28.5 C
Chennai
Sunday, February 25, 2024

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: தம்பிக்கு எந்த ஊரு – திரை விமர்சனம்

Date:

1980 களில் ‘டயனோரா’ என்று ஒரு டிவி இருந்தது. அதற்கான விளம்பரம் மிகவும் பிரபலம். ஊசி மரக் காடுகளின் ஊடே அலை அலையாகப் புரளும் சிகையை அசைத்த படி கால் சராய்களின் பாக்கெட்டிற்குள் கை விட்டுக் கொண்டு ஒரு இயல்பான நடை நடந்து வருவார் ரஜினி. வெகு அழகாக இருக்கும்.

“தம்பிக்கு எந்த ஊரு” படத்தில் வரும் பாடலின் துவக்க காட்சி அது. விளம்பரத்துக்காக வெகு நேர்த்தியாகப் பயன்படுத்தி இருப்பார்கள்.

CnVDVzTXEAEXHAh

ரஜினியின் அந்த அழகு நடையை  அப்போதைய தலைமுறைத் தமிழர்கள் ஸ்டைல் என்பதற்கு இது தான் அடையாளமெனக் கொண்டாடினார்கள். நீண்ட காலம் ரஜினி ஸ்டைல் என்ற முத்திரையோடு நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.

“தம்பிக்கு எந்த ஊரு” எண்பதுகளில் ரஜினிக்கு ஒரு முக்கியமான படம். சுய அடையாளச் சிக்கல் தான் படத்தின் அடிக் கருத்து.

கதைச் சுருக்கம்

பட்டணத்துப் பெரும் பணக்காரர் சந்திரசேகரின் செல்ல மகன் பாலு. தந்தையின் நிழலில் வாழும் இளைஞன். வேகம், கோபம், உல்லாசம் என இலக்கின்றிப் பயணிக்கிறான்.

பாலுவின் மொத்த குணாதிசயங்களையும் படத்தின் டைட்டில் ஓடும் போதே இயக்குநர் நமக்குக் காட்டி விடுகிறார். பாலுவின் குணத்தை இயக்குனர் நமக்குக் காட்டும் அதே தருணத்தில், காரிலிருந்து இறங்கிப் பின்னங்காலால் கார் கதவை அடைத்து விட்டு, வாயிலே புகையும் சிகரெட்டோடு, அறிமுகம் ஆகும் ரஜினி. ரசிகனுக்குத் தன் ஸ்டைல்களால் விருந்து பரிமாற ஆரம்பித்து விடுகிறார். மது, புகை, பெண், அடங்காக் கோவம் என படம் துவங்கும் முன்னரே பாலு நமக்கு அறிமுகம் ஆகி விடுகிறான்.

ஊர் எங்கும் போகுமிடங்களில் எல்லாம் வம்பிழுத்து வரும் பாலுவின் போக்கினால் வருத்தமடையும் அவன் தந்தை சந்திரசேகர் அவனுக்கு புத்தி புகட்ட நினைக்கிறார்.

பாலுவிடம், “அவன் தன் பிள்ளை என்பதால் மட்டுமே அவனால் இந்த உலகத்தில் இப்படி பொறுப்பில்லாமல் வாழ முடிகிறது என்றும், தன்னுடைய அடையாளம் மட்டும் இல்லையென்றால் அவன் ஒன்றுமில்லை ” எனவும் கூறுகிறார். தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் இந்த உரையாடல் சவாலில் முடிகிறது. தன்னுடைய தன்மானம் சீண்டப்பட்டதால் தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டுவதாய் புறப்படுகிறான் பாலு.

சவாலின் விதிப்படி, பாலு ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு தங்கி தான் யார் என்பதை எந்நிலையிலும் யாருக்கும் தெரிவிக்காமல் ஒரு வருடம் இருக்க வேண்டும். இந்த ஒரு வருடம் முடியும் முன் அவன் ஊர் திரும்பக் கூடாது.

