என்றைக்காவது நாம் வசிக்கும் ஊர்களின் பெயர்களுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? கண்டிப்பாக ஒவ்வொரு ஊரின் பெயரும் காரணப் பெயராகத் தான் இருக்கும். இடுகுறிப்பெயராக இருக்க முடியாது. உண்மையான பெயர்கள் காலப்போக்கில் மருவி வேண்டுமானால் இருக்கலாம்.
அனைத்து ஊர்களுக்கும் இது பொருந்தும் எனும் போது, நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட சென்னை மாவட்டத்திலிருக்கும் ஊர்களின் பெயர்களுக்குப் பின் கண்டிப்பாக ஒரு கதை இருக்குமல்லவா? அந்தத் தேடலின் விளைவு தான் இக்கட்டுரை.
சில குறிப்பிட்ட இடங்களுக்கான காரணங்கள் செவி வழி, ஆவண வழியாக வந்தாலும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவே உள்ளன. அவற்றில் சில:
அம்பத்தூர்
108 சக்தி ஆலயங்கள் உள்ள இடங்களில், 50 – வது ஊர் என்பதால், ‘ஐம்பத்துார்’ என வழங்கி பின், ‘அம்பத்துார்’ என, மருவியதாகக் கூறப்படுகிறது
கோடம்பாக்கம்
கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.
முகப்பேர்
கூவம் ஆற்றின் முற்பெயரான நுளம்பியாற்றங் கரையில் உள்ளது திருவேங்கட பெருமுடையார் எனும் சிவன் கோவில். பின்பு இக்கோவிலின் பெயர் வடமொழியில் சந்தான சீனிவாச பெருமாள் கோவில் என மாற்றப்பட்டது. சந்தானம் என்பதற்கு, மகப்பேறு என்று பொருள் கொள்ளப்பட்டு, பின் முகப்பேர் என மாறியதாம்.
சைதாப்பேட்டை
குதிரை வியாபாரியான சையது அகமது கான், அடையாறு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டியதால், சையது ஷா பேட்டை எனவும் பின், சைதாப்பேட்டை எனவும் மாறியது.
சரபோஜி மன்னரின் தாயான, சைதாம்பாளுக்கு சொந்தமான நிலப்பகுதி இருந்ததால், சைதாப்பேட்டையாக மாறியதாகவும் சொல்லப்படுகின்றன.
சேப்பாக்கம்
ஆறு தோட்டங்கள் எனும் பொருளில் உள்ள ‘சே பேக்’ எனும் உருது வார்த்தை மருவியே சேப்பாக்கம் என மாறியதாம்.
பாண்டி பஜார்
சவுந்தர பாண்டியன் பஜார் என்பதே பாண்டி பஜார் என்று சுருக்கப்பட்டதாம்.
பல்லாவரம்
பசுக்களை வளர்க்கும் இடையர்கள் அதிகம் இருந்த, பல் ஆ புரம், பல்லவபுரம் எனவும், பின் பல்லாவரம் எனவும் மருவியது. (பல் – பல , ஆ – பசு)
பனகல் பார்க்
மதராஸ் மாகாண முதல்வரான, பனகல் ராஜாவின் நினைவைப் போற்ற பனகல் பார்க் எனப் பெயரிடப்பட்டது.
பூந்தமல்லி
இது மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி. திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்து, காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு பூ எடுத்து சென்று வழிபட்டார். அப்பகுதி, வடமொழியில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பூந்தமல்லியாக உள்ளது.
தண்டையார் பேட்டை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து வந்தவர் முஸ்லிம் துறவியான ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. அவரை தொண்டியார் எனவும், அவர் வசித்த பகுதியை தொண்டியார் பேட்டை எனவும் அழைத்தனர். அது தான் தற்போது தண்டையார் பேட்டை என மாறி உள்ளது.
மயிலாப்பூர்
மயிலை எனும், இருவாச்சி பூக்கள் நிறைந்த ஊர், மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் எனும் பொருளில் மயிலாப்பூர் என்ற பெயர் வந்தது..
பெரம்பூர்
பிரம்பும், மூங்கிலும் அடர்ந்த பிரம்பூர் பகுதி, பெரம்பூராக மாறியுள்ளது.
திருவல்லிக்கேணி
அல்லி பூக்கள் நிறைந்த கிணற்றுப்பகுதி அமைந்த ஊர், திருவல்லிக்கேணி.
மீதி இருக்கும் ஊர்களின் பெயர்காரணங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.