ரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை விமர்சனம்

0
354

அப்பா சக்ரவர்த்தி, மகன் சந்தோஷ் என இருவருமாக நடிகர் ரஜினிகாந்த். ரஜினிக்கு நெற்றிக்கண் படத்தில் நடிக்கும் போது வயது 30. சக்கரவர்த்திக்கு வயது 60, சந்தோஷுக்கு வயசு 24. இரண்டு பேருக்கும் தோற்றம் வேறு. உடை அலங்காரம் வேறு. நடை உடை வேறு. கொள்கை இரண்டு.

படத்தின் மொத்த கனத்தையும் தாங்கி நிற்பது இந்த இரண்டு பாத்திரங்களும் தான். இந்த இரண்டு கனமான வேடங்களையும் ஏற்று நின்றது ரஜினிகாந்த்.

படத்திற்கு கதை-  விசு

திரைக்கதை – கே. பாலசந்தர்

தயாரிப்பு – கவிதாலயா

இயக்கம்   –  எஸ் பி முத்துராமன்

ரஜினியை சூப்பர் ஹீரோவாகப் பார்த்துப் பழகிய 1990 மற்றும் 2000 -ஆவது வருடத்துத்  தலைமுறையினருக்கு நடிகர் ரஜினியின் சாகசங்களை ரசிக்க நெற்றிக்கண் ஒரு சிறந்த வாய்ப்பு.

சக்கரவர்த்தி கோயம்புத்தூரைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரத் தொழிலதிபர். அளவான குடும்பம்.  கணவனைக் கண் கண்ட தெய்வம் என வணங்கி வாழும் மனைவி சக்கரவர்த்திக்கு.  மனைவி வேடத்தில் நடிகை லட்சுமி. படையப்பாவில் ரஜினிக்கு அம்மா வேடம் போட்டிருப்பதும் இவரே.

பணக்கார மகள் சங்கீதாவாகப் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு மன்னன் படத்தில் ஜோடியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற விஜயசாந்தி. இவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பையனாக வருகிறார் சரத் பாபு. கொஞ்சமே வந்தாலும் இவர் வேடம் படத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் அமைகிறது. ஒரு முழுப் பாடலே இந்தப் பாத்திரத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன். மகன் சந்தோஷ் கல்லூரி மாணவன்.

ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராகவும், குடும்பத் தலைவராகவும்  வளைய வருகிறார் சக்கரவர்த்தி. சக்கரவர்த்திக்கு அது தவிர இன்னொரு சுயநலமான வாழ்க்கையும் இருக்கிறது. சந்தோஷ் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் கல்லூரி மாணவன்.

இந்தப் பாத்திரப் படைப்புக்களின் குணாதியசங்களை அறிமுகக் காட்சியிலேயே  இயக்குனர் பார்வையாளர்களின் மனத்தில் ஆழமாகப் பதிக்கிறார்.

காலையில் எழும் சக்கரவர்த்தி கண் முன் இருப்பது ஒரு கவர்ச்சிப் படம், மகன் சந்தோஷ் முன் இருப்பது சாமி படம். இந்தப் புள்ளியில் துவங்கித் தந்தைக்கும் மகனுக்குமான வேறுபாடுகளைத் திரைக்கதையை விரிவு படுத்திக் காட்டி முன்னேறுகிறது.

சக்ரவர்த்தியின் பாத்திரம் குறித்த தெளிவுரை, பொழிப்புரை எல்லாம் தீராத விளையாட்டு பிள்ளை பாட்டு மூலம் படம் பிடித்துக் காட்டும் இயக்குனர்.

சந்தோஷின் சிந்தாந்தங்களைக் கல்லூரி காட்சிகள் மூலம் நிர்மாணிக்கிறார்.
கல்லூரியில் சந்தோஷுக்கு ஒரு சின்னக் காதல் கதையும் வைத்திருக்கிறார்கள்.
நாயகனும் நாயகியும் அதிகம் பேசாமலே உள்ளங்கையில் எழுதிய  எழுத்துக்களால்  காதல் பரிமாறிக் கொள்ளும் கொஞ்சம் கவித்துவமான காதல் கதை.

