[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: தீ – திரை விமர்சனம்

Date:

சூப்பர் ஸ்டார் என்ற பிம்பம் ஓரிரவில் கட்டப்பட்டது அல்ல என்பதைக் கடந்த சில வாரங்களாக வந்த ரஜினி பட விமர்சனக் கட்டுரைகள் வாயிலாகப் பார்த்து வருகிறோம்.

80-களின் தமிழ்திரை சரித்திரத்தின் பக்கங்கள் ஓவ்வொன்றிலும் ரஜினி தன் கையெழுத்தை வெகு அழுத்தமாகப் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் வெளியான படம் தீ.

இலங்கை மற்றும் இந்திய பட நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் படம் வெளிவந்திருந்தது.

இயக்கம் : பில்லா R.கிருஷ்ணமூர்த்தி
வசனம் : A.L.நாராயணன்
தயாரிப்பு : சுரேஷ் பாலாஜி
ஒளிப்பதிவு : N.பாலகிருஷ்ணன்
படத்தொகுப்பு : V.சக்ரபாணி

ரஜினியின் பிரம்மாண்ட பில்லா படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு முறை இணைந்திருந்தனர். அதனால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

rajiniகதைச் சுருக்கம்

நாம் வாழும் சமூகத்தின் ஓரங்களில் வாழ்ந்து வரும் தொழிலாளிகள் மற்றும் தினக்கூலிகளின் வாழ்க்கை தான் படத்தின் கதைக்களம்.

ஒரு ஆலையின் தொழிலாளிகள் தங்கள் உரிமைக்காகப் போராடும் போராட்டத்தோடு படம் துவங்குகிறது. போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் தொழிற்சங்கத் தலைவராக நடிகர் ஏவி எம் ராஜன் நடித்து இருப்பார். அவர் மனைவியாக சௌகார் ஜானகி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்,

மூத்தவன் அழுத்தமானவன் அடிதடிக்கு அஞ்சாதவன். அடுத்தவன் அமைதியானவன். அண்ணன் ராஜாவாக ரஜினிகாந்த் மற்றும் தம்பி சங்கராக நடிகர் சுமன். (ஆதி என்று சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த அதே சுமன் தான் )

தொழில் சங்கத் தலைவரான தந்தை முதலாளியால் வஞ்சனையாக மிரட்டப்பட்டுப்  போராட்டத்தைப் பாதியில் கைவிடுகிறார். தொழிலாளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கோடு இருந்த அவர் இதனால் அவமானமும் அவப்பெயரும் அடைகிறார். துரோகி பட்டம் பெறுகிறார். அவச்சொல்லை தாங்க முடியாத அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரது குடும்பம் நிராதரவு நிலையை அடைகிறது. அந்த கணத்தில் இருந்து திரைக்கதையை ஒரு அழுத்தம் கவ்விக் கொள்கிறது.

தலைவர் போன பின் அவர் குடும்பம் அக்கம் பக்கத்தில் இருக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினரின் வசைச் சொற்களுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிறார்கள். ஒரு கட்டத்தில் பள்ளியை விட்டுத் திரும்பும் மூத்த மகன் ராஜாவை சூழ்ந்து வம்பிழுக்கிறார்கள். சிறுவனாக இருந்தாலும் தனித்து நின்று அந்தக்  கூட்டத்தோடு மோதுகிறான் ராஜா.

ராஜாவாக நடித்திருக்கும் அந்தச் சிறுவன், ஒரு வேளை சிறு வயதில் ரஜினி இப்படித்தான் இருந்திருப்போரோ என்று எண்ணும் அளவுக்கு ரஜினியின் உடல் மொழியைத் தன் நடிப்பில் கொண்டு வந்திருப்பான். சிறுவனை வம்படியாக பிடித்து அவன் கையில் “என் அப்பா ஒரு திருடன் ” என்று பச்சைக் குத்தி விடுகிறார்கள்.

அந்த நொடியில் அந்தச் சிறுவனின் அப்பாவித்தனம் இரக்கமின்றி சிதைக்கப்படுகிறது. புன்னகையின்
பூவாணங்களை அவன் முற்றிலும் தொலைக்கிறான்.

