28.5 C
Chennai
Tuesday, February 27, 2024

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: மிஸ்டர் பாரத் – திரை விமர்சனம்

Date:

“நான் தான் பெரிய மனுஷன்ன்னு யாரும் நினைக்கக் கூடாது. அவனுக்கு அப்பனும் பொறந்து இருப்பான். “

இது பொதுவாக ஊர்ப்பக்கம் சொல்லப்படும் ஒரு கருத்து . மிஸ்டர் பாரத் படத்தின் மையக்கருவும் இது தான்.

தனி மனிதனின் உழைப்பு, அதன் மூலம் அவன் அடையக் கூடிய முன்னேற்றம். இது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒரு முக்கியப் பேசும் பொருள். தடைகளைத் தாண்டி ஒரு மனிதன் லட்சியக் கொடி ஏற்றும் கதை என்றால் மக்களின் ஆதரவுக்கும் ஆர்வத்திற்கும் கேட்கவா வேண்டும்.

இந்தக் கருத்தை அடியொற்றிக் கொஞ்சம் மசாலா கலந்து, பொழுது போக்காக ஒரு திரைப்படமாக எடுத்தால் அது ஏற்படுத்தும் அனுபவம் அலாதியானது. அதுவும் அதில் ரஜினி என்ற மக்களின் விருப்ப நாயகன் நடித்திருக்கும் போது மேலும் ஆழமான தாக்கம் ஏற்படுத்துகிறது.

என்னடா ஒரு சினிமா படத்துக்கு இவ்வளவு பில்டப்பா எனக் கேட்பவர்களுக்கு, சுய முன்னேற்றத்திற்கு ஏற்ற உந்து சக்தி கொடுக்க எத்தனையோ வழிகள் உண்டு. நல்லதொரு புத்தகம், பயிலரங்கம், பேச்சு, பாட்டு என நீளும் பட்டியலில் சினிமாவுக்கும் முக்கிய இடம் உண்டு.

mr bharath 5874தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் புரட்சித்தலைவரின் சினிமா படப்பாடல்களுக்கு இந்த குணம் கொஞ்சம் அதிகமாக உண்டு. அதற்குப் பிறகு அந்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களும் பாடல்களும் பிடித்துக் கொண்டன என்று சொல்லலாம்.

சூப்பர் ஸ்டார் படங்களில் மாஸ் அறிமுக காட்சிகளுக்கென ஒரு தனி இலக்கணமே உண்டு. அந்த இலக்கணம் ஒரே இரவில் உருவானதல்ல, படத்துக்கு படம் அழகு கூட்டப்பட்டு வந்த ஒரு சங்கதி.

சூப்பர் ஸ்டார் அறிமுக அசத்தல்களின் ஆரம்ப காலங்களில் குறிப்பிடத்தக்க படம் மிஸ்டர்.பாரத்.
“பாறைகளுக்கு வெடி வைத்திருக்கும் இடத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையைக் காப்பாற்ற உதவிக்குரல் எழுப்பும் பெண் குரல் பின்னணியில், தாவிப் பாய்ந்து பிள்ளையை மீட்டு முகம் காட்டும் ரஜினி…பின் தன் வாயில் புகையும் பீடியில் வெடிகளைப் பற்ற வைத்து பாறை மீது வீசி நடக்கும் ரஜினி”  என பக்கா சூப்பர் ஸ்டார் முத்திரையோடு திரையில் பாரத் ஆக அறிமுகமாகிறார் ரஜினி.

இந்தப் படம் வெளியான ஆண்டு 1986

இயக்கம் : எஸ்பி முத்துராமன்

இசை : இளையராஜா

தயாரிப்பு : ஏவி எம் புரொடக்ஷ்ன்ஸ்

ஒளிப்பதிவு : TS விநாயகம்

திரைக்கதை : விசு

கதை சலீம் ஜாவித் ( திரிஷூல் என்ற இந்தி படம் தான் மிஸ்டர்.பாரத் க்கான மூலம்)

கதைச் சுருக்கம்

படத்தின் துவக்கத்திலேயே ஒரு பிளாஷ் பேக் ஒன்றை வைத்துக் கதைக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைத்து விடுகிறார் இயக்குநர்.