சவால் திரைக்கதைக்கான களத்தை வலுவாக அமைத்து விடுகிறது. பாலுவை அந்த சவால் என்ன பாடு படுத்தப் போகிறதோ, இல்லை பாலு அந்த சவாலுக்காக யார் யாரை என்ன பாடு படுத்தப் போகிறானோ என ரசிகர்கள் படத்தோடு ஒன்ற ஆரம்பிக்கிறார்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பும் பாலுவுக்கு ஒரு பழைய துணிப்பையில் அவனுக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே பொருட்களை வைத்து, தன் கிராமத்து நண்பன் கங்காதரனுக்கு பாலுவைப் பற்றிய சிபாரிசு கடிதம் ஒன்றையும் கொடுத்து அனுப்புகிறார் சந்திரசேகர்.

வாழ்க்கையில் முதல் முறையாக தந்தையின் நிழல் விட்டு அகன்று, உலகம் பார்க்க வெளியே வரும் பாலுவைப் பார்த்து உலகம் கேட்கும் முதல் கேள்வி

தம்பிக்கு எந்த ஊரு?

maxresdefault 2

தந்தை சொல் படி கங்காதரனைச் சந்திக்க, உத்தமபாளையம் என்ற ஊருக்கு வந்து சேர்கிறான் பாலு. அது ஒரு விவசாய பூமி. உழைத்து வாழும் மக்களின் வசிப்பிடம்.

கங்காதரன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒழுக்கம் போற்றும் உத்தமர் அவர். கிராமத்தில் விவசாயம் பார்த்து நேர்மையான வாழ்க்கை நடத்தி வருகிறார். அவருக்கு அளவான அன்பான அழகான குடும்பம். ஒரு மகன், ஒரு மகள். தனியாகத்  தாயின்றி தந்தையின் துணையில் வளர்ந்த பாலுவுக்கு இந்தக் குடும்ப உறவுகளின் மூலம் கிடைக்கும் அனுபவம் புதிதாகவும் இனிதாகவும் இருக்கிறது. கிராம வாசம் அதை விட ரொம்பேவே புதுசாக இருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக புது வாழ்க்கைக்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்கிறான் பாலு. உழைப்பின் உன்னதத்தை அனுபவரீதியாக உணர்ந்து கொள்கிறான். தன் உழைப்பில் விளைந்த பணத்தின் மேன்மை பாலுவுக்குப் புலப்படுகிறது.

சவால், கிராமத்து வாழ்வு, கங்காதரனின் கண்டிப்பான வழிகாட்டுதல், அவர் குடும்பத்தினரின் அன்பு என எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், பாலுவின் வாழ்வில் அதே கிராமத்தில் வசிக்கும் சுமதி என்ற அழகான பணக்கார பெண் குறுக்கிடுகிறாள்.

சுமதி பணக்கார வீட்டுச் செல்லப் பெண். பணத்திமிர் கொஞ்சம் அதிகம் படைத்தவளாக இருக்கிறாள். நம் நாயகன் பாலுவுக்கு இயல்பிலேயே கோபம் அதிகம், அநியாயம் கண்டால் பொங்கி எழுந்து தட்டிக் கேட்கும் குணம் கொண்டவனாக இருக்கிறான். இருவரின் குணங்களும் இரு வேறு துருவங்கள். இதனால் இருவருக்கும் மோதல் உருவாகிறது.

ரஜினி படத்தில் வரும் சவால் – மோதல் காட்சிகள் என்றால் குதுகாலத்திற்கு ஒரு போதும் குறைச்சல் இருக்காது. தன்னை வம்பிழுக்கும் ஆதிக்க சக்திகளை, அதிலும் திமிர் பிடித்த எதிர் பாலினத்தாரை ரஜினி என்னும் நாயகன் வேகம், விவேகம் என இரண்டும் கலந்து எதிர்கொள்ளும் விதம் ஒரு சாமான்ய பார்வையாளனை வசப்படுத்த என்றுமே தவறியதில்லை. தம்பிக்கு எந்த ஊரு அந்த பார்முலாவின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று.

