்ரூஸிங் ரேஞ் (Cruising Range) 350 கிலோமீட்டர் ஆக இருக்கும் எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cv 1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார் 0 – 62 mph ஐ 6 நொடிகளில் கடக்கவல்லது. இது குறித்து கலாஷ்னிகோவ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,” தற்போதைய நிலவரத்தின் படி எங்கள் காரின் தொல்நுட்ப வசதிகள் டெஸ்லா நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

விற்பனையைப் பற்றியோ, காரின் விலையைப் பற்றியோ இன்னும் எந்தத் தகவலும் அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு காலத்தில் திரும்பிப் பார்க்க வைத்த நிறுவனம் இல்லையா? அதன் தாக்கம் வெளியாகவிருக்கும் புதிய காரின் மீதும் நிச்சயம் இருக்கும் என வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

மிகக் குறைந்த தயாரிப்புச் செலவு, எந்தக் கடினமான சூழலிலும் சிறப்பாக இயங்கக்கூடிய தன்மை இவையெல்லாம் தான் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயுதமாக A.K 47 ஐ மாற்றியது. கார் தயாரிப்பிலும் இத்தகைய தொழில்நுட்பங்களை அந்நிறுவனம் பயன்படுத்தும் பட்சத்தில் உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் கம்பெனிகளுடன் தாராளமாய் போட்டிபோடும் என நம்பலாம்.