தந்தையின் அரவணைப்பிலும், தாயின் அன்பிலும் குளிர்ந்து வளர வேண்டிய அவன் மனத்தில் அனல் கங்குகள் வீசப்படுகின்றன. அது அடங்காத தீயாக ஓங்கி எரிகிறது… அந்த தீ அவன் வாழ்க்கையை எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதைத் தான் திரைக்கதை சொல்லுகிறது

மகனின் கையைப் பார்த்து மனம் வெதும்பும் தாய் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வேறு ஊர் செல்கிறாள். பிழைக்கச் சென்ற ஊரிலும் வறுமையும், கொடும் மனித வல்லூறுகளின் பார்வையும் தொடர்ந்து வருகிறது. வாழ்க்கையே ஒரு தொடர் போராட்டமாக நகர்கிறது. அடித்தட்டு மக்களின் வறண்ட வாழ்க்கையை மெல்லிய தாக்கத்தோடு பதிவு செய்தபடி படத்தின் ஆரம்பக் காட்சிகள் கடந்து செல்கின்றன.

rajiniதம்பியின் படிப்பு தாகம் தணிக்க அண்ணன் தன் பால்யத்தைத் தியாகம் செய்து உழைக்கச்  செல்கிறான். நகரத்தில் அண்ணன் ராஜா உழைக்கத் தம்பி சங்கர் படிக்கிறான்.

தம்பி படித்து, வேலை தேடி அலைகிறான். அண்ணன் துறைமுகத்தில் கூலியாகக் குடும்ப சுமை ஏற்கிறான். கூலி வாழ்க்கையிலும் ராஜாவுக்குப் பல குறுக்கீடுகள் வருகின்றன. அவற்றை விட்டு ஒதுங்காது ஆக்ரோஷமாய் எதிர்த்துக் குறுக்கீடுகளை சிதறடிக்கிறான் ராஜா. தம்பி சங்கர் வேலை கிடைக்காமல் கிடைத்த காதலை வளர்த்துக் கொண்டு இருக்கிறான்.

ராஜா துறைமுகத்தில் ஏற்படும் தகராறில் சில ரவுடிகளை அடித்து விடுகிறான். ராஜாவின் அதிரடி வீரம் அவன் மீது, அந்தஸ்தான “பெரிய” மனிதர்களின் பார்வையை விழச் செய்கிறது. பெரிய மனிதர்களிடம் பெரும் பணம் இருக்கிறது. அந்தப் பெரும் பணத்திற்குப் பின் பெரும் குற்றங்களும் இருக்கின்றன.

ராஜா இப்போது ஒரு இறுகிப் போன பாறை நிலையில் இருக்கிறான். தானும் தன் குடும்பமும் பட்ட காயங்களை ஆற்றும் குணம் பணத்திடம் மட்டுமே உள்ளது என திடமாக நம்பிக்கை வளர்த்து வைத்திருக்கிறான். அந்தப் பணத்தை சம்பாதிக்க எதுவும் செய்யலாம் என்ற முடிவில் இருப்பவனுக்குப்  பெரிய மனிதர்களின் சகவாசம் இனிப்பான வாய்ப்பாகப் படுகிறது.

பாதையில் இருக்கும் பயங்கரங்களை பயம் இன்றி எதிர்கொள்ளத் துணிகிறான். தவறான பாதையில்  பயணம் புறப்படுகிறான். சங்கர் காதலிப்பது காவல் உயர் அதிகாரியின் மகளை. காதலின் பரிசாக காவல் துறை பக்கம் அவன் பார்வை செல்கிறது. வேறு துறைகளில் அவனுக்கு கிடைக்காத வேலை வாய்ப்பு காவல் பணியில் அமைகிறது. சங்கரின் காதலி ராதாவாக நடிகை ஸ்ரீப்ரியா. இளமை துள்ளல் என உற்சாகமாய் வந்து போகிறார்.

ராதாவின் தந்தையாக மேஜர் சுந்தர்ராஜன். கொஞ்சமே வந்தாலும் தோரணையாக வந்து போகிறார். சங்கரை காவல் துறையில் சேருமாறு பரிந்துரை செய்து கதையின் திருப்பதுக்குக் காரணமாவதும் இவரே.

வளர்ந்த சகோதரர்கள் தத்தம் பாதையில் வளர்கிறார்கள். ராஜா நகரமே அலறும் கடத்தல்காரனாக காவல் துறைக்கு சவால் விடும் ஒரு பெரும் குற்றவாளியாக உருவெடுத்து நிற்கிறான். பணம் பங்களா படகு கார் என பவுசாக வலம் வருகிறான்.