ரஜினிகாந்த் ஒரு ஆணாதிக்கவாதியா? இந்த விவாதம் காலம் காலமாக நடந்து வந்திருக்கிறது. அவரும் இந்தக் கேள்விக்கு தன் படங்கள் வாயிலாகப் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து பதிலளித்து வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கூட “தாயாகும் பெண்கள் கொடுமை பேயாகும் போது வேப்பிலை அடிப்பேன் அம்மா” என்று ஒரு பாடல் வரி வருகிறது.

சுமதிக்கும் பாலுவுக்கும் எலி – பூனையுமாக மோதல் விளையாட்டு நடக்கிறது. அதில் பாலுவின் கையே ஓங்கி இருக்கிறது. அந்தக் காட்சிகள் கலகலவென கதையை நகர்த்த உதவுகின்றன.

ஒரு கட்டத்தில் பாலுவை ஆள் வைத்து அடித்துக் கயிற்றில் கட்டி குதிரையில் இழுத்து வரச் செய்கிறாள் சுமதி. இயல்பிலேயே அநியாயத்துக்கு அடி பணியாத பாலு, சுமதியின் அகங்காரத்தை துணிச்சலாகத் தட்டிக் கேட்க முற்படுகிறான். ஒரு ஆண்மகனாகத் தன்னால் அவளை அடக்கியாள முடியும் என்று கோடிட்டுக் காட்டுகிறான். சுமதி பாலுவிடம் பெண் என்ற சலுகை பெற்றுத் தப்பித்து மீண்டும் அவனைச் சீண்டுகிறாள். துணிவிருந்தால் தன் வீட்டிற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு சவால் விடுகிறாள். சவாலுக்குள் இன்னொரு சவால் முளைக்கிறது. ரசிகனும் பரபரப்பாகிப் படத்திற்குள் ஆழ்ந்து விடுகிறான்.

தனது ஆண்மைக்கு விடப்பட்ட சவாலை ஜெயிக்க, பாலு காவலை மீறி சுமதியின் அரண்மனை போன்ற வீட்டுக்குள் நுழைகிறான். பாலு சுமதியின் அறைக்குள் சென்று அவளுக்கு பாடம் புகட்ட அவளைக் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிகிறான். இளமையின் வேகத்தில் பாலு செய்யும் செயல் மோதலை முடித்துக் காதலுக்கு வழி ஏற்படுத்துகிறது.

Thambikku Endha ooru Song - En vaazhvile varum

மோதல் வளர்ந்த அதே வேகத்தில் இருவருக்குள்ளும் காதல் தீ பரவுகிறது.
சுமதிக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், இந்தக் காதலால் அந்தத் திருமணத்தை நிறுத்துகிறாள் சுமதி. திருமணம் நின்றதால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் அடாவடியில் இறங்குகிறார்கள். கட்டாயத் திருமணம் நடத்த முற்படுகிறார்கள்.

அந்த கும்பலோடு பாலு எவ்வாறு மோதி வெல்கிறான்? தன் தந்தையிடம் போட்ட சவாலில் ஜெயிக்கிறானா? என்ற கேள்விகளுக்குத் தொடரும் விறுவிறுப்பான கிளைமாக்ஸில் பதில் தருகிறார் இயக்குநர்.

நடிகர் பட்டாளம்

படத்தில் நடிகர் பட்டாளம் கொஞ்சம் அதிகம் தான். சின்னச் சின்னப் பாத்திரங்கள் என்ற போதும் நடிகர்கள் அந்த வேடங்களை ஒளிரச் செய்கிறார்கள். குறிப்பாகத் திரையரங்க முதலாளியாக ஓரே ஒரு காட்சியில் வந்து போகும் ஓமக்குச்சி நரசிம்மன். அவர் வரிக்கு வரி கொடுக்கும் அந்த “டோக்கும்” சத்தம், அவரது இருப்பைப் பிரஸ்தாபப்படுத்தி விடுகிறது.

