தமிழகத்தின் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், தெறிக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர் திரு.சுஜாதா அவர்களுடைய நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது படைப்புகள், இலக்கிய களத்திற்கு ஒன்றும் செய்யவில்லை, அவர் ஒரு வணிக எழுத்தாளர் என்று ஏளனம் செய்யும் ஆயிரம் நபர்களை நீங்கள் சந்தித்திருக்கலாம். அவர்களுடைய கோபமெல்லாம் இலக்கியம் பற்றியதல்ல. சுஜாதாவின் புத்தக விற்பனை பற்றியதே.

சிறுகதைகள்
1953 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி பத்திரிக்கையில் சுஜாதாவின் முதல் கதை வெளியானது. அதன்பின்னர் தமிழகத்தின் பல்வேறு முன்னணி இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவரத்துவங்கின. அவரது சிறுகதைத் தொகுப்பான ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள் ஆகியவை பிரசித்தி பெற்றவை. பொதுவாகவே நகைச்சுவை உணர்வு இழையோடும் சுஜாதாவின் கதைகளில் ஆங்காங்கே வெடிச்சிரிப்புகள் நிச்சயம் உங்களுக்காக காத்திருக்கும். இந்த காமெடி கலாட்டக்களுக்கு மத்தியில் எல்டராடோ, அனாமிகா, நகரம் போன்ற கதைகள் நம்மை உருக வைத்துவிடும்.
சுஜாதா நாவல்கள் என்றாலே அனைவருக்கும் வசந்த் மற்றும் கணேஷ் கதாப்பாத்திரங்கள் தான் நினைவுக்கு வரும். துப்பறியும் இடங்கள், காதல், காமம் ஆகியவற்றை தனக்கே உரித்தான மொழியில் அசரடிப்பார் சுஜாதா. அவருடைய நாவல்களில் மீண்டும் ஜீனோ, வஸந்த்!வஸந்த்!, ஆதலினால் காதல் செய்வீர் பலரையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். மர்மங்களின் வழியாக ஒரு கதையினை நகைச்சுவையின் விளக்கின் துணையோடு நமக்கு அவர் அறிமுகப்படுத்தி வைக்கும் பாணியே சபாஷ் போட வைக்கும்.

திரைத்துறை
ஆரம்ப காலத்தில் சுஜாதா எழுதிய பல கதைகள் சினிமாவாக உயிர்பெற்றன. அந்த வரிசையில் இது எப்படி இருக்கு, பிரியா ஆகியவை கவனிக்கத்தக்க படங்களாகும். அதன் பின்னர் பல படங்களுக்கு வசனங்களை எழுதினர். தமிழின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் படங்களில் தனது அனல் பறக்கும் வசனங்களின் மூலமாக வெகுஜன மக்களைச் சென்றடைந்தார்.
மணிரத்னத்தின் ரோஜா துவங்கி உயிரே, ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் என நான்கு படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் சுஜாதா ஷங்கரின் இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களுக்கும் வசனகர்த்தாவாக இருந்திருக்கிறார்.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவைப் போற்றுகிறது எழுத்தாணி.
அவருடைய படைப்புகளில் சிறந்ததாக நீங்கள் என்னும் படைப்புகளை கமென்ட் செய்யுங்கள்.