மேனகா தான் சந்தோஷின் காதல் நாயகியாகப் படத்தில் தோன்றி இருக்கிறார். வந்து போகும் வேடம் தான். ஆனால், ஒற்றைப் பாடலால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து விட்டார். பாட்டைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.

கணவனின் தீராத விளையாட்டுக்களை அறிந்தும், அது குறித்து அவனைத் தட்டிக் கேட்க இயலாத நிலையில் சக்கரவர்த்தியின் மனைவி. மனைவியின் மௌனமான பொறுமையைத் தன் களியாட்டங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் துள்ளாட்டம் போடுகிறார் சக்கரவர்த்தி.

சக்கரவர்த்தி தன் அந்தரங்க லீலைகளுக்கென மதனமாளிகை என்று ஒரு தனி பங்களாவே கட்டி வைத்திருக்கிறார்.மதன மாளிகைக்கும் மற்றும் அங்கு நடக்கும் விளையாட்டுகளுக்கும் சக்கரவர்த்திக்கு உடன் இருக்கும் சிங்காரம் என்ற  கார் டிரைவர் வேடத்தில் கவுண்டமணி.

ஒரு கட்டத்தில் சக்கரவர்த்தியின் மகன் சந்தோஷுக்குத் தந்தையின் ஆட்டம் தெரிய வருகிறது.  அவரது ஆட்டக்களமான மதன மாளிகையிலே எதிர் கொள்ளக் கிளம்புகிறான். சிங்காரத்தைச் சுற்றி வளைத்துத் தன் பக்கம் சேர்த்துக் கொள்கிறான் சந்தோஷ். தந்தையை மகன் எதிர்கொள்ளும் அந்தக் காட்சி  மதன மாளிகையில் தான் படமாக்கப்பட்டிருக்கும்.

மதன மாளிகை செட் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கண்ணாடி சூழ் சூழல் படுக்கை சகிதம் இருக்கும் அந்த மாளிகை ரசனையாக அமைக்கப்பட்டிருக்கும்.

அங்கு தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் அந்த உரையாடல் வெகு பிரசித்தம்.

“இது விளக்கு…இது ஊதுபத்தி… இது கட்டில்… இது படுக்கை…நீ பொண்ணு நான் பையன்…” சக்கரவர்த்தியின் குரல் குழைவு வசனத்தின் வீரியத்தை உச்சப்படுத்தி இருக்கும். அதே வசனத்தைச் சற்றே மாற்றித் தந்தைக்கு மகன் திருப்பிச் சொல்லும் இடம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

காட்சியின் அழகு  மற்றும் வசனத்தின் தீவிரம் இரண்டையும்  கூட்டுவதில் அந்த செட்டிற்க்கு பெரும் பங்கு இருந்தது என்று சொன்னால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளலாம்.

ரஜினி to சூப்பர் ஸ்டார் – ஜானி -திரை விமர்சனம்.

அது துவங்கி தந்தைக்கும் மகனுக்கும் பனிப்போர் ஏற்படுகிறது.  தந்தையின் இருட்டு நடவடிக்கைகளுக்கு மகன் பூட்டுப் போடுகிறான். ருசி கண்ட பூனை பசியில் சிக்கிச் சீற்றம் கொள்கிறது. தந்தையைத் திருத்துவதைத் தன் கடமையாக ஏற்றுச் செயல் படுகிறான் சந்தோஷ். சந்தோஷிடம் சிக்கிக் கூண்டுக்குள் மாட்டிய புலியாக சக்கரவர்த்தி திணறுகிறார்.

இந்த நகர்வுகளை சுவாரஸ்யமாக நகர்த்தி இருப்பார் இயக்குனர். ரசிப்பும் சிரிப்புமாக பார்வையாளர்கள் உற்சாகம் கொள்ள வைக்கும் காட்சிகள்.

மகனின் தடுப்பாட்டத்தை சமாளிக்க சிரமப்பட்டு சக்கரவர்த்தி ஓய்வு எடுக்க வெளிநாடு பறக்கிறார்.  உள்ளூரில் சதா கண்காணிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட மகனின் கட்டுப்பாட்டில் தள்ளப்பட்டு இருந்த நிலையில் இருந்து விடுதலை உணர்வடைகிறார் சக்கரவர்த்தி.