அடுத்து யானைப் பாகனாக வரும் ‘என்னத்த கண்ணையா‘, இரு காட்சிகள் தான் என்றாலும் நிறைவு.

சுலோச்சனாவின் மாப்பிள்ளையாக நடிகர் சத்யராஜ், பெண் பார்க்கும் படலத்தில் அடக்க ஒடுக்கமாக அறிமுகமாகிப் பின்னர் நயமான வில்லத்தனம் காட்டி ரஜினியோடு கிளைமாக்ஸில் ஒரு ஆக்ரோஷமான சண்டையிடும் இடம் பலே. ஒரு சில காட்சிகள் என்றாலும் சத்யராஜ்க்கு ஒரு வலுவானதொரு வேடம். கிடைத்த வாய்ப்பை அவரும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

maxresdefault 1 2

ஜனகராஜும் கோவை சரளாவும் நகைச்சுவைக் கொடி கட்ட ஆரம்பித்த காலம் அது. நாயகிக்குத் தோழியாக சரளா, காரியஸ்தனாக ஜனகராஜ் கனக்கச்சிதப் பொருத்தம். படம் நெடுக வருகிறார்கள்.

படம் நெடுக வரும் குணச்சித்திரப் பாத்திரங்கள் ஏராளம். பாலுவின் தந்தையாக வி.எஸ். ராகவன் படத்தைத் துவக்கி வைத்து, பின்பு முடித்து வைக்க வருகிறார். படத்தின் அடி நாதமான சவாலுக்குச் சொந்தக்காரர் இவரே. அமைதியாக அழுத்தமாகத் தன் பாத்திரத்தைச் செய்து முடிக்கிறார்.

பணக்காரத் திமிர் பிடித்த நாயகி வேடத்தில் மாதவி. அழகு, ஆணவம் எனத் துவங்கி கனிவு, காதல் எனச் சிறப்பு சேர்த்து இருப்பார். முதல் பாதியில் துள்ளும் குதிரையின் முரட்டுத்தனத்தோடும், பின் பாதியில் நளினமான மானின் கொஞ்சலோடும் மாதவியின் நடிப்பு அசத்தல்.

மாதவி உடையலங்காரம் படத்தின் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம். பல வண்ணங்களில் பல அலங்காரங்களில் ஜொலிப்பார். காதணிகள் முதல் அவர் கைப்பை வரை தனிக்கவனம் செலுத்தி இருந்ததை அந்தக் காலத்தில் எத்தனை பேர் கூர்ந்து கவனித்தார்களோ நமக்குத் தெரியாது.

images 4

மாதவியின் தந்தையாக வினுசக்கரவர்த்தி, பாசமிகு அப்பாவாகவும் வியாபார நோக்கம் கொண்ட செல்வந்தராகவும் இரு முகம் காட்டுகிறார்.

வில்லனாகப் பழைய நடிகர் ஸ்ரீகாந்த், விதம் விதமாக கோட்டுப் போட்டு நாதரித்தனத்தை நாசுக்காக செய்யும் வேடம். சண்டை எல்லாம் போடுகிறார்.

நிழல்கள் ரவியும் படத்தில் இருக்கிறார்.மாதவியோடு திருமணம் நிச்சயம் ஆன மாப்பிள்ளையாக வருகிறார். மாதவியைக் காரில் கடத்திப் போகிறார். சின்னதாய் ஒரு வில்லன் வேடம் தான். நடித்திருக்கிறார்.

படத்தில் குறிப்பிடத்தக்க குணச்சித்திர பாத்திரங்களின் வரிசையில் முதல் இடம் செந்தாமரை செய்திருக்கும் கங்காதரன் வேடம். மனிதர் மிலிட்டரி கேப்டனாகவே வாழ்ந்து இருக்கிறார். அந்த முறுக்கு மீசை, மிரட்டல் பார்வை, கணீர் குரல். பொறுப்பான குடும்பத் தலைவராகவும், பாலுவுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் ஆசானாகவும் பிரகாசித்திருக்கிறார்.