கோபிநாத் என்ற இளைஞர். தன் துறையில் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறார். கிராமத்திற்குக்  கட்டுமான பணிக்கு வருகிறார். அங்கு சாந்தி என்ற ஒரு இளம் பெண்ணைச் சந்திக்கிறார். சாந்தி சித்தாள் வேலை செய்து வருகிறாள். சாந்தியைச் சுற்றி சுற்றி வளைய வந்து அவளைத் தன் காதல் வலையில் விழ வைக்கிறார் கோபிநாத். பின் திருமண ஆசை காட்டி தன் இச்சைக்கும் இணங்க வைக்கிறார்.

பட்டணம் சென்று எல்லாவற்றையும் சரி செய்து விட்டு, சாந்தியை வந்து அழைத்துப் போவதாக வாக்குறுதி கொடுத்து செல்கிறார் கோபிநாத். ஆனால், அவர் பட்டணத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதைத் தன் கிராமத்தார் மூலம் அறிகிறாள் சாந்தி. தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கிறாள்.

கோபிநாத்தின் வாரிசு அந்த அபலைப் பெண் சாந்தியின் வயிற்றில் வளர்கிறது. தனக்கும் பிறக்க இருக்கும் பிள்ளைக்கும் கோபிநாத்தைச் சந்தித்து நியாயம் கேட்கப் பட்டணம் செல்கிறாள் சாந்தி. அங்கு கோபிநாத் அவளை வார்த்தைகளில் திராவகம் வீசி அவமானப்படுத்தி விரட்டி விடுகிறார்.

தனக்கு நடந்த அநியாயங்களுக்கு பதில் கேட்கத் தன் மகன் நிச்சயம் ஒரு நாள் உன்னைத் தேடி வருவான் என்ற சபதம் போடுகிறாள் சாந்தி.

mr bharathஉனக்கு இருக்கும் அதே திமிர் உன் மகனுக்கும் இருக்கும், அவன் வந்து உன்னை நிற்க வைத்துக் கேள்வி கேட்பான் ” என அந்தத் தாய் எரிமலையாக வெடிக்கிறாள். பின் ஊர் திரும்புகிறாள்.

பிளாஷ் பேக் நிறைவுற்றுப் படம் தற்காலத்திற்குத் திரும்புகிறது.

தந்தையின் அடையாளமின்றி வேங்கையெனத் தாயின் நிழலில் வளர்ந்து நிற்கிறான் மகன் பாரத். கடைசி காலம் நெருங்கி நிற்கும் தருவாயில், மகனிடம் தன் கடந்த கால உண்மைகளைக் கூறி சபதத்தை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டு உயிரை விடுகிறாள் தாய்.

தாய் ஏற்றி வைத்த கனலை நெஞ்சில் சுமந்து சபதம் நிறைவேற்றத் தந்தையைத் தேடி புறப்படுகிறான் பாரத்.

அறிவு பலம், போராட்டக்குணம், லட்சிய வெறி இந்த எண்ணங்களோடு தந்தையை எதிர்கொள்ள பட்டணம் வந்து இறங்குகிறான் பாரத் என்ற இளைஞன். பட்டணத்தின் பெரும் பணக்காரர். கட்டுமானத் தொழிலின் ராஜா. பண பலம், அது கொடுத்த ஆணவம், அகங்காரம் என உயரத்தில் நிற்கிறார் கோபிநாத் என்ற பெரியவர்.

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் தொழில் போராட்டத்தை, சுவையான திரைக்கதையாக்கி ரசிக்கும் படியான ஒரு திரைப்படமாகப் படைத்து இருக்கிறார் இயக்குநர்.

பட்டணம் வந்து ஒரு வருடத்திற்குள் தன் சபதத்தில் வென்று எடுக்க, ஆகஸ்ட் 31 என்ற தேதியை இலக்காக வைத்துக் களத்தில் இறங்குகிறான் பாரத். கையில் காசின்றி நெஞ்சில் வெஞ்சினத்தோடு இலட்சியத்தின் உந்துதல் துணை நிற்க, பாரத் பட்டணத்தை சுற்றி அலைந்து கோபிநாத் சாம்ராஜ்யத்தைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறான்.

