28.5 C
Chennai
Wednesday, September 30, 2020
Home கலை & பொழுதுபோக்கு : மூன்று முகம் - திரை விமர்சனம்

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: மூன்று முகம் – திரை விமர்சனம்

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகளுக்கு எப்போவும் தனி மவுசு உண்டு. தமிழில் மாஸ் ஹீரோ தகுதியை அடைய போலீஸ் வேடம் போட வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.

திரையில் எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் வந்து போய் இருந்தாலும் சில பாத்திரப்படைப்புகள் மாத்திரம் காலத்தின் கடும் வீச்சையும் தாண்டி நின்று இருக்கின்றன.

அப்படி தமிழ் சினிமா ரசிகனின் எண்ணங்களில் காக்கி கோலாச்சிய ஒரு பாத்திரம் டி எஸ் பி  அலெக்ஸ் பாண்டியன்.  கதாசிரியரின் கற்பனையில் உதித்த ஒரு பெயருக்கு ரத்தமும், சதையும், உணர்வும் ஊட்டி உயிர் கொடுப்பதில் நடிகனுக்குப் பெரும் பங்கு உண்டு

ரசிகனுக்குச் சிந்திக்கப் பெரும் அவகாசம் கொடுக்காமல் பரபரவென திரைக்கதையை நகர்த்துவதில் தான் ஒரு வணிக சினிமாவின் வெற்றி அமைகிறது.

கதைச்சுருக்கம்

கோடீஸ்வரத் தொழில் அதிபர் ராமநாதனின்  மகன் அருண் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்புவதில் துவங்குகிறது கதை.

சாமியாராக வந்து இறங்கும் மகனைக் கண்டு அதிரும் தந்தை, அவனை சந்நியாச பாதையில் இருந்து திருப்ப ஒரு இளம் பத்திரிக்கை நிருபர் ரேகாவை அணுகுகிறார். ஆரம்பத்தில் அசையாத அருணை, அவன் பெற்றோரும் ரேகாவும் சேர்ந்து சில பல கட்டமைக்கப்பட்ட நிகழ்வுகளால் அவன் காவிக் கோலத்தை விட்டு விலக வைக்கிறார்கள்.

அலுவலகம் வரும் அருண், அங்கு கணக்கு வழக்குகளைப் பார்த்து அதில் இருந்து சகாய மேரி என்னும் பெண்ணுக்கு மாதா மாதம் பணம் போவதை கண்டு பிடிக்கிறான். அதை விசாரிக்க அருண் முற்படுகிறான்.

இதற்கிடையில் சகாய மேரி, ஜான் என்ற ஒரு இளைஞனை வளர்த்து வருகிறாள். ஜான் குறித்த வரலாறை விவரித்து கொண்டிருக்கிறாள்.  அதில் விரிகிறது காவல் துறை அதிகாரி அலெக்ஸ் பாண்டியனின் அதிரடி சாம்ராஜ்யம்.

மடக்கி மிடுக்கிப் பார்வையைப் பரவ விட்டு அலெக்ஸ் பாண்டியன் அறிமுகம் ஆகும் காட்சியில் திரையில் அனல் பறக்கிறது.

ஷீலா, ஷீலா…. என மனைவியை அழைத்த படி அலெக்ஸ் சிங்க உறுமலோடு திரையில் நுழையும் போது தமிழ் சினிமாவுக்கென அளவெடுத்த ஒரு போலீஸ் பாத்திரம் உருவாகி வந்து நிற்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேரோ. பின்னாளில் வந்த நூற்றுக்கு தொண்நூற்று ஒன்பது போலீஸ் பாத்திரங்களுக்கு இலக்கணம் வகுத்தது இந்த அலெக்ஸ் பாண்டியன் தான் என்றால் அது மிகையாகாது.