அடுத்த முக்கிய குணச்சித்திர வேடம் சுலோச்சனா. கங்காதரனின் மகள் அழகியாக வருகிறார். பாலுவை ஒரு தலையாகக் காதலித்து ஏமாற்றம் அடைகிறார். ரஜினிக்கு கிராமத்து வாழ்க்கையை இவர் கற்றுக் கொடுக்கும் காட்சிகள் சுவாரஸ்யமானவை. இயல்பான நடிப்பினால் அந்தக் காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்திருப்பார் சுலோச்சனா. காதலைச் சுமந்து வெட்கத்தில் மலர்வதாகட்டும் பின்னர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு மனதைத் தேற்றிக் கொண்டு வாழ்க்கைப் படுவதாகட்டும் நடிப்பில் சில பரிணாமங்கள் காட்டியிருப்பார் சுலோச்சனா.

mqdefault

ரஜினிக்குத் துணையாக வரும் மாஸ்டர் விமல் அவருக்கு நல்ல ஒரு பக்க வாத்தியம். ரஜினிக்கும் சிறுவனுக்குமான உரையாடல்கள் நினைத்து நினைத்துச் சிரிக்கும் ரகம்.

இளையராஜாவின் இசை

படத்திற்கு ரஜினி ஒரு தூண் என்றால், இன்னொரு தூண் இளையராஜா. சில பாடல்கள் கேட்டால் அதில் காதல் தெரியும். இன்னும் சில பாடல்களில் காதலித்தவர்களுக்குத் தம் காதல் தெரியும். காதலின் தீபம் ஒன்று பாடலைக் கேட்டால் காதலிக்காதவனுக்கும் காதலிக்கத் தெரிய வரும். காதலிக்கச் சொல்லி மனம் ஆசையைத் தூண்டும். அப்படி ஒரு பாட்டு.

ராஜவின் மெட்டு காதலின் தேன் ரசச் சொட்டு.

கல்யாண மேளச்சத்தம், பாடல் கிராமத்து வாழ்க்கையை வார்த்தையிலும், இசையிலும் கோர்த்து நம் செவிகளுக்கும் விழிகளுக்கும் மாலையாக அணிவித்து இருக்கும்.

ஆசை கிளியே… பாடல் கலாட்டா கலகலப்பு என கலந்து கட்டி இசை வெள்ளம் பாய்ச்சி நிற்கும்.

என் வாழ்விலே வரும்.. பாடல் மொத்த உணர்வுகளுக்கும் ஒரு இனிய இசை வருடல்.

காதல் காட்சிகளுக்கு குறும்பிசை, சண்டைக் காட்சிகளுக்கு தெறிக்கும் அனலிசை என இளையராஜா இசை முரசறைந்து இருப்பார்.

ரஜினி பட்டணத்துப் பணக்கார இளைஞனாக முரட்டு கெத்து, தந்தை விடுக்கும் சவாலை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை, கிராமத்தில் நுழையும் போது ஒரு அல்டாப்பு, வேலைகளின் இழுப்பில் அல்லாடும் போது அப்பாவித்தனம் கலந்த குறும்பு, கங்காதரன் குடும்பத்தோடு பழகும் போது பாசம், நாயகியுடன் மோதும் போது ஆண்மை கலந்த துறுதுறுப்பு, ஊடல் காதலாய் கனியும் போது நெகிழ்ச்சி, வில்லன்களைப் பந்தாடும் போது ஆக்ரோஷம் என ரஜினியின் அதகளத்தை படம் முழுக்கக் காணலாம்.

சண்டைக் காட்சிகளில் அலாதியான சுறுசுறுப்பு, காமெடியில் தனிக்கொடி என ரஜினி பிராண்ட் அம்சங்கள் படத்தில் ஏராளம். கிராமத்துச் சங்கதிகள் ஒவ்வொன்றாக அப்பாவியாக எசக்கு பிசக்குக் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது ரஜினி காட்டும் முகபாவங்கள் அட்டகாசம். கலகலப்பின் உச்சம்.