எந்த ஒரு இலக்கை அடையவும் திட்டமிடுதல் முக்கியம். திட்டமிட தகவல்கள் மிகவும் அவசியம். திட்டம் போட்ட பின் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற கூட்டணி முக்கியமாகிறது. இந்த கட்டத்தில் பாரத், சஞ்சீவி என்ற டீ கடைக்காரனோடு சிநேகிதம் பிடிக்கிறான். அவன் மூலம் கோபிநாத்துக்கு சொந்தமான நிலம் பற்றி கிடைத்த தகவலைக் கொண்டு தனக்கு சாதகமான திட்டம் ஒன்றை தயாரிக்கிறான்.

கோபிநாத் கோட்டைக்குள் முதல் கல் எறிகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோட்டையில் ஓட்டை போடுகிறான். வியாபாரத்தில் கோபிநாத்தை மெல்ல முந்தும் பாரத், கோபிநாத் வேலையாட்களைத் தன் பக்கம் சாய்த்து தனக்கான காரியங்களை நிறைவேற்றிக் கொள்கிறான்.

தன்னால் தொழிலில் விழும் அடிகளால் கோபிநாத் நிலை குலையும் போது, அவர் குடும்பம் வாயிலாக உணர்ச்சி ரீதியான தாக்குதல்களை நடத்தத் துவங்குகிறான் பாரத். கோபிநாத் மகன் அசோக், சஞ்சீவியின் தங்கை மீது காதல் கொள்கிறான். அதையும் தன் ஆட்டத்துக்குத் தகுந்த பகடையாக பாரத் பயன்படுத்தி கொள்கிறான்.

அதே போல், கோபிநாத் மகளின் காதல் கதையையும் தன் நாடகத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறான் பாரத். கோபிநாத் கிட்டத்தட்ட எல்லாம் இழந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார். இனி தனக்கு இருக்கும் ஒரே வழி பாரத்தின் கதையை முடிப்பது என அதற்கும் துணிகிறார் கோபிநாத்.

பாரத் கோபிநாத்தை அவர் தவறுகளை உணர செய்து, தன் தாயின் சபதத்தை நிறைவேற்ற தான் கொடுத்த வாக்கை காப்பாற்றினானா? இல்லை, அதற்கு முன்னரே கோபிநாத் தன் ரத்தமான மகனை, தான் போட்ட வஞ்சகத் திட்டம் காரணமாக இழக்கிறாரா? என்பதே மிஸ்டர் பாரத் படத்தின் பரபரப்பான கிளைமேக்ஸ் சொல்லும் செய்தியாகும்.

இசை

இளையராஜாவின் இசை படத்திற்கு பலம். குறிப்பாக படத்தின் இரண்டு பாடல்களில் வேகமும் கோபமும் உயர்ந்து தெரிகின்றன. அந்தப் பாடல்களை முதலில் பார்ப்போம்.

ஜானகி குரலில் ஒலிக்கும், எந்தன் உயிரின் நிழலே … கண்ணில் வளர்ப்பாய் கனலே… பாடல் வார்த்தைகளால் உணர்வுகளைத் தட்டி எழுப்பும்.

என் தாயின் மீது ஆணை… எடுத்த சபதம் முடிப்பேன்… முந்தைய பாடல் தாய் மகனுக்கு வைக்கும் கோரிக்கை என்றால் இந்த பாடல் மகன் பொல்லாத தந்தைக்கு விடுக்கும் எச்சரிக்கை.

பாடலின் வைரமுத்து வரிகள் நம்மை ஒரு பக்கம் இழுக்க, பாடிய மலேசியா வாசுதேவனின் குரல் நம்மைக் கொந்தளிக்க வைக்க, திரையில் வேதனையும் குரோதமும் கலந்து நிற்கும் ரஜினி நம் இதயத்தை துளைத்து எடுக்க, பாடல் காலங்களை வென்று இன்றும் நம் காதுகளில் இன்றும் அதே வேகம் குறையாமல் எதிரொலிக்கிறது.

