[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: அன்புள்ள ரஜினிகாந்த் – திரை விமர்சனம்

Date:

தேவ் எழுதி வெள்ளி தோறும் வெளிவரும் 80’s: ரஜினி to சூப்பர் ஸ்டார்  எனும் இந்த தொடரின் பதினோராவது திரைப்படமாக ‘அன்புள்ள ரஜினிகாந்த்’.

ரஜினி என்ற கலைஞன், அரிதாரம் ஏதுமின்றி ரஜினிகாந்த் ஆகவே, ஆர்ப்பாட்டம் இன்றி ஒரு படம் முழுக்க வந்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

திரைக்கு வெளியில் தனக்கு இருந்த நாயக பிம்பத்தின் வலிமையோடு ஒரு குழந்தையின் அன்பினைக்  கூட்டணி அமைத்து வெளி வந்த படம் அன்புள்ள ரஜினிகாந்த்.

படம் வெளியான வருடம் 1984
எழுத்து – தூயவன்
இயக்கம் – கே.நட்ராஜ்
இசை – இளையராஜா

கதைச் சுருக்கம்

இந்த உலகத்தில் நாம் சேர்க்கக் கூடிய மிகப்பெரிய சொத்து என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது ஆழமான சிந்தனைக்குப் பின் நம் முன் வந்து நிற்கும் சொல் அன்பு மட்டும் தான்.

நாம் யாராக இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் நமக்கான அடையாளம் என்பது நம் சக உயிரின் மீது நாம் காட்டும் அன்பில் மட்டுமே உள்ளது. அவசரமான உலகத்தில் நம் குடும்பத்தினரிடம் கூட நேரம் செலவிட முடியாத நிலையில் தான் நம்மில் பலர் உள்ளோம்.

இந்நிலையில் உற்றார் உறவினர் என யாரும் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் வாழும்  இல்லம் தான் இப்போது பேச போகும் படத்தின் களம்.

maxresdefault 1 3

கண் பார்வை இல்லாத பிள்ளை, கால் நடக்க இயலாத சிறுவன், வாய் பேசமுடியாத சிறுமி இன்னும் அநேக குழந்தைகள்.. அதில் இந்தக் கூட்டத்தை விட்டு ஒதுங்கித் தனிமையில் தன்னைப் பூட்டி வைத்துக் கொண்டு வாழும் ஒரு குழந்தை ரோஸி.

பொதுவாக எந்தக் குழந்தையைப் பார்த்து உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டாலும்,  அம்மா என்ற பதில் தான் அதிகம் கிடைக்கும். ஆனால், புறக்கணிப்பின் வலி குழந்தை ரோஸிக்கு தாய் மீது தீராத வெறுப்பை விதைக்கிறது. அது வளர்கிறது.

ரோஸியின் பிடிவாதம் அவளை மற்றவர்களிடம் இருந்து இன்னும் தொலைவுப் படுத்துகிறது. இந்த நிலையில் ரோஸியின் மீது ஆழமான பாசம் கொண்ட இல்லத்தின்  தலைமைத் தாய், அவளைக் கவனிக்க ஒரு ஆயாவை நியமிக்கிறார். ஆயா பொறுமையின் உச்சம் காட்டுகிறார். ரோஸியின் அன்பைப் பெற அந்தப் பெண் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோற்றுப் போகின்றன. முயற்சிகளைக் கை விடுமாறு உடன் பணியாற்றுவோர் கூறுகின்றனர்.

வெறுப்பு என்பது பலவீனத்தில் பிறப்பது. அன்போ சகலத்தையும் தாங்கும் பலத்தில் உருவெடுக்கிறது. அந்த பெண் ரோஸியின் கோபங்களைத் தன் அன்பினால் தாங்குகிறாள். இந்த நிலையில் இல்லத்தில் நடக்கும் ஒரு விழாவுக்கு பிரபல நடிகர் வருகிறார். அவரையும் ரோஸி உதாசீனம் செய்கிறாள். அன்று இரவு இல்லத்தின் பிள்ளைகளுக்காக நடிகர் நடித்த படம் ஒன்று திரையிடப்படுகிறது.