ராஜாவின் வாழ்க்கையிலும் ஒரு பெண் நுழைகிறாள்.அவளுக்கும் அவனைப் போலவே ஒரு சோகப் பின்னணி இருக்கிறது. அதைக் காதல் என்பதை விட அவர்கள் இருவருக்குமான தேவைகளைத்  தீர்த்துக் கொள்ளும் ஒரு உறவாகவே அது துவங்குகிறது. ஒரு கட்டத்தில் காதலாக மாறி திருமணம் என்ற இனிமையான நிகழ்வை நோக்கி நகர்கிறது. ராஜவின் காதலி அனிதாவாக இலங்கையைச் சேர்ந்த நடிகை ஷோபா நடித்திருக்கிறார். மாநிற அழகி கண்களில் மயக்கம் சுமந்த படி வருகிறார்.

rajiniசங்கர் சட்டத்தைக் காப்பாற்றும் சாதாரண காவல் அதிகாரியாகக் காக்கியில் வந்து நிற்கிறான். அண்ணன் தம்பி மோதலுக்கான ஒரு சூடான களத்தை இயக்குநர் ரசிகனுக்கு அமைத்து விடுகிறார்.

ஒருத்தன் நல்லவன்… இன்னொருத்தன் வல்லவன்…

ஒருத்தன் அமைதியானவன்.. இன்னொருத்தன் அழுத்தமானவன்…

ஒருத்தன் இனிமையானவன்… இன்னொருத்தன் வாழ்க்கை கொடுத்த அடிகளால் இரும்பானவன்..

தீ திரையில் மட்டும் அல்ல. காணும் பார்வையாளர்களாகிய நம் சிந்தனையிலும் பிடிக்கிறது.

யாருக்கு ஆதரவளிப்பது எனப் பார்வையாளனைக் கதை யோசிக்க வைக்கிறது. தம்பி நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் கடத்தல்கார அண்ணனுக்கு பின் ஓங்கி நிற்கும் நியாயங்களும் காயங்களும் ரசிகனின் ஆதரவை அண்ணன் பக்கம் திருப்புகின்றன. அது மட்டுமில்லாமல் அண்ணனாகத் திரையில் தெரிவது ரஜினிகாந்த் என்ற நடிகர்

மோதலில் முதல் கட்ட வெற்றியை சங்கர் பெறுகிறான். அண்ணனின் குற்றப் பின்னணியை வீட்டில் போட்டு உடைத்து தாயைத் தன்னோடு அழைத்துக் கொண்டு கிளம்புகிறான். தன் வாழ்க்கையின் பிடிப்பான குடும்பத்தையும் தன் தாயின் அருகாமையையும் இழந்து வேரறுந்த மரமாய் நிலை குலைகிறான் ராஜா.

ராஜா உள்ளிட்ட கடத்தல்காரர்களைப் பிடிக்கும் பொறுப்பு சங்கருக்குக் கொடுக்கப்படுகிறது. முதலில் பாசத்தில் தடுமாறும் சங்கர் பின் கடமை உணர்ந்து பொறுப்பை சவாலாக ஏற்றுக் கொள்கிறான்.

ராஜாவைப் பிடிக்க அதி தீவிரமாய் களம் இறங்குகிறான். ராஜாவின் கூட்டம் சங்கரின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் தொழில் நலனுக்கு குறுக்கில் நிற்கும் சங்கரைக் கொல்ல முடிவு செய்கிறார்கள். ராஜா அதைத் தடுத்து சங்கர் தன் தம்பி என்ற உண்மையைச் சொல்கிறான்.

கிட்டத்தட்டப் பல ஆண்டுகள் கழித்து இதே போன்றதொரு ஒரு காட்சி அமைப்பு தளபதி படத்தில் வரும்.  அதிலும் ரஜினி தான் அண்ணன். இரு படங்களையும் பார்த்தவர்களால் ரஜினியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.

அண்ணன் குற்றங்களால் ஆளும் நகரத்துக்குத் தம்பி காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்று வருகிறான்.

