வரலாற்றுப் புத்தகத்தின் வண்ணமயமான வார்த்தைகளுக்கு நடுவே விஷத்தைக் கக்கும் கருநாகங்களும் நெளிந்திருக்கின்றன. வானத்தை வளைத்து வட்ட மாலையாக மாற்றிவிடக்கூடிய வீரனை சுண்டு விரலுக்குச் சுளுக்கெடுக்க வைத்திருக்கிறது காதல். அன்பிற்கு அடிமையாகிப்போன பேரரசர்களில் மார்க் ஆண்டனிக்கு முதலிடம் தந்திருக்கிறது காலம். போர்மேகம் தன்னைச் சூழ்ந்துள்ள வேளையிலும், கிளியோபாட்ரா குளிக்க கழுதைப்பால் கிடைக்காததை நினைத்து ஏங்கி இருக்கிறான் ஆண்டனி. எகிப்தில் பிறந்த கிளியோபாட்ரா, ரோம் நகர சாம்ராஜ்யத்தை ஆள வந்த கதைதான் காதலுக்கு காலம் அளித்திருக்கும் சலுகைக்குச் சாட்சி.
நைல் நதியின் தீரத்தில் எழுந்து நின்ற எகிப்தில் அரசியாக இருந்தவள் கிளியோபாட்ரா. அரச குலத்தின் குருதி வெளியில் கலந்து விடக்கூடாதென தாலமி என்னும் தம்பிக்கே மனைவியானாள் கிளியோபாட்ரா. மூட நம்பிக்கையை முதுகுத்தண்டில் நிலைநிறுத்தி, முதுமக்கள் தாழியில் மூச்சுவிட்ட இனம் அப்போதைய அரசு இனம். உலகத்து உருண்டையில் ஓரிரண்டு இடத்தில் மட்டுமே நிலையான அரசுகள் இருந்த காலம். அதிலொன்றுதான் ரோம். ஜூலியஸ் சீசரின் சிவந்த விழிகளைப் பார்த்தே சிலநூறு கிராமங்கள் ரோமோடு ஒட்டிக்கொண்டன.
ஒரே இரவில் எகிப்தை எட்டிப்பிடித்தான் சீசர். நைலின் கரையில் நதியாக விளையாடிக் கொண்டிருந்தவளுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. தாலமி மரணித்தான். துரோகச் சிறகுகள் கிளியோபாட்ராவிற்குள் கிளர்ந்தெழுந்தன. ஜூலியஸ் சீசரைக் கொண்டே ரோமின் வரலாற்றை மாற்றி எழுத நினைத்தாள். அடிமைகளின் அணிவகுப்பை பார்த்துக்கொண்டிருந்த சீசர், கிளியோபாட்ராவின் அழகில் சொக்கிப்போனான். ரோமின் புகழில் ரோமங்கள் முளைக்கத் தொடங்கிய நாள் அது. மனதில் மலர்ந்த மகரந்தத்தை அவளிடம் கொட்டினான்.
பழிவாங்கும் படலத்தின் முன்னுரையை கிளியோபாட்ரா சீசரின் உதட்டில் எழுதினாள். ரோமின் வரலாற்றில் அதுவரை எவரும் பார்த்திடாத அளவிற்கு கோலாகலங்கள் கொடிகட்டிப் பறந்தன. தங்கப்பல்லக்கில் அரச வீதிகளில் வலம் வந்தாள் கிளியோபாட்ரா. சீசரின் மனைவி என்னும் பெயரில். அரசவையில் பெருகிவந்த அபாயக்குரல்களை அவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டாள் பதுமை. சீசரின் இந்த காதல் மோகம், ரோமின் எதிர்காலத்தை நாசமாக்கும் என அரசவை மந்திரிகள் மாநாடு நடத்தினார்கள். சீசரோ, உலகத்து விதிகளில் மாறுபட்டு உன் உடம்பினில் தான் பூக்கள் காம்பைத் தாங்குகின்றன எனக் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
குழப்பங்களின் குடைவரைக் கோவிலாக ரோம் மாறிய நாள் ஒன்றின் மாலையில் புரூட்டஸ் என்பவனின் குருவாளில் தோய்ந்தது சீசரின் குருதி. இறுதி ஊர்வலத்தில் இரங்கற்பா பாட மேடையேறினான் மார்க் ஆண்டனி. பின்னாளில் வார்த்தையின் ஜாலத்தால் எவரையும் வளைத்துவிடும் ஆண்டனி ரோமிற்குத் தலைவனானான். சீசரின் இழப்பு இத்தனை சீக்கிரம் சரியானதை கிளியோபாட்ராவால் நம்ப முடியவில்லை. வெட்டியது நகத்தினைத்தானே அன்றி விரலை அல்ல எனப் புரிந்துகொண்டாள். சூழ்ச்சி வலையில் ஆண்டனியை அகப்பட வைக்கத் துடித்தாள் கிளியோபாட்ரா. இறுதியில், அழகென்னும் ஆயுதத்தில் வீழ்ந்தான் ஆண்டனி.