சாராயத் தொழில் செய்யும் லோக்கல் ரவுடி ஏகாம்பரத்தின் கூட்டத்தின் மீது அலெக்ஸ் நடவடிக்கை எடுக்கிறார். இதன் மூலம் இருவருக்கும் மோதல் பிறக்கிறது. காவல் நிலையத்தில் அலெக்ஸ்க்கும் ஏகாம்பரத்திற்கும் நடக்கும் உரையாடல் கிளாசிக் வகை. ஸ்டைலின் உச்சம்.

தன் கையாட்களை வெளியில் எடுக்க வந்த ஏகாம்பரத்தையும்  சிறையில் தள்ளுகிறார் அலெக்ஸ். மோதல் வலுக்கிறது. ஏகாம்பரம் சூழ்ச்சி செய்து அலெக்ஸைக் கொல்லுகிறான். குழந்தை பேற்றில் அலெக்சின் மனைவி ஷீலாவும் இறந்து போகிறாள். பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிகிறார்கள்.  அலெக்ஸ் தன் உயிர் பிரிகையில் மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து ஏகாம்பரத்தைக் கொல்லப் போவதாக சபதம் செய்கிறார்.

அலெக்ஸ் பாண்டியனாக நடை, உடை, மேக்கப் என எல்லா விஷயங்களிலும் ரஜினி தனி கவனம் செலுத்தி இருந்தது  சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. குறிப்பாக அலெக்சின் முகம் சற்றே உப்பியது போன்று இருக்கும், அதற்காக கன்னத்தின் ஓரங்களில் சில ஒதுக்கல்கள் செய்து நடித்திருந்தார் ரஜினி.

இந்நிலையில் தனது இருபத்தி ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் அருண், தான் அலெக்சின் மறுவதாரம் என்பதாக அறிவிக்கிறான். தன் பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஏகாம்பரத்தின் கூட்டாளி கோபால்  மீது பாய்கிறான்.  ஏகாம்பரத்தை சும்மா விடப் போவதில்லை என சீறுகிறான். இந்தக்  கட்டத்தில் படத்தின் வேகம் கூடுகிறது.

இடைவேளைக்குப் பின்,  ஏகாம்பரம் மீண்டும் வருகிறான் அம்பர்நாத் என்னும் தொழில் அதிபர் அவதாரத்தில். செத்து வந்தவன் மீண்டும் சாகலாம் என அம்பர் சொல்கிறான். அருணைக் கொல்ல ஆஷா என்ற பெண்ணை ஏற்பாடு செய்கிறான்.  அருண் அதில் இருந்து சமயோசிதமாகத் தப்புகிறான்.

அம்பரின் கூட்டாளி கோபால் கொல்லப்படுகிறான். கொலைப் பழி அருண் மீது சுமத்தப்படுகிறது.  அருண் சிறைக்குச் செல்கிறான்.  வழக்கு நீதி மன்றத்தில் நடக்கிறது, வழக்கில் முக்கிய சாட்சியாக அம்பரை விசாரிக்க அனுமதி கேட்கிறான் அருண்.

அருண் அங்கு தான் அலெக்ஸ் பாண்டியன் என்றும் தான் ஏகாம்பரத்தால் கொல்லப்பட்டதாகவும் சொல்லுகிறான்.

வழக்கில் புதுத் திருப்பமாக, நான் தான் அலெக்ஸ் பாண்டியன் என வேடமிட்டு ஜான் இடையில் நுழைந்து வழக்கின் திசையைத் திருப்புகிறான்.

வழக்கின் போக்கு என்ன?  அருண் தான் நிரபராதி என நிறுவ முடிந்ததா?  ஜான் தனக்கும் அருணுக்கு உள்ள உறவைத் தெரிந்து கொண்டானா?

அலெக்ஸ் பாண்டியனின் சபதம் நிறைவேறியதா என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை முடிச்சுகளில் வெளிவருவதைப் படத்தில் கண்டு ரசிப்பது தான் முறை.