ஹாங்காங் நகரில் சக்ரவர்த்திக்கு அவர் நண்பர் ஒரு வினோதமான கண்ணாடியொன்றை பரிசளிக்கிறார். அந்த கண்ணாடி ஒரு எக்ஸ் ரே திறன் பெற்றது.  ஆடை களைந்து மேனி காட்டும் குணம் வாய்ந்தது என நண்பர் கூறுகிறார்.

பசித்திருக்கும் புலி ஆன சக்கரவர்த்தி பாய்ச்சலுக்கு தயார் ஆகிறார். இந்நிலையில், அவரது கம்பெனியில் ஏற்கனவே அவரால் பணியில் அமர்த்தப்பட்ட ராதா என்ற பெண் அவரை வெளிநாட்டில் சந்திக்கிறாள். சக்கரவர்த்தி தன் பசிக்கு அவளை இரையாக்கி கொள்கிறார். அது மட்டுமின்றி தன்னை எதிர்க்க நினைத்தால் ஒழித்து விடுவதாக மிரட்டலும் விடுக்கிறார்.

ராதா வேடத்தில் நடிகை சரிதா. படத்தின் பிற்பாதி ராதா பாத்திரத்தை சுற்றியே பெருமளவில் வளைய வரும். கொஞ்சம் கனமான வேடம். அமைதியான தோற்றம் அடக்கமான பேச்சு ஆனாலும், அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய பாத்திரம். சரிதா சரி தான் என சொல்லும் அளவுக்கு பிரகாசித்திருக்கிறார்.

சக்கரவர்த்தி சென்னை திரும்பும் போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தன் குடும்பம் தனக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருக்கிறதை தெரிந்து கொள்கிறார்.

ராதா தன் நிறுவனத்தின் உச்ச பதவியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். அது அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

அதே ராதா மருமகளாய் தன் மகனுக்கு மனைவியாய் தன் வீட்டுக்குள்ளும் நுழைந்ததைக் காண்கிறார். இது அவருக்கு பேரதிர்ச்சி அளிக்கிறது. தந்தை, மகன் குரல் மாற்றங்கள் ரஜினியின் அட்டகாசக் கச்சேரி.

தன்னைச் சுற்றி எதோ ஒரு சதி வலை பின்னப்படுவதை உணர்கிறார் சக்கரவர்த்தி. அதன் பின்னால் இருப்பது தன் மகன் சந்தோஷ் என்பதையும் புரிந்து கொள்கிறார். சந்தோஷ் பின்னால் தன் குடும்பமே இருப்பதையும் உணர்கிறார்.

தந்தையைத் திருத்த என்னவானாலும் சரி எனக் கோதாவில் குதிக்கும் மகன் !
நீ யாருடா என்னைத் திருத்த என பதிலுக்கு எகிறி நிற்கும் தந்தை! அறுபதுக்கும் இருபதுக்கும் நடக்கும் சூடான மோதல் இரண்டாம் பாதியின் பெரும் பகுதி காட்சிகளை கவர்ந்து கொள்கிறது.

சந்தோஷ் ராதா திருமண நாடகம் குறித்த உண்மையை சக்கரவர்த்தி ஒரு கட்டத்தில் தெரிந்து கொள்ளுகிறார். இதன் பின் அவரது நகர்வுகள் இன்னும் பலம் பெறுகின்றன. சந்தோஷ் தன் முயற்சிகளில் பின்னடைவு கொள்கிறான்.

மகனால் தந்தையை நல்வழி படுத்த முடிந்ததா?  அந்தக் குடும்பத்தின் நிலை என்ன?  சக்கரவர்த்தியால் வாழ்வை இழந்த ராதாவின் நிலை என்ன?  இப்படி அடுக்கு அடுக்கான கேள்விகளுக்கு திரைக்கதையாசிரியரும் இயக்குனரும் நாம் ஏற்று கொள்ளும் படியான முடிவைக் கொடுத்து இருக்கிறீர்களா என்பதைப் படத்தில் பார்த்து ரசித்து உணர்வது தான் சிறந்த அனுபவம். அதனால் அது குறித்து மேலும் சொல்லப் போவதில்லை.