தன் தங்கையை ஆண்டனிக்கு மணமுடித்திருந்த ஆக்டேவியஸ் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தான். சீசரின் நிலைமை தெரிந்தும் இந்த விஷச்செடியை விளைவிக்கத் துடிக்கும் ஆண்டனிக்குப் பாடம் புகட்ட எண்ணினான் ஆக்டேவியஸ். படைகளை ரகசியமாகத் திரட்டத் தொடங்கினான்.
மகிழ்ச்சி முழுவதும் மஞ்சத்தில் தான் என்ற முடிவிற்கு எப்போதோ வந்திருந்தான் ஆண்டனி. இல்லாத இடையில் இருநூறு ஆண்டுகள் இருந்திட வேண்டும் என அவளிடம் புலம்பினான். உலகத்து நாடுகளில் உள்ள ஆபரணங்கள் அனைத்தையும் ஆரணங்கிற்கு அளித்து மகிழ்ந்திட்டான். அவளைச் சிரிக்க வைக்க சிரியா மீது போர்த்தொடுத்தான் ஆண்டனி. இதே சமயத்தில் எகிப்திற்குப் பயணமானாள் கிளியோபாட்ரா. தன்னைத் தோற்கடிக்க மலர் மார்பால் மட்டுமே முடியும் என அங்கே நிரூபித்துக் கொண்டிருந்தான் ஆண்டனி.
தாய்நாடு சென்ற கிளியோபாட்ராவிற்கு, போர்க்களத்தின் நடுவில் புதுக்கவிதை எழுதியனுப்பினான். காலத்திற்காகக் காத்திருந்த ஆக்டேவியஸ், ரோமை வளைத்துப்பிடித்தான். அத்தோடு சூழ்ச்சியை முறியடிக்க சூழ்ச்சியே துணை என்று முடிவெடுத்தான். அதன் ஒருபகுதியாக கிளியோபாட்ரா கொல்லப்பட்டாள் என்ற செய்தி ஆண்டனிக்கு அனுப்பப்பட்டது. வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தவனை, தோல்வி எனும் கடலில் கரையொதுங்கச் செய்தது அந்தச் செய்தி. வரலாற்றில் முதல் முறையாக போரில் பின்வாங்கியது ஆண்டனியின் படை.
பாலை நிலத்தில் அழுதுவீங்கிய விழிகளுடன் எகிப்திற்குப் பயணப்பட்டான் ஆண்டனி. உயிர் இல்லாத அவளது உடலைக் காண நடுங்கினான். எகிப்தின் எல்லையில் காத்திருந்த ஆக்டேவியசின் ஆட்கள் துவண்டுபோன ஆண்டனியின் மீது கோரத்தக்குதலை நடத்தினார்கள். வாழ்க்கையை எப்போதோ இழந்திருந்த ஆண்டனி, மரணத்தைப் பரிசளித்த வீரர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினான். திட்டத்தில் எஞ்சியிருப்பது எகிப்து அழகி மட்டுமே என்று முணுமுணுத்தான் ஆக்டேவியஸ்.
ஆண்டனியின் மரணம் கிளியோபாட்ராவின் கனவுகளைக் கத்தரித்தது. ரோம் நகர சாம்ராஜ்யம் தனக்கு எப்போதும் கிடைக்காதோ? என்ற கவலை அவளுக்கு முதல் முறை வந்தது. அவளது துரோகச் சிறகுகளுக்கு இனி அரசவையில் மாடத்தினை நோக்கிப் பறக்கும் வலிமை இல்லை. ஜூலியஸ் சீசருக்கும், ஆண்டனிக்கும் தான் இழைத்த துரோகத்திற்காக கடைசி காலத்தில் கண்ணீர் விட்டாள். நிலைமை புரிந்துவிட்டது. இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் தன்னைச் சிறைப்பிடிக்க ஆட்கள் வர இருக்கிறார்கள் என்னும் பதறிய தோழியை வெளியே போகச் சொன்னாள்.
பல ஆண்டுகளாக ஆண்டுகளாக அவள் வளர்த்து வந்த பாம்புகளை எடுத்து மேனியில் படரவிட்டாள். இணையில்லாத அழகினைத் தீண்டித் திளைத்தன பாம்புகள். ஆக்டேவியஸ் வந்து பார்க்கும்போது நீலநிறப் பறவையாக கிளியோபாட்ரா மாறியிருந்தாள்.
துரோகத்தின் துருப்பிடித்த வாளினால் சரிக்கப்பட்ட ஆண்டனி மற்றும் சீசரின் உடலை மட்டுமே காலம் கல்லறையில் வைக்க முடிந்தது. அவர்களது காதலை அல்ல.