காத்திருக்கேன் கதவை திறந்து உள்ளுக்கு வாடி.. இந்தப் பாடல் வந்த காலத்தில் பிரிட்ஜ் எல்லாம் சாமான்யன் வீட்டுப் பொருளே கிடையாது. கோடையில் விளையாடி விட்டு, யார் வீட்டிலாவது பிரிட்ஜ் இருந்தால் அதில் குளிர்ந்த நீர் கேட்பது ஒரு புறம், கொஞ்ச நேரம் அந்தக் கதவைத் திறந்து அந்தப் பக்கம் நின்று காற்று வாங்கும் சுகம் இருக்கே… அதெல்லாம் இப்போ ஏசியில் வாழும் போதும் கிடைக்காத சுகம். ப்ரிட்ஜ்க்குள் இருக்கும் ரஜினி அம்பிகாவை கிசுகிசுவென அழைத்து கும்மாளமாய் போடும் ஆட்டம் போடுவார். அன்றைய நிலையில் நமக்கு எல்லாம் அது ஹிமாலய குளிர் கொடுத்த ஒரு பாடல்.

images 6பச்ச மொளகா அது காரமில்ல மாமனாருக்கு நெஞ்சில் ஈரமில்லை.. இந்தப் பாடல் ரோட்டோரக் கடை உணவு போல. தரத்தை விட சுவை அதிகம்.

என்னம்மா கண்ணு.. சில பாடல்கள் இசையால் சாகாவரம் பெறுவதுண்டு. இன்னும் சில பாடல்களுக்கு இசையோடு இணைந்த வரிகளால் அந்த வரம் வாய்க்கப் பெறுவதுண்டு. வெகு சில பாடல்களுக்கு நடிகர்களால் அப்படி ஒரு சிறப்பு கிடைக்கும். அதில் முக்கிய இடம் இந்தப் பாடலுக்கு உண்டு.

வில்லன் vs நாயகன், அப்பனுக்குப் பாடம் சொல்லும் மகன் என்ற கோணங்களைத் தாண்டி சத்யராஜ் என்ற வில்லாதி வில்லனைப் படு ஸ்டைலாக எதிர்கொள்ளும் ரஜினிகாந்த் என்ற ஆளுமையே இன்று வரை இந்தப் பாடலை தூக்கி நிறுத்தி வந்திருக்கிறது என்பது உண்மை.

என்னமா கண்ணு பாடல் மிஸ்டர். பாரத் படத்திற்கு ஒரு முகவரியாக மாறிப் போனது என்று சொன்னால் அது மிகையாகாது

நட்சத்திரங்கள்

பாரத்தின் தாய் பாத்திரம், படத்துக்கு ஆணி வேர் என்று சொல்லலாம். கொஞ்சமே என்றாலும் அழுத்தமானது ஆழமானது. ஊர்வசி விருது பெற்ற நடிகை சாரதா அந்தப் பாத்திரத்தை ஏற்று இருப்பார். தயங்கித் தயங்கி சத்யராஜைக் காதலிப்பது ஆகட்டும் பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சீறுவது ஆகட்டும் இவர் நடிப்பு சிறப்பு.

நாயகி உமாவாக நடிகை அம்பிகா. உமா கோபிநாத்திடம் காரியதரிசியாகப் பணியாற்றுகிறாள். சிபிஐ அதிகாரியாக பாரத் உமாவுக்கு அறிமுகம் ஆகிறார். பாரத், உமாவைத் தன் பக்கம் பணம் கொடுத்து வாங்கப் பார்க்கிறான். பாரத் பக்கம் சாய மறுத்து தன் முதலாளிக்கு விசுவாசம் காட்டும் நேர்மையான ஊழியர் வேடம்.

ஆனால் சூழ்நிலை காரணமாக, தனக்குப் போட்டியாக உருவெடுக்கும் பாரத்துக்கு ஆதரவாக வேவு பார்த்ததாக கோபிநாத்தால் குற்றம் சாட்டப்பட்டு உமா வேலையைத் துறக்கும் படி நேர்கிறது. அந்த நிலையில் பாரத் ஆதரவுக் கரம் நீட்டுகிறான். பாரத்திடம் வேலைக்குச் சேரும் உமா, பாரத்தின் சபதம் அறிந்து அவன் மீது காதல் கொள்கிறாள். அது தவிர அம்பிகாவுக்கு படத்தில் பெரிய வேலை வேறு எதுவுமில்லை. இரண்டாம் பாதியில் படம் முடியும் போது தான் வருகிறார்.

டீக்கடைக்காரன் சஞ்சீவியாக வருவது கவுண்டமணி, ரஜினியோடு சேர்ந்து படத்தின் கலகலப்புக்கு குத்தகை எடுத்து கொள்கிறார். சத்யராஜை இவர் வம்படியாக கலாய்க்கும் இடங்களில் சிரிப்பு கொப்பளிக்கிறது.

டெண்டர் சம்பந்தமாக அதிகாரியைச் சந்தித்து இவர் பேசும் வசனங்கள் பட்டாசு ரகம்.. வெடி சிரிப்பு. ஒரு பாட்டுக்கு சென்னை பாணியில் ரஜினியுடன் சேர்ந்து குத்தாட்டமும் போடுகிறார்.

சஞ்சீவிக்கு தங்கையாக நடிகை விஜி. லேசான கவர்ச்சி இணைந்த குணச்சித்திர வேடம். பணக்கார வீட்டு பையனைக் காதலிக்கும் வேடம்.

0எஸ் வி சேகர் சத்யராஜின் மகன் அசோக் வேடத்தில் வருகிறார். ஏழை டீ கடைக்காரப் பெண்ணைக்  காதலிக்கிறார். தந்தையை எதிர்த்து பாரத் பக்கம் லேசாக சாய்கிறார். கொடுத்த வேலையை குறைவின்றி செய்ய முயன்று இருக்கிறார்.

சத்யராஜின் மனைவியாக வரும் வடிவுக்கரசி, மகளாக வரும் நடிகை ஜோதி சந்திரா எல்லாருக்கும் கொஞ்சமே என்றாலும் கதையின் போக்குக்கு உதவும் பாத்திரங்கள்.

டெல்லி கணேஷ் நேர்மையான அரசாங்க அதிகாரியாக ஒரு சின்ன பாத்திரத்தில் வருகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னும் இரண்டு நடிகர்கள். முதலாமவர் படத்தின் திரைக்கதையாசிரியர் விசு அடுத்தவர் வில்லன் நடிகர் ரகுவரன்.

குமரேச கவுண்டராக வரும் விசு சிரிக்கவும் வைக்கிறார்.. சிந்திக்கவும் வைக்கிறார்.

ரவுடி மைக்கேல் வேடம் அடாவடி நிறைந்தது. பாரத்தின் கட்டுமானத் தொழில் வாழ்க்கையை சண்டையோடு துவக்கி வைக்கும் மைக்கேல், பின் படத்தை முடித்து வைக்க கிளைமேக்ஸ் சண்டை காட்சியில் தோன்றுகிறார். இந்த வேடத்தைக் கொடூரம் குறையாமல் செய்திருப்பது ரஜினியின் ஆஸ்தான வில்லன் நடிகர்களில் முக்கிய இடம் பிடித்த மறைந்த நடிகர் ரகுவரன். இரு சண்டைக் காட்சிகளிலும் கண்களாலே அனலை கிளப்புகிறார்.

மிஸ்டர் பாரத்தில் நாயகன் வேடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு பிரதானம் வில்லன் வேடத்துக்கும் உண்டு. ரஜினியின் முந்தைய பல வேடங்களில் அடியாள், துணை வில்லன் என வந்து போன சத்யராஜ்க்கு இதில் அடித்திருக்கிறது ஜாக்பாட். ரஜினியின் தந்தை என வயதான தோற்றத்தில் வந்தாலும் ரஜினிக்கு இணையான திரை இருப்பு இவருக்கு இப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சத்யராஜும் அந்த வாய்ப்பைக் குறைவின்றி பயன்படுத்தி கொண்டார் என்பது படம் பார்க்கும் அனைவருக்குமே புரியும்.

சத்யராஜின் வில்லதனத்திற்கு அவரது தோற்றம் பெருமளவில் கைகொடுத்திருக்கிறது. அதிகப்படியான மெனக்கெடல் இல்லாத நடிப்பை வைத்தே பெருமளவில் மிரட்டி விடுகிறார்.

வசனங்கள்

படத்தில் வசனங்களுக்காக நம்மை சபாஷ் போட வைக்கும் காட்சிகள் மிகவும் அதிகம். அவைகளைப் பற்றி கொஞ்சம் விரிவாய் பேசுவோம்..

ரஜினி-சத்யராஜ் சம்பந்தமான சந்திப்புக் காட்சிகளில் நக்கல், கிண்டல், கேலி எல்லாம் மோலோங்கி நிற்கின்றன. அதையும் தாண்டி அவர்கள் இருவருக்கும் இடையிலான ஒரு எரிமலை கோபம் புகைந்து கொண்டே இருக்கிறது.

அந்த கோபத்தின் அழுத்தம் திரைக்கதைக்கு சரியான வலு சேர்க்கிறது. பார்வையாளர்களுக்கு படத்தோடு ஒன்றிப் போகப் பெரும் காரணமாகவும் அமைகிறது.

சத்யராஜும் ரஜினியும் வியாபாரப் போர் புரியும் தொலைபேசி உரையாடல் காட்சிகள், வசனங்களின் கூர்மையாலும், ரஜினி சத்யராஜ் இருவரது நடிப்பாற்றலும் வேறு தளத்திற்கு கொண்டு செல்ல படுகின்றன.

தன் சாதுர்யத்தைப் பயன்படுத்தி கோபிநாத்துக்கு கிடைக்க வேண்டிய கான்ட்ராக்ட்டைத் தட்டி பறிக்கும் பாரத்,

“என்னம்மா கண்ணு சவுக்கியமா? ஸ்பென்சர் சோடா agency எடுக்கவா.. முதல் சோடா நீங்க குடிக்குறீங்களா?”

இப்படி முதல் உரையாடலை சத்யராஜ்க்கு போனைப் போட்டு கெத்தாக ஆரம்பித்து வைக்கிறார் ரஜினி. அட ஆட்டம் ஆரம்பம்.. என நாமும் நிமிர்ந்து உட்கார்ந்து கவனம் தொலைக்காமல் படத்தில் முழு ஈடுபாடு காட்டத் துவங்குகிறோம்.

பதிலுக்கு பாரத்தை அடுத்த கான்டராக்டில் வீழ்த்தும் கோபிநாத் போனில் பாரத்தை அழைத்து “என்னமா கண்ணு சவுக்கியமா? என்னை ஊருக்குள்ளே கோபிநாத்து கோபிநாத்து அப்படின்னு கூப்பிடுவாங்க. உனக்கு மட்டும் ஒரு சின்ன பார்ட்டி கொடுக்கலாம்ன்னு பாக்குறேன்.. காரணம் ஒண்ணும் பெரிசு இல்லை.. நேத்து பெய்ஞ்ச மழையிலே இன்னிக்கு முளைச்ச காளான் ஒண்ணு என் கிட்ட வால் ஆட்டிச்சு.. ஆட்டலாமோ.. அதான் ஒரு ரூபா கத்திரிக்கோல் வச்சு கட் பண்ணிட்டேன். ஆபிசல்லே பானை இருக்கா அதில்லே இருந்து சில்லுன்னு தண்ணி எடுத்து குடிப்பா ” என்பார்.

பலே சரியான போட்டி என நாமும் கன்னத்தில் கை வைத்து அடுத்து பாரத் என்ன செய்ய போகிறானோ என ஆர்வம் ஆகிறோம்.

பாரத் நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் உடனே திருப்பி கொடுக்கிறான். தந்தை வெல்ல வேண்டிய வியாபாரத்தை தன் மதிநுட்பத்தினால் வெல்லும் பாரத்.. தந்தையை அழைத்து போனில் பேசும் அந்த பேச்சு..
“ஊருக்குள்ளே என்னை பாரத்து… பாரத்துன்னு கூப்பிடுவாங்க.. உங்களுக்கு ஒரு சின்ன பார்ட்டி தரலாம்னு…பார்ட்டி எதுக்குன்னு கேளுங்க ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன பிளேடால் அதாவது பாரத்ன்னு ஒரு பிளேடு வச்சு அறுத்துட்டேன் “
என ரஜினி கொடுக்கும் பதிலடி இருக்கே.. அந்த வசனத்தை ரஜினி வெளியிடுவதில் இருக்கும் தோரணையும் குரல் மொழியும் அபாரம். வசன முடிவினில் ரஜினி உதிர்க்கும் அந்த சிரிப்பு அற்புதமான பிற்சேர்க்கை.

ரஜினியும் சத்யராஜும் போனில் உரசும் போதே அனல் தெறிக்கிறது என்றால், நேரில் சந்திக்கும் போது ஏற்படும் வார்த்தை மோதல்களில் வானவேடிக்கையே நிகழ்கிறது.

0 1அம்பிகாவுக்குப் பரிந்து பேச சத்யராஜ் அலுவலகம் வரும் ரஜினியிடம், ” நான் எதாவது தப்பு செய்யறதுக்குள்ளே வெளியே போயிடு ” என்று சத்யராஜ் சொல்ல, “நீங்க செய்த தப்புன்னாலே தானே சார் நான் வெளியேவே வந்தேன் “ என்று ரஜினி கொடுக்கும் பதில் அட போட வைக்கிறது.

தான் கட்டிய அநாதை ஆசிரமம் திறக்க சத்யராஜை  ரஜினி அழைக்க வரும் போது  நடக்கும் வார்த்தை விளையாட்டு இன்னொரு ரசனைக்குரிய காட்சி

“சிங்கத்தோட குகையில் சிறு நரிக்கு என்ன வேலை? “

“அடிப்பட்ட சிங்கம் கருவுதா? உறுமுதா? ன்னு பாக்க வந்தேன் “

“சிறுநரியைக் கண்டிச்சு விட்டுரலாமா? கடிச்சு குதறலாமா? ன்னு யோசனை பண்ணிட்டு இருக்கு “

“கண்டிக்குறதுக்கு உரிமையும் இல்ல, கடிக்குறதுக்கு திறமையும் இல்ல “

சபாஷ் போட வைக்கும் வசன ஜாலங்கள்.இவ்வாறு ரஜினியும் சத்யராஜும் போட்டி போட்டு ரசிகர்களின் ரசனைக்கு பந்தி பரிமாறும் தருணங்கள் படத்தில் ஏராளம்.

அதே போல, இடைவேளை கட்டம் இருக்கே, சரியான சூடு பறக்கும் வார்த்தை பரிமாற்றங்கள்.

“நான் வியாபாரத்தில் ஒரு திமிங்கலம் “ என்று கொக்கரிக்கும் சத்யராஜிடம்
“அந்த திமிங்கலம் தொண்டையில் இந்த அயிரை மீன் சிக்குனா, அந்த திமிங்கலம் கிளோஸ் “ என்று ரஜினி மீசை முறுக்கும் இடம் தீப் பொறித் தூறல் !

ரஜினி படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் என்றாலே ரசிகர்களின் குதுகாலத்திற்கு குறைவிருக்காது. சண்டைக் காட்சிகளில் ரஜினிக்கு என்று ஒரு தனி வழி 80-களிலே வகுக்கப்பட்டது. அது படத்துக்குப் படம் மெருகு ஏற்றப்பட்டு ரஜினி ஸ்டைல் என்ற ராஜபாட்டை உருவெடுத்தது.

ரகுவரன் கூட்டத்தோடு மோதும் முதல் சண்டைக் காட்சியில் இதைக் காணலாம், ரகுவரனின் ஒவ்வொரு அடிக்கும் பதிலாக தலை கேசம் பறக்க ” நாளை காலை பதினோரு மணி “ என ரஜினி திருப்பி திருப்பி சொல்ல, அடுத்த காட்சி ரஜினியின் சண்டைத் திருவிழா என நமக்குப் புரிந்து போகிறது. மனம் உற்சாக நிலையை அடைந்து விடுகிறது.

ரஜினி படங்களில் ரஜினி சட்டென அடிக்க மாட்டார். முதலில் அடிக்க விட்டு வாங்கிக் கொள்வார். பின் தானும் திருப்பித் தாக்க முடியும் என்று அடுத்தவர்களிடம் அழுத்தம் திருத்தமாக சொல்லுவார். அப்போது பெரும்பாலும் வில்லன் கோஷ்டி ரஜினியை ஏளனம் செய்வார்கள். அதற்குப் பின் தான் ரஜினியின் பதிலடி துவங்கும்.. அடிகள் ஒவ்வொன்றும் இடியென இறங்கும், சண்டையின் முடிவில் ரஜினியின் பஞ்ச் கண்டிப்பாக இருக்கும்.

இந்தப் படத்தின் மூலம் தான்  “கிளோஸ்” , “என்னமா கண்ணு” போன்ற வார்த்தைகள் தமிழகத் திரை ரசிகர்களிடமும் சாகாவரம் பெற்றன.

ரஜினி காந்த்

ரஜினிக்காக அளவெடுத்து செதுக்கிய ஒரு பாத்திரம் தான் பாரத். கதையாசிரியர் கற்பனையில் உதித்த பாரத் என்ற அந்த சாமான்யன் வேடத்துக்கு தன் அசாதாரண நடிப்பால் மிஸ்டர் என்னும் கெத்து கூட்டி தன் திரைவரிசையில் ஒரு சொத்தாகக் கொண்டு நிறுத்தி இருக்கிறார் ரஜினி.

இந்தப் படத்தில் ரஜினிக்கு வேறு இரு கிளை வேடங்களும் உண்டு. மந்தைவெளி மன்னாரு என்ற ஒரு வேஷம். இது தான் நீ சொன்ன பணக்கார குடிசையாப்பா? என லுங்கி கட்டிக் கொண்டு வந்து கவுண்டமணியோடு சேர்ந்து செம ரகளை செய்கிறார்.

hqdefault 1அடுத்தது குமரேச கவுண்டர் வேஷம், வெளுத்த தலை, கருப்பு உடையைச் சுற்றிய வெள்ளை அங்கவஸ்திரம் என பணக்கார தோரணை குறையாமல் சத்யராஜை வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார். இரு வேடங்களும் கொஞ்ச நேரமே என்றாலும் மக்களை மிகவும் கவர்கின்றன.

ரஜினிக்கும் சரி, ரஜினி ரசிகர்களுக்கும் சரி, இது ஒரு முழு விருந்து. ஜனரஞ்சகமான கதைக் களம். தன் முத்திரை ஸ்டைல்களால் அசத்துகிறார் ரஜினி. சத்யராஜோடு மோதும் போது வேகம்..விவேகம்.. கோபம், கவுண்டமணியோடு கொண்டாட்டமான காமெடி, அம்பிகாவோடு மெல்லிய காதல், சாராதாவோடு வரும் ஒரே காட்சியானாலும் அதில் தனையனாகத் தாய் பாசத்தில் உருக்கம் எனத் தன் நடிப்பில் பல சுவைகளைக் காட்டி பரவசப் படுத்தி இருக்கிறார்.

படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் கிட்டத்தட்ட மொத்தப் படத்தையும் ரஜினியே சுமக்கிறார். சத்யராஜ் ஆங்காங்கு தோள் கொடுக்கிறார். ரஜினி இருந்தாலே போதும் படம் ஜெயிப்பதற்கு என்ற எண்பதுகளின் தமிழ் திரையுலக நம்பிக்கையை வலுப்படுத்திய இன்னொரு முக்கியமான படம் தான் மிஸ்டர்.பாரத் !

மிஸ்டர்.பாரத் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.

DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
ரஜினிக்கும் சரி, ரஜினி ரசிகர்களுக்கும் சரி, இது ஒரு முழு விருந்து. ஜனரஞ்சகமான கதைக் களம். தன் முத்திரை ஸ்டைல்களால் அசத்துகிறார் ரஜினி. சத்யராஜோடு மோதும் போது வேகம்..விவேகம்.. கோபம், கவுண்டமணியோடு கொண்டாட்டமான காமெடி, அம்பிகாவோடு மெல்லிய காதல், சாராதாவோடு வரும் ஒரே காட்சியானாலும் அதில் தனையனாகத் தாய் பாசத்தில் உருக்கம் என தன் நடிப்பில் பல சுவைகளைக் காட்டி பரவசப் படுத்தி இருக்கிறார். இளையராஜாவின் இசை அருமை![ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: மிஸ்டர் பாரத் - திரை விமர்சனம்
error: Content is DMCA copyright protected!