பார்வையிழந்த காதலர்களின் மேல் நிலவொளி படர்கிறது. அவனுக்குக் கண் தெரியவில்லை என்றாலும் சாகச வீரன் போல பைப் வழியாக மேலேறி அவளைப் பார்க்க வருகிறான். அவளுக்கும் கண் தெரியாது. ஜன்னல் ஓரம் அவள் நின்று ரசிப்பதில் இருந்து பாடல் ஆரம்பம் ஆகிறது. அவள் மேல் நிலவொளி படர்ந்து இருக்கிறது. அவன் பைப் வழியாக கீழே இறங்குகிறான். நண்பர்கள் கீழே காத்துக்கொண்டு இருக்கிறார்கள் .
“மனசுல சூரக் காத்தே… அடிக்குது காதல் பூத்தே…
மனசுல சூரக் காத்தே… அடிக்குது காதல் பூத்தே…
நிலவே சோறூட்டுதே… கனவே தாலாட்டுதே…
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே…
உந்தன் வாசனை வானவில் காட்டுதே…”
நிலவொளி மெல்லியதாகப் பரவியிருக்க திரைச் சீலைகள் காற்றில் பறக்கின்றன. பின்னால் மனசுல சூரக் காத்தே என்று பெண்ணின் மனக்குரலில் பாடல் ஆரம்பமாகிறது. அவள் காதலைக் காற்றின் மூலம் உணர்கிறாள்.
பாடல் முழுக்க வெவ்வேறு ஒளிகள். முதல் காட்சியில் நிலவொளி, பின் அவள் உட்கார்ந்து இருக்கும்பொழுது சின்ன லைட். மேம்பாலத்தில் இருக்கும் விளக்குகள். அடுத்து மெழுகுவர்த்திகள், சர்ச் ஸ்டார்கள், வெளிச்சத்தைத் தொட்டு உணர்கிறார்கள். சர்ச் ஸ்டார் வெளிச்சம் இருவரின் மேல் படர்கிறது, அவர்களுக்குப் பார்வை இல்லையென்றாலும் அந்தக் காதல் ஒளிமயமாகத்தான் இருக்கின்றது .
குச்சி ஐஸில் பல வண்ண எஸ்சென்ஸ் ஊற்றுகிறார்கள். அவள் ஐஸ் உறுஞ்சுகிறாள். அவள் உறிஞ்சும் சத்தம் கேட்டு அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதை அவன் உணர்கிறான். காதலை சொல்லப் பார்வைகள், வார்த்தைகள் வேண்டுமா என்ன? கவிதையான காட்சி. கண் இல்லாத பொழுது காதில் உணர்கிறார்கள் காதலை.
ரயில் நிலையத்தில் அந்த வெளிச்சத்தில் இருவரும் விளையாடிக்கொண்டிருக்க, இன்னொரு கண் தெரியாதவர் புல்லாங்குழல் வாசிக்கிறார். ஒரு காவலர் அவர்களை கம்பு எடுத்து மிரட்டுகிறார். பின்பு அவரயும் இவர்கள் நட்பாக்குகிறார்கள். சாமானியர்களின் ஆயுதம் அன்பு.
“வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்”
ரயில் நிலையத்தின் படிக்கட்டில் அவன் காத்திருக்கிறான். அவன் இருப்பது அவளுக்குத் தெரியவேண்டுமே என்பதற்காகக் குச்சியை தட்டிக்கொண்டே இருக்கிறான். அவள் பக்கத்தில் வந்ததும் இருவரும் கையை பிடித்துக்கொண்டு மேலேறுகிறார்கள் .
குழந்தைகளுக்குப் பொம்மை விளையாட்டு, பெல் ஒலி சத்தம் என்று விளையாட்டுக் காட்டுகிறாள் நாயகி.
“சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்”
கண்ணில் இல்லை காதல், நெஞ்சிலே உள்ளது. அது தான் காதலின் தாயகம். இருவரும் பீச் ஓரம் நிற்கிறார்கள், செவ்வான ஒளி. மின்சார ரயிலில் செல்கிறார்கள் …. மின்சார ரயில் கூட
குயில் போல கூவுதே என்ற வரிகளில் ஒரு புல்லாங்குழலில் இருந்து ரயில் வருவது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் . இதில் குயில் புல்லாங்குழல். அதன் குரல் மின்சார ரயில்… இவர்கள் காதலுக்கு மின்சார ரயில் ஒரு குறியீடு. இந்தக் காட்சி திரையில் ஒரு கவிதை.
கோவில் விளக்குகள், கையைத் தொட்டு சிலையை உணர்கிறார்கள். ஒரு திருநங்கை இவர்களைத் தொட்டு வாழ்த்துகிறாள், பின்னால் வரிகள் நிலவே சோறூட்டுதே என்கிறது .
“உந்தன் வாசனை வானவில் காட்டுதே” என்ற வரிகளில் மழை பெய்கிறது. இருவரும் ஒரு குடையில். வானவில்லின் வண்ணங்களைப் பார்க்க முடியாது, அவளது வாசனையை வைத்து வானவில்லின் நிறத்தை புரிந்துகொள்கிறான் அவன்.
வானவில்லை காதல் என்றும், கண்பார்வை தான் காதலின் அச்சாரம் என்றும் நூறு பாடல்கள் பார்த்திருப்போம். கண் இல்லாதவர்கள் காதலிக்கமுடியாதா? காதல் என்பது உணர்வு தானே, வானவில்லின் காதலின் வண்ணங்களை, அவளது வாசனையின் மூலம் உணர்ந்து கொள்கிறான் நாயகன். கண்கள் பார்த்து வரும் காதல் குட்டை, நெட்டை, கறுப்பு , சிகப்பு பார்க்கும். கண்கள் பார்க்காமல் உணரப்படும் காதல் வண்ணங்களை எண்ணங்களில் புரிந்து கொள்ளும் காதல் எவ்வளவு மகத்துவமானது?
கண்பார்வை இல்லாததால் இது நிறம் இல்லாத காதல், இந்தக் காதலை நிறம் கொண்டு அளக்க முடியாது தானே? கண் இல்லாமல் வேறு உணர்வுகள் கொண்டு காதலை உணர்த்துவது கவிதை. மேலும் சிறு சிறு காட்சிகளிலும். அவர்களின் மேல் பல ஒளிகள் படர்கிறது, அவர்கள் ஒளியை உணர முடியாதவர்கள் தான், ஆனால் அவர்கள் காதலில் ஒளிமயமாகத் தான் இருக்கிறார்கள். பொதுவாக கண் தெரியாதவர்களை வைத்து அய்யோ பாவம் என்று மேலிருந்து பார்க்கும் பாவனையில் காட்சிகள் வைப்பார்கள். இந்தப்படத்தில் அவர்கள் காதலைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பொறாமை தான் வருகிறது. வெறும் உடலை மட்டும் பார்த்து பழகுபவர்களை நினைத்தால் கொஞ்சம் சலிப்பாய் தான் உள்ளது. அத்தருணத்தில் இதயத்தைப் புரிந்துகொள்ளும் காதலை, இதயத்தை உணரும் காதலைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் மெய் சிலிர்க்கத்தான் செய்கிறது.