ஆண்களின் சத்தம் வேண்டுமானால் பெண்களை மிரட்டலாம். ஆனால், பெண்களின் அமைதி ஆண்களின் உயிரை, உணர்வை உலுக்கி எடுத்து விடும்.
லெவல் கிராஸ்ஸிங், ரயில் போகும் வரை கார் காத்துக்கொண்டு இருக்கிறது. அந்த உதவி இயக்குனர் தன் காதலை சொல்லிவிட்டு, அமைதியாக இருக்கும் பெண்ணிற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறான். பாடல் தொடங்குகிறது.
“இல்லை என்று சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம்
வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் “
காதலனின் கண்களில் உண்மை உள்ளது. அவள் கண்ணைப் பார்த்துக் கேட்கிறான். புருவத்தைத் தூக்கி “என்ன சொல்லப் போகிறாய்?” என்று கண்ணாலேயே கேட்கிறான். அவளும் அமைதியாக அவன் கண்ணைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அவளுடைய பேரமைதி இவனை நிலை குலையச் செய்கிறது. அமைதியாக இருந்து வன்முறை செய்கிறாள் அவள்.
கற்பனையில் பாடல் விரிகிறது. பாலைவனம், நடுவில் தண்டவாளம். ஒட்டாத இரு கம்பிகள். நடுவில் நாயகன் நடந்து கொண்டு இருக்கிறான். நாயகி தண்ணீர் குடத்துடன் தூரத்தில் செல்கிறாள்.
“சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா ?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில்
என்ன மௌனமா மௌனமா ?
அன்பே எந்தன் காதல் சொல்ல, நொடி
ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள்
வேண்டுமே
இல்லை என்று சொல்ல ஒரு கணம்
போதும் இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னுமின்னும் எனோக்கோர்
ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் “
நாயகனின் மனது பாலைவனமாக உள்ளது. அவள் தண்ணீர் வைத்திருக்கிறாள். அவன் பாலைவன மனதைக் குளிர்விக்க, அவள் தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீர் என்பது அவளது வார்த்தை. அவளின் கனத்த மௌனத்தால் அவன் மனம் பாலைவனம் போல உள்ளது.
இரண்டாவது என்ன சொல்லப் போகிறாய் என்று இவன் அவளிடம் கேட்க, அவள் தந்தை அவன் மண்டையில் அடித்துப் பதில் சொல்கிறார். அவனைத் தூக்கியெடுத்து வேறு இடத்தில் வீசி விடுகிறார்கள். சரிந்திருக்கும் பாலைவன மண்ணில் சறுக்கிப் படுத்திருக்கிறான் நாயகன். அடி வாங்கிய மயக்கத்தில் கண் விழிக்க முடியாமல் இருக்கிறான். சூரியன், பாலைவனம், அவன். நடுவில் உயிரைப் பிழியும் புல்லாங்குழல்.
புல்லாங்குழல் இசையில் அவள் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள். அவன் மீது தண்ணீர் ஊற்றுகிறாள். இவன் பாலைவனம் அவள் தண்ணீர். பாலைவனமும் நதியும் இவர்கள் பின்னால் இருக்கிறது. இயற்கையும் இவர்கள் காதலை ஒத்து இருக்கும் காட்சிப் படிமம். அவன் விழித்தவுடன் சூரியனை மறைத்து அவள் நிற்கிறாள்.
“இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இது தான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி “
அவன் அவள் பிம்பங்கள் சுவற்றில் இருப்பது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
“கண்ணாடி பிம்பம்
கட்டக் கயிர் ஒன்றுமில்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
என் வாழ்க்கையே உன் விழி விளிம்பில்
என்னை த் துரத்தாதே
உயிர் கரையேறாதே “
ஏதாவது சொல்லி விடு, இல்லை நின்றாவது கொன்று விடு. என்ன சொல்லப் போகிறாய்? என்கிறான். அவனுடைய ஆயிரம் சத்தத்திற்கும் அவளிடம் அமைதியே பதிலாக உள்ளது.
கூம்பு போல பிரமிட், இரண்டு கோடுகள் அணைத்துக் கொண்டது போல உள்ளது. அதன் முன்னால் நாயகன் நாயகியை அணைக்கிறான். அவள் மறைகிறாள்.
“விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது ? பூ வாசம் வீசும் உந்தன்
கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும்… இருளாத
வானம் எது ? கதிர் வந்து பாயும் உந்தன்
கண்களடி,
பல உலகழகிகள் கூடி
உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே
இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா
இது வாழ்வா சாவா “
நாயகன் அவளது கையைப் பிடித்துக் கொண்டு என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான். அவன் கையை உதறி விட்டுப் பெற்றோர்களுடன் செல்கிறாள் அவள். என்ன சொல்லப் போகிறாய் என்று ஏக்கத்தில் முடிகிறது இப்பாடல்.
பெண்களின் மௌனம் ஆண்களைக் கொஞ்சம் அல்ல ரொம்பவே உலுக்கத்தான் செய்கிறது. பாடல் முழுக்க ஒரு சந்தன வாசம். நாயகனுக்கும் சந்தன நிறச் சட்டை. காதலின் ஏக்கம், தாகம், தவிப்பு, வெயில் எல்லாம் பாடலில் உணர முடிகிறது.
பாடல் முழுக்க நாயகன், நாயகி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். இருவரின் கண்களும் அழகாகப் பேசுகிறது. குறிப்பாக நாயகன் காருக்குள் உட்கார்ந்து புருவத்தைத் தூக்கி, என்ன சொல்லப் போகிறாய் ? என்று கேட்கும் பொழுது, அந்தக் கண்களில் உண்மை, நெருப்பு, காதல் அனைத்தும் வெளிப்படுகிறது. ஏன் அஜித் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளார்கள் என்பதற்கு அந்தக் காட்சி ஒரு சான்று.
பெண்ணின் அமைதியும், ஆண் என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்டுக் கொண்டே இருப்பதும் எப்பொழும் நடக்கக் கூடியது. ஆணின் 1000 வார்த்தைகளை, 100 கவிதைகளை, பெண் என்பவள் ஒரே ஒரு செயலைச் செய்து தூக்கிச் சாப்பிட்டு விடுவாள். அந்த அமைதியைப் பிரதிபலிக்கும் தபு இந்த பாடலின் இன்னோரு பலம். பெண்ணின் அமைதி மரணத்தை விடக் கொடுமையானது. அதனால் தான் “இது வாழ்வா சாவா” என்ற வரிகளுடன் பாடல் முடிகிறது.