இசை இளையராஜா.

பாடல்கள் கவியரசு கண்ணதாசன்

பாடல்கள் அனைத்தும் காலம் தாண்டி இசை ரசிகர்களை இன்றும் வசியம் செய்து வைத்திருக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக “ராமனின் மோகனம்” என்ற பாடல், ராஜா-ரஜினி இணைந்த ஹிட் வரிசையைத் தொகுத்தால் நிச்சயம் முதல் பத்து இடங்களுக்குள் கண்டிப்பாக வரும்.

“தீராத விளையாட்டு பிள்ளை” வார்த்தையிலும் சரி, காட்சியிலும் சரி, இசையிலும் சரி, எஸ்.பி.பி குரலிலும் சரி, ரஜினிகாந்த் நடிப்பிலும் சரி, எள்ளலும் துள்ளலும் கலந்து செழித்து ஒரு இனிய திரை அனுபவத்தை ரசிகனுக்கு வழங்கியது என்றால் மிகையாகாது.

“மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு ” பாடல், கவியரசு கண்ணதாசன் கவிஞர் மட்டுமல்ல நல்ல கதை சொல்லி என்பதையும் நிரூபணம் செய்த எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்று. மாப்பிள்ளையாக வரும் சரத் பாபு பாத்திரத்தைக் கொண்டு சக்கரவர்த்தியை அழுத்தும் இந்த பாடலும் சரி, சரத் பாபு ரஜினி சந்திக்கும் காட்சியும் சரி பாலச்சந்தர் திரைக்கதை உயரங்கள்.

சக்கரவர்த்தி வரும் போது ஒலிக்கும் பின்னணி இசையானது இன்றளவும் பலரது செல்போன் ரிங் டோன் களாக ஒலித்துக் கொண்டிருப்பது அதன் வெற்றி வீச்சுக்குச் சான்று.

இன்றளவும் பேசப்படும் இசைஞானியின் தீம் இசை

ராஜாவின் பின்னணி இசை குறித்துக் குறிப்பிட்டு சொல்லும் படியான இன்னொரு காட்சி, மனைவியிடம்  மகன் திருமணம் பற்றி சக்கரவர்த்தி விசாரிக்கும் காட்சியை சொல்லலாம்.

கதவை தாளிட்டு விட்டு மிடுக்காய்  ரஜினி உள்ளே வரும் போது சக்கரவர்த்திக்கான இசை ஒலிக்கும். விசாரணையின் முதல் கேள்வி ஆரம்பிக்கும் போது இசையற்ற நிலையில் பிரேம் நின்று விடும். மனைவியை சக்கரவர்த்தி ஓங்கி அறையும் போது வேறு ஒரு மெல்லிய இசையை ராஜா காட்சியில் பரவ விட்டிருப்பார். இசை அசுரன் நான் என ராஜா மார் தட்டும் தருணம் அது என்றால் மிகையாகாது.

அதே கதவை மூடும் காட்சிக்கு நம்மை இன்னொரு முறை பார்க்க வருமாறு அழைப்பு விடுப்பது ரஜினிகாந்த் என்ற ஒப்பற்ற கலைஞனின் ராட்சச நடிப்பு. கேமராவை உள் வாங்கியபடி படு நளினமாக அந்தக் கதவை கை உயர்த்தி தாளிட்டு கொஞ்சல் குரலில் மனைவியிடம் பேசியவாறு வந்து எதையோ தேடும் சாக்கில் பேச்சின் குரல் தொனியை மாற்றி, அதில் அழுத்தம் கூட்டி, கொஞ்சலைக் குறைத்து, கோபத்தை மெல்ல மெல்ல ஏற்றி கேள்வி கேட்கும் அந்த காட்சி இருக்கிறதே… ரஜினி ரசிகன் மட்டுமல்ல நடிப்பு என்னும் கலை மீது மதிப்புக் கொண்ட யாராக இருந்தாலும் ரஜினியை ஒரு நடிகனாகக் கொண்டாடுவார்கள்.

