நேஷனல் ஜியோகிராபிக் (National Geographic) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புகைப்படத்திற்கான விருது ஒன்றை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான போட்டியை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசன் டோடோரோவ் (Jassen Todorov) என்பவர் எடுத்த புகைப்படமே இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்பட விருதை தட்டிச் சென்றிருக்கிறது.

பாலைவன குப்பைகள்
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மொஜாவே பாலைவனத்தில் தான் இந்தப் புகைப்படமானது எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மே மாதத்தில் தன்னுடைய சிறிய ரக விமானமான 1976 Piper Warrior – ல் மொஜாவே பாலைநிலத்திற்கு மேலே பறந்துகொண்டிருந்த போது ஜேசன் புகைப்படத்தைப் பதிவு செய்திருக்கிறார். சாகச விரும்பியான இவருக்கு அந்தப் பரந்து விரிந்த பாலைவனத்தின் அனைத்து இடங்களும் அத்துப்படி. இந்நிலையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோல்க்ஸ்வேகனின் சேமிப்புக் கிடங்கை ஜேசன் எடுத்த புகைப்படம் தான் முதல் பரிசை வென்றிருக்கிறது.
இந்தக் கார்களில் பெரும்பான்மையானவை ஆடி, வோல்க்ஸ்வேகன் போன்ற சொகுசுக்கார்கள் ஆகும்.
விற்காமல் போன கார்கள்
2015 ஆம் ஆண்டு முதல் விற்காமல் போன, உரிமையாளர்களின் புகாரின் பெயரில் திரும்பப்பெறப்பட்ட இந்தக்கார்கள் மாபெரும் இடத்தை அடைத்து நிற்கின்றன. இந்தக் கிடங்கிற்கு அருகே விக்டர் வில்லே (Victorville Airport) விமானநிலையம் உள்ளது. பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட விமானங்கள் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தக் கார்களில் பெரும்பான்மையானவை ஆடி, வோல்க்ஸ்வேகன் போன்ற சொகுசுக்கார்கள் ஆகும். இந்த இடம் மட்டுமல்லாமல் சுமார் 37 இடங்களில் இம்மாதிரியான சேமிப்புக் கிடங்குகள் அமெரிக்கா முழுவதும் உள்ளன. இந்த கிடங்குகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் 2009 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புகைப்படம் சொல்வது என்ன?
பெருகி வரும் மனித குலத்தின் கட்டுப்படுத்த முடியாத நுகர்வு வெறிக்கு இந்தப் புகைப்படம் ஒரு சான்று. மேலும் உலகம் முழுவதும் இப்படி ஏராளமான கிடங்குகள் உள்ளன. அவற்றில் கோடிக்கணக்கான கார்கள் துருப்பிடித்து நிற்கின்றன. தேவைகளைப் பற்றிய புரிதலை மனிதர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் நிற்கிறோம். இதனை நாம் இப்போது சரி செய்யாவிடில் இந்த உலகம் ஒரு மாபெரும் குப்பை மேடாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.