ஆண்டுதோறும் சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான சிறந்த பயணப் புகைப்படங்களுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகரங்கள், இயற்கை மற்றும் மனிதர்கள் என மூன்று வகைகளில் இந்த தேர்வானது நடத்தப்பட்டிருக்கிறது. முதல் பரிசு பெற்றவர்களுக்கு 2500 அமெரிக்க டாலர்களும், இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு 1500 டாலர்கள் எனவும், மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு 750 டாலர்களும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை கீழே காணலாம்.
பனி கிராமம்

கிரீன்லாந்தின் மேற்குப்பகுதியில் இருக்கிறது உபர்நேவிகின் என்னும் கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவுதான். பெரும்பாலும் மீனவர்கள் வசிக்கும் இந்தப்பகுதி எப்போதும் பனியால் சூழப்பட்டிருக்கும். வடதுருவம் என்பதால் இங்கே சூரிய ஒளியும் குறைவாகத்தான் விழும். மின்விளக்குகள் இல்லையென்றால் அம்மக்களின் நிலைமை திண்டாட்டம்தான். இப்படியான ஒரு நகரத்தின் புகைப்படம் தான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இதனை எடுத்தவர் வீய்மின் சூ என்னும் புகைப்படக்கலைஞர் ஆவார். அந்த கிராமத்தை ஆறு நாட்கள் சுற்றி வந்து இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார் வீய்மின் சூ.
விமான நிலையம்

சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை டிரோன் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தான் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த புகைப்படத்தை எடுத்த ஜாசின் டுடோரோ இதற்காக விமான நிலையத்திடம் சிறப்பு அனுமதியைப் பெற்றிருக்கிறார். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய நாள் ஒன்றில் இந்த புகைப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் டுடோரா.
வீதியில் தொழுகை

வங்கதேச தலைநகரான டாக்காவின் வீதி ஒன்றில் மக்கள் திரளாக தொழுகை நடத்தியதை பதிவுசெய்த இந்தப்புகைப்படம் மூன்றாம் பரிசுக்கு தேர்வானது. பெரும் எண்ணிகையில் மக்கள் ஒரே சமயத்தில் தொழுகை நடத்த அங்கே பெரிய மசூதிகள் இல்லை. எனவே மக்கள் இப்படி சாலையிலேயே தங்களது மத சடங்கை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். தொழுகை நடத்தும்போது வாகனங்கள் இங்கே இயக்கப்படுவது இல்லை. சாண்டிபனி சடபோத்தியாயா என்பவர் இப்புகைப்படத்தை எடுத்திருக்கிறார்.
ஒளியும் நிழலும்

சீனாவில் நாடக கலைஞர்கள் நிகழ்ச்சிக்கு அரிதாரம் பூசிக்கொள்ளும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. வெளிச்சமும் மனிதர்களின் நிழலும் ஒரே பிரேமில் சேர்ந்திருக்கும்படி அசரவைக்கும் புகைப்படத்தை எடுத்தவர் ஹுவாபெங்க் லீ
சூரிய ஒளி

யோஷிகி ஃப்யூஜிவாரா என்பவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மனிதர்களுக்கான வகையில் இரண்டாவது பரிசை வென்றது.
நெருப்புக்குதிரை

பழங்காலத்தில் ஏதோ போர்க்களத்திற்கு நடுவே இருப்பதைப்போல் எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தை எடுத்தவர் ஜோஷ் அந்தோணியோ ஜமாரோ. இந்த புகைப்படம் மூன்றாவது பரிசை வென்றது.
சிறப்பு பரிசு

மனிதர்கள் என்னும் வகையில் நவீன் வாட்சா என்பவர் எடுத்த இந்தப்புகைப்படம் சிறப்பு பரிசை தட்டிச்சென்றது.
இயற்கை

இயற்கைப்பிரிவில் டமாரா பிளேஸ்குயிஸ் ஹேய்க் என்பவர் எடுத்த இந்த கழுகின் புகைப்படம் முதல் பரிசுக்கு தகுதிபெற்றது.
பிரம்மாண்ட அலை

டேனி செப்கோவிஸ்கி என்பவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஒரு அலை உருவாகும்போது மிகத்துல்லியமாக எடுக்கப்பட்டது. இயற்கை பிரிவில் இது இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
டால்பின்

கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த டால்பின் புகைப்படம் இந்த பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. இதனை எடுத்தவர் ஸ்காட் போர்டலி.
மலை ஆடுகள்

ஜோன்ஸ் ஷேஃபர் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இயற்கை என்னும் பிரிவில் சிறப்பு பரிசை வென்றது.