தன் இரு மகன்களுக்கும் இடையில் நடக்கும் போரில் சிக்கி உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்டும் சிக்கலான தாய் பாத்திரத்தை சௌகார் மிகவும் உணர்ந்து செய்து இருப்பார். கோபம், ஆற்றாமை, இயலாமை, அன்பு, பாசம், பரிதவிப்பு, இழப்பு என அ த்தனை உணர்வுகளையும் அருமையாகத் தன் நடிப்பில் பிரதிபலித்திருப்பார் சௌகார்.

அவர் நடிப்புக்குத் தீனி போடும் காட்சிகள் படத்தில் ஏராளம். குறிப்பாகத் தன் மூத்த மகனை வேட்டையாட கிளம்பும் இளைய மகனிடம் கை நடுங்கத் துப்பாக்கியை எடுத்துக் கொடுத்து விட்டுப்  பேசும் காட்சி தொண்டையை கணக்க செய்யும் ஒரு இடம்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் நடக்கும் போராட்டத்தில் விதி யார் பக்கம் சாய்கிறது? மகன்களில் மோதலில் உள்ளம் பொங்கி நிற்கும் தாயின் நிலை என்ன?

இதைப் பரபரப்பான ஒரு கிளைமேக்சில் உணர்ச்சி கொந்தளிக்கும் தொனியில் முடித்து வைத்திருப்பார் இயக்குநர்.

படத்தின் முடிவைப் பார்த்து அது சரியா? தவறா? என்று மனம் சிந்திப்பது தனியொரு விவாதம். அதை நாம் இங்கு செய்யப் போவதில்லை

ரஜினியின் அபார நடிப்பு

ரஜினிக்கு மிகவும் வித்தியாசமான ஒரு வேடம். மேம்போக்காகப் பார்த்தால் ஒரு கூலி, கடத்தல்காரன் ஆகிறான் என்பதாகத் தோன்றும், ஆனால், நன்றாக கவனித்துப் பார்த்தால், தன் இளம் பிராயத்து சந்தோஷங்களைத் தொலைத்து அழுத்தப்பட்ட ஏக்கங்களோடு வாழும் ஒரு இளைஞனின் வேடம் அது என்று விளங்கும்.

நாயகன் ராஜாவின் பாத்திரம் ஒரு மன அழுத்தம் மிகுந்த பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது. சந்தோஷத்தின் சாயை கூட அண்டாத ஒரு இறுக்கமான முக பாவத்தோடு படம் நெடுக ரஜினி இயல்பாக மலரும் சிரிப்பைக் கூட தவிர்த்து நடித்திருப்பார். எதையோ இழந்து தேடும் ஒரு விட்டேத்தி பார்வை, எதிலும் பற்று அற்ற ஒரு மனோபாவம் என ரஜினியின் மேனரிசங்களில் நுணுக்கமான உணர்வுகள் ஒளிந்து கொண்டிருக்கும்.

காதலியுடன் தனித்து இருக்கும் தருணங்களில் கூட ரஜினியின் முகபாவங்களில் கனிவு இருக்கும் சந்தோசம் இருக்காது. முகத்திலும் உடல்மொழியிலும் வாழ்க்கை தந்த காயங்களின் உணர்வுகளை துல்லியமாக தன் தேர்ந்த நடிப்பின் மூலம் பிரதிபலித்து இருப்பார் ரஜினி.

ரஜினிக்கு படத்தில் நீளமான வசனங்கள் கிடையாது. ஊசி போல் குத்தும் தொனியிலே அவரது பெரும்பான்மையான வசனங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

துறைமுகத்தில் ரவுடிகளுடன் மோதி காயம் பட்டு வீடு திரும்பும் ராஜாவிடம் சௌகார் பேசும் நீளமான வசனம் ஒன்று வரும்.

“ஊருக்காக ஏன்டா சண்டைக்கு போறே உலகத்தில் ஏழையை ஒருத்தரா அடிக்கிறாங்க.. எல்லாரும் தான் அடிக்கிறாங்க… அவங்க எல்லாருக்கும் நீ தலைவனாகப் போறியா..”

சவுகார் பேசும் போது முழு காட்சியிலும் மௌனமாக நிற்கும் ரஜினி ஒரே ஒரு வரியை பதிலாக சொல்லுவார்….

“கேக்காம… என்னையும் ஓடி போகச் சொல்றீங்களா?