எதற்கும் அசையாத ரோஸி படத்தைப் பார்க்கிறாள். படம் அவளை மெல்ல அசைக்கிறது. எதன் மீதும் ஒரு பிடிப்பின்றி இருந்த ரோசியின் மனதில் மாற்றம் கொடுக்கிறது படம்.  புது நம்பிக்கை பெறுகிறாள். படத்தின்  மூலம் கிடைத்த நம்பிக்கை நடிகர் மீதான அன்பாக மாறுகிறது. வளர்கிறது.

இதையும் படியுங்கள்
Touch of love என்ற ஆங்கில படத்தின் உத்வேகத்தில்  இந்த படம் உருவானதாக சொல்பவர்கள் உண்டு.

ஒரு குழந்தையின் மனம் என்பது நல்ல நிலம் போன்றது, அதில் நல்ல விதைகளை ஊன்றி வளர்த்து பூந்தோட்டமாக்கி அழகு பார்ப்பது சமூகத்தின் கடமை. சமூகத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் காட்டும் நேசத்திற்கு மதிப்பு அதிகம். அதன் வலிமை உணர்ந்தவர்கள் அநேகருடைய வாழ்க்கையை தொடுகிறார்கள், அதற்கு வண்ணம் கூட்டுகிறார்கள்.

ரோஸியின் மனத்தில்  விழுந்த நம்பிக்கையின்  விதையை, அன்பென்னும் நீர் ஊற்றி வளர்க்கிறார் நடிகராக வரும் ரஜினிகாந்த். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளைச் சுற்றி சின்னச் சின்னதாகப் பின்னப்பட்டிருக்கும் சம்பவங்கள் அழகான கவிதைத் துணுக்குகள்.

குழியில் விழுந்த பந்தை எடுக்கும் முயற்சி,
பாதையில் கிடக்கும் கல்லை அகற்றும் கண்பார்வை இழந்த சிறுவன்
இப்படிப் பல சின்ன விஷயங்கள் படமெங்கும் விரவி உள்ளன.

படங்களில் ஏதாவது ஓரிரு காட்சிகளில், கவுரவ வேடத்தில் தானாகவே வந்து போவது எளிது. ஆனால், படம் நெடுகத் தன்னுடைய நிஜமாக நிழல் திரையில் வந்து போவது பெரும் சவாலான விஷயம். ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் நடிகர் அந்த சவாலை அநாயசமாக எதிர்கொள்கிறார்.

mqdefault 1

ரோஸிக்கு இருக்கும் பிரச்சனைகளை அறிந்து, அதற்கு உதவ முற்படுகிறார். குழந்தை ரோஸியோடு போகப்போக ஒரு நெருக்கமான பந்தம் உருவாகிறது. அதை ஒரு கவிதையாக சம்பவங்கள் கோர்த்து நகர்த்துகிறார் இயக்குனர்.

ரோஸியை கவனித்துக் கொள்ளும் பெண் தான் ரோஸியின் உண்மையான தாய் எனத் தெரிய வருகிறது.

ரோஸியின் உடல் நிலை மோசமடைகிறது. தாயும் சேயும் இணைகிறார்களா? ரோஸியின் முடிவு என்ன?  இந்த கேள்விகளுக்கான விடையை நோக்கி உணர்ச்சிப்பூர்வமான  கிளைமேக்ஸ் காட்சிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

இசை

படத்திற்கு முக்கிய பலம் இசை, இளையராஜா.

பாடல்கள் இன்றும் ரசிக்க தகுந்த வகையில் உள்ளது சிறப்பு.  முக்கியமாக லதா ரஜினிகாந்த் அவர்கள் பாடிய, கடவுள் உள்ளமே கருணை இல்லமே பாடல் ஒரு கிளாசிக் ரகம்.

முத்துமணிச் சுடரே பாடல் ராஜா தொடுத்த இன்னொரு இசை மாலை.

பெரும் கதைக் களம் கிடையாது, ரஜினிகாந்த் என்ற நடிகரின் செல்வாக்கையும், அதோடு ஒரு சிறுமியின் அன்பான ரசனையையும் முடிச்சுப் போட்டு, ஒரு எளிமையான திரைக்கதையை அமைத்து, அதை ஒரு நேர்கோட்டில் பயணிக்கச் செய்திருப்பது இயக்குனரின் வெற்றி.

