அமெரிக்காவின் மேரிலாண்ட்டை சேர்ந்த சாம் டேவிஸ், நம்ப முடியாத வகையில் இயற்கையின் சில தருணங்களை தனது கேமராவில் படம்பிடித்துள்ளார். வானில் பறந்துகொண்டிருந்த சதுப்பு நிலங்களில் வாழும் பெரிய நீல நிற கொக்கு (Heron) வயிற்றில் இருந்து விலாங்கு மீனானது (Eel) கழுத்துப்பகுதியை துளைத்துக்கொண்டு வெளிவரும் அக்காட்சி, ஆங்கில படத்தின் காட்சியில் ஒருவரின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவருவதை போன்று உள்ளது. விலாங்கு மீன் அதன் உயிரை மீட்டெடுப்பதற்கான ஒரு போராட்ட நிகழ்வாக இது அமைந்துள்ளது.
புகைப்படக் கலைஞர் சாம் டேவிஸ் அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் உள்ள ஒரு இயற்கை காப்பகத்தில் வனவிலங்குகளின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் தான் இந்த அற்புத காட்சியை பார்த்திருக்கிறார். டேவிஸ் முதலில், கொக்கு ஒன்றை பார்த்ததும், அதன் கழுத்தை ஒரு பாம்பு அல்லது விலாங்கு மீன் (Eel) கடித்துக் கொண்டிருக்கின்றது என்றே நினைத்திருக்கிறார். டேவிஸ், பறந்து கொண்டிருந்த கொக்குக்கு சுமார் 68 முதல் 91 மீட்டர் தொலைவில் இருந்தார். அவர் வைத்திருந்த டெலிஃபோட்டோ லென்ஸ் மூலம் இந்த காட்சிகளை அவர் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார். கொக்கு பறப்பதைப் பார்த்ததும் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியுள்ளார்.
இது பற்றி டேவிஸ் “கொக்கு மிகவும் வித்தியாசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. அது இயல்பாகவே பறந்தது. பிறகு தண்ணீருக்கு அருகில் வந்து நின்றது” என்று லைவ் சயின்ஸ் பத்திரிக்கையிடம் கூறினார்.
கொக்கு மற்றும் விலாங்கு மீன் புகைப்படங்கள்!








2011 ஆம் ஆண்டில் டெலாவேரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் இடம்பெற்ற கொக்கு மற்றும் விலாங்கு மீனுக்கு இடையில் என்ன நடந்தது என்பதை பற்றி சாம் டேவிஸ் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர் கரையை விட்டு வெளியேறும்போது, கொக்கு அதனுடன் தொங்கும் விலாங்கு மீனுடன் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது எனத் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் தன் புகைப்படங்களை வனவிலங்கு தளத்தில் பதிவேற்றும்போதுதான் இந்த விஷயங்களை கவனித்திருக்கிறார்.
இது பற்றி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மீனியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும் போது, “இந்த புகைப்படங்கள் ஒரு அற்புதமான காட்சியைக் காட்டுகின்றன. ஒரு பறவை இனத்தில் இது மிகவும் அரிதானது. எனக்குத் தெரிந்தவரை, மிகவும் அரிதாகவே காணப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.