அந்த வரியைச் சொல்லும் போது ரஜினியின் குரலில் ஹீரோயிசம் தெரியாது. மாறாகத் தன்னை அனாதையாகத் தவிக்க விட்டுச் சென்ற தந்தை மீதான ஆறாத ஆற்றாமையும், இயலாமை கலந்த ஏக்க உணர்வும் மேலிடும். முகத்தில் இறுக்கத்தின் ஊடே அந்த ஏக்கத்தை மின்னல் போலக் கொண்டு வந்திருப்பார். ரசிக்கத்தக்க நடிப்பு.

பேராசை கொண்ட வில்லன் மனோகரிடம் வாத்துக் கதை சொல்லி முடிக்கும் போதும் ரஜினி காட்டும் ஆர்ப்பாட்டம் இல்லாத கெத்து. அழகு.

மனோகர், ஆர்ப்பாட்டமான வில்லத்தனம் செய்கிறார். ஆரம்பம் முதல் முடிவு வரை குறைவில்லாத கொடுமைகளைச் செய்து ரசிகர்களின் வயித்து எரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.

தம்பியைத் தன் கூட்டம் கொல்ல முடிவெடுத்ததை அடுத்து, தம்பியை அழைத்து ஊரை விட்டு போகுமாறு கேட்டுக் கொள்ளும் காட்சியும் படத்தின் சிறப்புக் காட்சிகளில் ஒன்று.

“தன்னிடம் இருக்கும் சொத்து சுகம் கார் பேர் வசதிகளைப் பட்டியலிட்டு.. உனக்கு என்ன தான் கொடுத்தது உன் உத்யோகம்? உன்னிடம் என்ன தான் இருக்கு?” எனச் சீறும் ராஜாவிடம், தம்பி சங்கர் வெகு அமைதியாக “என்கிட்டே அம்மா இருக்காங்க ” என்று பதில் கொடுக்கும் போது, அது வரை சீறிய ராஜா (ரஜினி) அப்படியே நொறுங்கி நிற்கும் காட்சி… கிளாஸ்.

thee 10 e1538717032554சண்டைக் காட்சிகளில் மாஸ் தருணங்களை அறிமுகப் படுத்தியது ரஜினி படங்களே. தீ படத்தில் வரும் ஆலை (godown ) சண்டைக் காட்சி தமிழ் படங்களில் அமைக்கப்படும் மாஸ் சண்டைகளுக்கு இன்றளவும் இலக்கணமாக இருந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. தன்னைத் தேடித் திரியும் ரவுடிகளை, தானே தேடிப் போய் அவர்கள் இடத்திலேயே சந்திக்கும் அந்த இடம்..படத்தின் உச்ச பட்ச சிலிர்ப்பு. நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து எதிரிகளைச் சந்திக்கும் பார்வை “ரஜினி ஸ்பெஷல்”

தானே கதவைப் பூட்டி சாவியை எதிரியிடம் கொடுத்து.. “வச்சிக்கோ உன் பாக்கெட்டில் இருந்து நானே எடுப்பேன் ” என்று சவால் விடும் ரஜினி மெய்யாலுமே நெருப்பு டா.

சண்டை முடிந்து சாவியைக் கொடுத்து பாக்கெட்டில் வைக்கச் சொல்லி எடுக்கும் இடம் பக்கா மாஸ். அப்படித் தள்ளாடி வந்து குழாயடியில் தண்ணீரைக் குடித்து முகம் கழுவும் காட்சியில் ரஜினி நடிப்பு படு யதார்த்தம்.

படத்தில் மிக முக்கிய ஒரு பாத்திரம் 786 என்ற எண் கொண்ட கூலி டோக்கன். படம் நெடுக ராஜாவின்  நெஞ்சை நெருங்கியே வரும். ஓரிரு முறைகள் ராஜாவின் உயிரைக் கூட காப்பாற்றி விடும். சுவாரஸ்யமான ஒரு பாத்திரப் படைப்பு. இறுதியில் ராஜா அந்தட் டோக்கனைப் பிரிவது போன்று அமைக்கப்பட்ட காட்சி நல்ல ஒரு குறியீடு.

ரஜினி தன் தாய்க்காக கோயில் படி ஏறி வந்து இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் காட்சியில் கோபம், இயலாமை, எல்லாம் கலந்து ஒரு உருக்கமான வேண்டுதல் வைப்பார் பாருங்க.. நெகிழ்ச்சி.