நட்சத்திரங்கள்

சுறுசுறு என கருப்பு மின்னலாக ரஜினிகாந்தாகவே படம் நெடுக ரஜினி. அக்காலத்து ரஜினியின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காட்சிகள். சிகரெட் புகை வழியும் விரல்களோடு வளைய வரும் ஸ்டைல் ரஜினி, நெற்றி நிறைய விபூதியோடு நிற்கும் ஆன்மீக ரஜினி, குழந்தைகளோடு குதூகலிக்கும் ரஜினி அங்கிள், சிறுமி மீது பரிவும் பற்றும் பிரியமும் கொட்டும் பாச ரஜினி,  யதார்த்த ரஜினி என தன் பாத்திரத்தில் தானாகவே வாழ்ந்து இருப்பார் ரஜினி

பேபி மீனா, பின்னாளில் மிகப்பெரிய நட்சித்திர நடிகை. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்குச் சான்றாக அற்புதமான நடிப்பு. ரோஸியாகவே இன்றும் இவரை சிலர் நினைவில் பதித்து வைத்தித்திருக்கிறார்கள்.

ஒரு திரைப்படத்திற்கு பேக்கேஜிங் மிகவும் முக்கியம். தனித்தனியே எடுக்கப்படும் காட்சிகள் எடிட்டிங் மேஜையில் ஒரு படமாக முழுமை அடையும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை இதில் வரும் தெனாலி ராமன் ஓரங்க நாடகம் பெரிய சிறப்பு.

hqdefault 9

இயக்குனர் கே.பாக்யராஜ், ரஜினியோடு பங்கு பெறும் இந்த நாடகம், கருத்தோடு கலகலப்பையும் இணைத்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து படைத்து இருக்கும்.

ரஜினி படம் என்றால் பட்டையைக் கிளப்பும் சண்டைக் காட்சிகள் நிச்சயம் உண்டு. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இரண்டு  சண்டைக்காட்சிகள்  மட்டுமே. அதிலும் ஒன்று மட்டும் தான்  ரஜினிக்கு.

படத்தில் நாயகி வேடம் என்று தனியாக எதுவும் கிடையாது என்ற போதும், அம்பிகாவிற்கு ரோஸியின் தாயாக ஒரு உருக்கமான பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதை அவர் கவனமாகச் செய்து இருப்பார்.

ராதிகா, ஜெய்ஷங்கர் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் பங்களிப்பு செய்து இருப்பர். எம்.ஜி.ஆர் அவர்கள் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது என்றும் ஒரு தகவல் உண்டு.

சிறப்பம்சங்கள்

ரஜினி மிகவும் குறைந்த நாட்களில் நடித்துக் கொடுத்த படம் இது என்பது கூடுதல் தகவல். ரஜினி வீட்டில் படப்பிடிப்பு நடந்தது கூடுதல் சிறப்பு. படத்தில் ரஜினி தன் சொந்த கார் ஆன பியட் பத்மினியைப்  பயன்படுத்தி இருந்தது ரஜினி ரசிகர்களுக்கான உற்சாக செய்தி

பரபரப்புக்கும் அதிரடிக்கும் பெயரெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மென்மையான தென்றலாக மனம் வருடிய படங்களில் மிகவும் முக்கியமான படமிது.

அன்புள்ள ரஜினிகாந்த் அன்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் ஒரு படம். அன்றைய குழந்தைகள் இன்றைய தங்கள் குழந்தைகளோடு பார்த்து மகிழ ஏற்ற ஒரு படம்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்!
DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
பரபரப்புக்கும் அதிரடிக்கும் பெயரெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மென்மையான தென்றலாக மனம் வருடிய படங்களில் மிகவும் முக்கியமான படமிது. அன்புள்ள ரஜினிகாந்த் அன்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் ஒரு படம். அன்றைய குழந்தைகள் இன்றைய தங்கள் குழந்தைகளோடு பார்த்து மகிழ ஏற்ற ஒரு படம். இளையராஜாவின் பாடல்கள் இன்றும் ரசிக்க தகுந்த வகையில் உள்ளது சிறப்பு.  முக்கியமாக லதா ரஜினிகாந்த் அவர்கள் பாடிய, கடவுள் உள்ளமே கருணை இல்லமே பாடல் ஒரு கிளாசிக் ரகம்.[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: அன்புள்ள ரஜினிகாந்த் - திரை விமர்சனம்
error: Content is DMCA copyright protected!