விலங்குகளோடு கலாட்டா

தம்பிக்கு எந்த ஊரின் இன்னொரு சிறப்பம்சம் படத்தில் வரும் விலங்குகள் அவைகளோடு ரஜினிக்கு அமைக்கப்பட்டிருக்கும் நகைச்சுவை காட்சிகள். இன்றளவும் காமெடி சேனல்கள் அந்த காட்சிகளைக் காட்டி கல்லாக் கட்டுகின்றன என்றால் பாருங்கள்.

  • பல ரஜினி படங்களில் பாம்பு செண்டிமெண்ட் வந்திருந்தாலும் இந்தப் படமே அதற்குத் துவக்கம்
  • அடுத்தது யானை. அதற்கு கோயிலில் ரஜினி காசு கொடுக்கும் இடம் காமெடி கலக்கல்.
  • மாட்டைச் சுற்றிச் சுற்றி வந்து ரஜினி பால் கறக்க முயலுமிடம் வெடி சிரிப்பு.

இப்படி ஒண்ணு இருக்கோ ” படத்தில் ரஜினி அதிகம் உச்சரிக்கும் வாசகம். “நாய் மாதிரி சாப்பிடக் கத்துக்கிட்ட நீ மனுஷன் மாதிரி வாழக் கத்துக்கலையே ”  என்பது போகிற போக்கில் ரஜினி உதிர்த்துச் செல்லும் வாக்கியம் தான்.

படம் வந்த ஆண்டு – 1984

இயக்கம் – ராஜசேகர்

தயாரிப்பு – மீனா பஞ்சு அருணாச்சலம்

இசை – இளையராஜா

சண்டை – ஜூடோ ரத்தினம்

இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து கிராமத்தில் வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கையை , உணவுப் பழக்கங்களில் இருந்து உடை, உறைவிடம் என சகலத்தையும் நம் கண் முன் வெகு நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இரண்டரை மணி நேரத்தில் பாலுவோடு நாமும் உத்தமபாளையம் சென்று, அங்கிருக்கும் வாய்க்கால் வரப்போரம் நடந்து, கரும்புக் காட்டில் நுழைந்து, பம்ப் செட்டில் குளித்து, கேப்பைக் களி சுவைத்து, வாழ்ந்து வந்த ஒரு அனுபவத்தை நமக்கு நிறைவாய் தருகிறார் இயக்குநர். அதில் விசுவரூபம் எடுக்கிறது அவரது வெற்றி

உழைப்பின் உயர்வையும், ஒருவன் தன் தீவிர உழைப்பினால் சுய அடையாளம் பெற்று இந்த உலகத்தில் தனக்கென ஒரு முகவரி பெற முடியும் என்பதையும் அழுத்தமாகச் சொல்லும் படம் தான் தம்பிக்கு எந்த ஊரு.

தம்பிக்கு எந்த ஊரு பார்க்கப் போன தமிழகம், படம் பார்த்துத் திரும்பி வரும் போது சொன்ன தீர்ப்பு. இந்த தம்பிக்கு நம்ம ஊருய்யா என்பதே.

DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து கிராமத்தில் வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கையை, உணவுப் பழக்கங்களில் இருந்து உடை, உறைவிடம் என சகலத்தையும் நம் கண் முன் வெகு நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் அருமை. உழைப்பின் உயர்வையும், ஒருவன் தன் தீவிர உழைப்பினால் சுய அடையாளம் பெற்று இந்த உலகத்தில் தனக்கென ஒரு முகவரி பெற முடியும் என்பதையும் அழுத்தமாகச் சொல்லும் படம் தான் தம்பிக்கு எந்த ஊரு. [ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: தம்பிக்கு எந்த ஊரு - திரை விமர்சனம்
error: Content is DMCA copyright protected!