ஆண்டவனிடம் தன் வேண்டுதலை இவ்வாறாக முடிப்பார். “அழாதவன் அழுது முடிச்சிட்டேன் தொழாதவன் தொழுது முடிச்சிட்டேன்., என் அம்மாவை பொழைக்க வை “ வசனங்களின் சிறப்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு

கோயிலில் தாய் மடியில் ஒரு வளர்ந்த குழந்தையாய் ரஜினி தலை சாய்த்து தன் இறுக்கம் தளர்த்தி பேசும் உச்சக்கட்ட காட்சி, தீயென எரிந்த உள்ளம் குளிர்ந்து விட்டதாக எடுத்துச் சொல்லும் நல்லதொரு முடிவுரையாக அமைகிறது. அந்தக் காட்சியில் ரஜினியின் நடிப்பு ரசிகர்களிடம் பரிசாக ஓரிரு கண்ணீர் துளிகளையாவது அள்ளும் என்பது நிச்சயம்.

இசை மற்றும் பாடல்கள்

படத்திற்கு இசை MS விஸ்வநாதன்.
பாடல்கள்: கவியரசு கண்ணதாசன்

கொஞ்சம் நீளமான படத்துக்கு கொஞ்சம் கம்மியான பாடல்கள் தான்.

மொத்தம் மூன்று பாடல்கள். முதல் பாடலான ” சுப்பண்ணா சொன்னாருண்ணா சுதந்திரம் வந்ததுன்னு “ இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தும் ரஜினி பாட்டாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனத்தில் நிற்கவில்லை. தீ படத்தின் தீம் இசை குறிப்பிட்டு சொல்ல வல்லது. இன்றும் பல செல்பேசிகளின் ரிங்க்டோன்களாக ஒலிக்கின்றது.

படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இல்லை என்ற குறையை மனோரமா வரும் ஓரே காட்சியில் போக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

தேங்காய் சீனிவாசனுக்குச் சின்னதாய் ஒரு வேடம். ரஹீம் பாயாக மனதில் பதிகிறார்.

படத்தின் தயாரிப்பாளரும் பழம் பெரும் நடிகருமான பாலாஜி ஒரு ஸ்டைல் ஆன கடத்தல் தாதா ஜெகதீஷ் வேடத்தில் வருகிறார். படத்தில் அவர் பயன்படுத்தும் சொகுசு கார்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன. படத்தின் முக்கியத் திருப்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார். ஒரு ஜெண்டில்மேன் வில்லனைத் திரையில் கொண்டு வருகிறார்.

சிறுவயது ரஜினி ஷு பாலிஷ் போட்டு, அதற்கு கூலியாக விட்டெறியப்பட்ட காசை, கையில் எடுத்துக்  கொடுக்குமாறு கேட்கும் இடம், ரஜினி படங்களில் வரும் முத்திரை காட்சிகளின் வரிசையில் முக்கிய இடம் பெற்ற ஒன்றாகும். பின்னர் வளர்ந்து அதே பாலாஜியிடம் வேலைக்குச் சேரும் போது, ரஜினியிடம் பணத்தை விட்டெறிய, அந்த சிறு வயது நிகழ்வை ஞாபகப்படுத்தி, தான் இப்போதும் வீசியெறியப்படும் காசைத் தொடுவதில்லை என்று ரஜினி சொல்லும் இடம் முத்திரை காட்சியின் தொடர்ச்சி.

தீ – ரஜினியின் அழுத்தமான நடிப்புக்கு ஒரு சான்று. ரஜினியின் பல கொண்டாட்டமான படங்களுக்கு இடையில் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய ஒரு படம் ” தீ “என்பதில் சந்தேகம் இல்லை.

rajiniபிகு : இந்தியில் சலீம் ஜாவித் கதை எழுதி உருவான மாபெரும் வெற்றிப் படம் தீவார். நடிகர் அமிதாப்பச்சனின் திரைப்பயணத்தில் முக்கியமான படம். அதுவே தமிழில் தீ என்று மறு உருவாக்கம் கண்டது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்தி தீவார் படத்தோடு தீ படத்தை ஒப்பீடு செய்து விவாதங்கள் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது ஒரு சிறப்பு.

DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
தீ - ரஜினியின் அழுத்தமான நடிப்புக்கு ஒரு சான்று. ரஜினியின் பல கொண்டாட்டமான படங்களுக்கு இடையில் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய ஒரு படம் " தீ "என்பதில் சந்தேகம் இல்லை. [ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: தீ - திரை விமர்சனம்