போக்குவரத்துச் சுமைகளைக் குறைக்கும் விதத்தில் தமிழகத்தில் அடுத்த மாதம் 450 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பழைய, பாதுகாப்பில்லாத பேருந்துகளுக்குப் பதிலாக இப்புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குளிரூட்டப்பட்ட, கழிவறை வசதி கொண்ட நவீனமான பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.

பின்தங்கிய தமிழகம்
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக அளவு பழைய பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அரசிற்குப் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளா, கர்நாடகாவில் நவீனப் பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்திய அளவில் சிறந்த பேருந்து சேவைகளை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்துத்துறையில் இருக்கும் கடனால் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படுவதாக அரசு தொடந்து அறிவித்து வந்தது. இந்நிலையில் மாநில அரசின் இப்புதிய அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
100 மின்சாரப் பேருந்துகள்
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மின்சாரத்தினால் இயங்கக்கூடிய 100 பேருந்துகளை அறிமுகப்படுத்த இருப்பதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் வாகனப் பயன்பாட்டினால் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாகவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த C – 40 நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் வாகனங்களினால் வெளியேறும் கரியமில வாயுவை குறைக்கப் பல நாடுகளும் முயன்று வருகின்றன. உலக அளவில் இதுவரை 25 பெரிய நகரங்கள் வாகனத்தினால் ஏற்படும் காற்று மாசுபாட்டினை முற்றிலுமாகக் குறைத்திருக்கின்றன. எதிர்காலத்தில் சென்னையையும் அந்த பட்டியலில் இணைக்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடி மதிப்புள்ள பேருந்து
மின்கலன்கள் மூலம் இயங்கக்கூடிய இப்பேருந்துகள் தலா 2 கோடி செலவில் வாங்கப்படுகிறது. முதற்கட்டமாக வாங்கப்படும் 100 பேருந்துகளில் 80 பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட இருக்கின்றன. 20 பேருந்துகள் கோவையில் இயங்க உள்ளது. இப்பேருந்துகளை சார்ஜ் செய்ய புதிய சார்ஜிங் மையங்களையும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் மாசுபாட்டைக் குறைப்பது எதிர்காலத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். தமிழகம் முழுவதும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதன் மூலம் உலகின் முதல் காற்றுமாசுபாடில்லா மாநிலமாக தமிழகம் மாறும்.