திரைப்பட மாந்தர்கள்

இந்தப் படத்தில் ரஜினிக்கு மூன்று வேடம் என்றால், வில்லன் நடிகர் செந்தாமரைக்கு இரு வேடங்கள் என்று சொல்லலாம். இரண்டு கெட்டப்களில் அசத்தல் வில்லத்தனம் காட்டியிருப்பார் மனிதர். செயினை மீசையில் உரசிய படி அவர் உருட்டலும் மிரட்டலும் அபாரம்.  லோக்கல் ரவுடியாக முதல் பாதியில் அட்டகாசமும், தொழில் அதிபராக அடுத்த பாதியில் நரித்தனமும் என வேற அடுக்கு நடிப்பைக் காட்டி இருப்பார் செந்தாமரை.

நாயகியாக, துடுக்கான கவர்ச்சி துள்ளும் ராதிகா. ஆடல் பாடல் மட்டுமின்றி கதையின் போக்குக்கும் உதவும் பாத்திரத்தில் நன்றான பங்களிப்பு

கோடீஸ்வரர் ராமநாதனாக தேங்காய் சீனிவாசன்  கொஞ்சமே என்றாலும் கலகலப்பு.

டெல்லி கணேஷ்,  கமலா காமேஷ்,  சத்யராஜ் துணை வேடங்களில் கச்சிதம்.

ஆஷாவாக சிலுக்கு,  அவர் இருப்பைக் காட்ட ஒரு பாடல் ஆடல். 80-களின் கவர்ச்சி மங்கைக்கான இலக்கணம் பெரும்பாலும் இவரை சுற்றியே அமைந்து வந்திருக்கிறது. அதை இந்தப் படத்திலும் காணலாம்.

ரஜினியின் மூன்று முகம்

அருணாக அமைதி
அலெக்ஸாக ஆக்ரோஷம்
ஜான் ஆக அல்டாப்பு

என ரஜினியின் மூன்று முகம் ஒவ்வொன்றும் ஏறு முகம்

அருணின் சாமியார் காட்சிகளில் சிரிப்பு ஏராளம். அருண் நிதானமான ஒரு பாத்திரப் படைப்பு.

ஜான் ரஜினியின் ஆர்ப்பாட்டமான நடிப்பு  முன் வரிசை ரசிகர்களுக்குக் கட்டாயக் கொண்டாட்டம்.
சாராயத்தைப் பாட்டிலில் இருந்து கையில் ஊற்றி குடிக்கும் குசும்பு, அம்பரு என செந்தாமரையை அழைக்கும் அந்த நக்கல் தொனி  ஆகியவை சும்மா நச்சுன்னு இருக்குன்னு சொல்லலாம்

ஜான், ரேகாவை அலெக்ஸ் பாண்டியனாகச் சந்திக்க வரும் இடம் ரஜினியின் ரசனையான நடிப்புக்கு மிகச் சிறப்பானதொரு சான்று.

படத்திற்கு இசை சங்கர் கணேஷ்.

தேவார்மிதம் பெண் தான்‘ என்ற பாடல் இன்றும் ஆடல் கூடங்களில் கால்களைத் தொட்டு எழுப்பக் கூடியது.

மூன்று முகம்  – படம் வெளிவந்த வருடம் – 1982

இயக்கம் – ஏ ஜெகந்நாதன்

கதை வசனம் – பீட்டர் செல்வக்குமார்

கேமரா – விஸ்வம் நடராஜன்

மூன்று முகம் பிற மொழிகளிலும் வெளிவந்தது. இந்தியில் ரஜினியே நடித்து ஜான் ஜானி ஜனார்தன் என்ற பெயரில் வெளியாகி வெற்றி கண்டது.

மூன்று முகம் – தமிழக காவல் துறைக்கு தமிழ் சினிமா அலெக்ஸ் பாண்டியன் என்ற பாத்திரம் கொண்டு எழுதிய வாழ்த்துரை என்று சொன்னால் பொருந்தும்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்
- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -