திண்ணைக் கிழவி
பா.பாரதிராஜா (பாரதி தமிழ்) எழுதி அனுப்பிய கவிதை!
அசைபோட பல்லில்ல, ஆனாலும் அசைக்காத நாளில்ல.! வெத்தல வாசமும் வெள்ளந்தி நேசமும் பொதைஞ்சுதான் கெடக்குது பொக்கை வாயிக்குள்ள.! சொல்கேட்க ஆளில்ல, ஆனாலும் சொல்லாத நாளில்ல! அரைச்ச பொடிக் கணக்கா நரைச்ச முடிக் கணக்கா அம்புட்டு கெடக்குது அனுபவம் அதுக்குள்ள.! உடுக்கை போல கை நடுங்கும் கொட்டப் பாக்கு எடுக்கயில; உரலுங்கூட இசை முழுங்கும் உலக்கை புடிச்சு இடிக்கயில.! சிறுவாடா சில்லறைய முடிஞ்சுக்குவா சீலையில; முட்டாயி வாங்கிக்கன்னு கொடுத்துடுவா கேட்கயில.! சிசிடீவி சின்ன டீவி இவ இருந்தா தேவையில்ல; இவ சொல்லும் கதை முன்னே அவதாரும் மிகையில்ல.! ஆடாத தலையக்கூட ஆட்டியாட்டி பேசுறதும், காதோரம் வளையத்த காட்டிக் காட்டி பேசுறதும் அழகுன்னு சொன்னாங்க அசலூருக்காரங்க.! அடியே.. தொண்ணூறத் தொட்டவளே, தொங்குஞ் செவி கொண்டவளே.. தானாவே தலையாடும் நீ பேசத் தண்டட்டி தூளியாடும்.! நினைச்சுப்பாத்தா பேரழகி நீதானடி திண்ணைக் கிழவி.! உன்னயத்தான் பல நாளா தேடுகிறேன் காணவில்ல, உன்னையிழந்த துக்கமோ என்னவோ இன்னைக்குப் பல வீட்டில் திண்ணையையும் காணவில்ல.! -பா.பாரதிராஜா (பாரதி தமிழ்)