ரஜினி to சூப்பர் ஸ்டார் – அன்புக்கு நான் அடிமை திரை விமர்சனம்.

தந்தைக்கும்  மகனுக்கும்  மோதல் துவங்கும்  காட்சிகளில் அப்பாவாகக் காயும் அனலையும், மகனாக பாயும் புனலையும் ரஜினி காட்டியிருக்கும் நடிப்பு அம்சம்பின்னர் மோதல் வலுக்கும் கட்டங்களில் காட்டம் குறைத்து அனுபவக் கெத்து கூட்டி எள்ளல் நடிப்பை அள்ளி பொழியும் இடத்தில் ரஜினி ஒட்டு மொத்த பார்வையாளர்களைத் தன்னோடு சேர்த்து கொண்டு “ஆஹான்! ” சொல்ல வைக்கிறார். இன்றைய மீம்ஸ்களின் பிரபலச் சொல் ஆன “ஆஹான்” உருவான கருவறை நெற்றிக்கண் படம் என்பதும் அதன் பிதாமகன்  ரஜினிகாந்த் என்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

“நான் சிங்கம் என் முன்னாலே நீ எல்லாம் ஒரு கொசு .

சிங்கம் வந்தா அது தான் வலைக்குள் சிக்கும் ஆனா கொசு வந்தா நாமே வலைக்குள் போய் ஒளிஞ்சிக்க வேண்டி வரும் “

‘கோயிலுக்கு நிதி கேட்டு வருவோரிடம் கடவுள் தான் நமக்கு கொடுக்கணும் நாம் கடவுளுக்குக் கொடுக்கக் கூடாது.”

“யாரை வேணும்ன்னா பகைச்சுக்கலாம் ஆனா அரசியல்வாதியைப் பகைக்க கூடாது “

“நீ சொல்ற உபதேசத்த கேக்குறதுக்கு நான் ஒன்னும் அந்த ஈஸ்வரன் இல்ல டா, நான் கோடிஸ்வரன்” என்பது  போன்று ரசிக்கும் படியான வசனங்களும் படத்தில் ஏராளம்.

ரஜினியின் வசனத்தை இங்கே கேளுங்கள்

“பொடி பீடி குடி லேடி அதாண்டா உன் டாடி” என அகங்காரம் கொண்டு மகனிடம் கொதிக்கும் சக்கரவர்த்தி.

“இளமை பொறுமை கடமை இது தான் என் வலிமை ” என இனிமை குறையாமல் புன்னகை பூக்கும் சந்தோஷ்.

இருவரும் இரு வேறு மனிதர்களாகத் தான் பார்வையாளர்களாகிய  நமக்குத்  தெரிகிறார்கள். அதுவே ரஜினியின் நடிப்புக்கு கிடைத்த மகத்தான வெற்றி.

ஒரே படத்தில் நாயகனாவும் வில்லனாகவும் நடித்து வெற்றியை சுவைத்த முதல் தமிழ் நடிகர் ரஜினியாகத் தான் இருப்பார். நெற்றிக்கண் கதையின் பலத்தாலும், ரஜினியின் பன்முக நடிப்பாற்றலாலும், வெற்றிக்கண் திறந்தபடம்.

பெண்ணாசை பிடித்த பெரிய மனிதனாக கத்தி மேல் நடக்கும் பாத்திரம் சக்கரவர்த்தி, கொஞ்சம் சறுக்கினாலும் ஜனங்கள் முகம் சுழித்து விட வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் மக்கள் விரும்பும் ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு முயற்சி ஆபத்தில் முடிந்தால் நடிப்புத் தொழிலே பின்னடையலாம், ஆனாலும், அந்த வேடத்தைத் துணிச்சலோடு ஏற்று ஜனங்கள் கொண்டாடும் விதத்தில் நடித்து “நான் இனி தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார்” என ரஜினி அறிவித்துக் கொண்டார்.

பின்குறிப்பு: புராணத்தில் வந்த நக்கீரர் கதையில் வரும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கருத்தே படத்தின் தலைப்புக்கான பெயர்க்காரணம்.

இசைஞானியின் இசையில் நெற்றிக்கண் படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.