பச்சை ஆடை உடுத்திய நாயகி சிகப்புக் கதவு ஒன்றின் மேல் சாய்கிறாள். அவள் சாய்ந்தவுடன் இதயத் துடிப்பை ஒத்த இசை தொடங்குகிறது. அந்தக் காட்சி நாயகியிடம் இருந்து ஆரம்பித்து நாயகன் இருக்கும் இடம் நோக்கி நகர்கிறது. இருவருக்கும் ஒரே இதயத்துடிப்பு அந்த துடிப்பின் பெயர் காதல். காதலைப் பற்றி யோசிக்கும் நாயகியின் இதயத்துடிப்பு ஆரம்பித்தவுடன், கட் செய்து காதலன் காட்டப்படுகிறான். இதயத்துடிப்பில் இருவரும் ஒன்றாகிறார்கள். நாயகி மற்றும் நாயகனின் இதயத்துடிப்பு இசையுடன் ஒன்றாய் கோர்க்கப்படுகிறது.
அடுத்த காட்சியில் சிகப்புப் பின்னணியில் நாயகி பச்சை உடை உடுத்தி இருக்கிறாள். சிகப்பு நிற ஆடை அணிந்த நாயகன் பச்சைப் புல்வெளியில் நடக்கிறான். நாயகியின் பின்னணி நாயகனுக்கு உடையாகிறது, நாயகனின் பின்னணி நாயகிக்கு உடையாகிறது . ஒருவருக்குள் ஒருவர் உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். மேலும் பச்சைக்கும் சிகப்புக்கும் இடையில் அவர்கள் காதல் தத்தளித்து கொண்டு இருக்கிறது. அதனால் பச்சை, சிகப்புப் பின்னணி என்றும் புரிந்து கொள்ளலாம்.
புல்வெளியில் நாயகன் நாயகியின் காதலைத் தேடி அலைகிறான். கட் செய்தால், நாயகி காதல் புத்தகத்தை நோக்கி வருகிறாள் அவள் வீட்டில். இக்காட்சி அடுத்தடுத்து வருவதால் இருவரும் காதலை நோக்கி வருகிறார்கள் என்பதை எடிட்டர் அழகாகச் சொல்கிறார்.
காதல் புத்தகத்தை எடுத்து நெஞ்சுக்குள் வைக்கிறாள் நாயகி. அவளின் படுக்கையறை வலை காற்றால் அசைகிறது. அந்தப் பக்கம் மரத்தில் காற்று அசைந்து கொண்டு இருக்கும் பொழுது நாயகனின் குரலில்
“என்னைத் தாலாட்ட வருவாளோ ?
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ ?
தங்கத் தேராட்டம் வருவாளோ ?
இல்லை ஏமாற்றம் தருவாளோ ?
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா ?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா ?
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே ……”
கேள்வி வாக்கியமாகச் செல்கிறது பாடல். கேள்விக்கு ஏற்ற ஒலியை ராஜா தொடுக்கிறார். நாயகனின் ஒவ்வொரு கேள்விக்கும் நடுவில் இருக்கும் இசையில் நாயகி முகம் காட்டப்படுகிறது. நாயகனின் கேள்விக்கு நாயகி பதில் சொல்லவேண்டும் என்பது போல காட்சி அமைந்துள்ளது.
“தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா ?”
வரிகளில் நாயகன் முன்னால் இருக்கும் செடியில் ஒரு சிலந்தி வலை இருக்கிறது. நாயகி சிலந்தி வலை போல சிக்கலான மனதில் மாட்டிக்கொண்டு இருக்கிறாள். அவள் மனது தத்தளிப்பில் உள்ளது.
“கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே ……”
நாயகி காதல் புத்தகத்தை தட்டுகிறாள், அது நாயகனுக்கு கொலுசொலியாய் வேறு இடத்தில கேட்கிறது. நாயகன், நாயகி வேறு இடத்தில் இருந்தாலும் காதல் என்ற புள்ளியில் கோர்த்தது அழகாய் உள்ளது.
அடுத்து நாயகன் வெற்றியின் நிறமான மஞ்சள் நிற ஆடை அணித்துள்ளான். நீல நிற உடையில் நாயகி நாயகனைத் தேடி வருகிறாள். நாயகன் அவள் பெயரை எழுதிக் கிறுக்கியதை எடுத்துப் பார்க்கிறாள். அவளுக்கு காதல் வந்துவிட்டது. அதனால் நீல ஆடை, அவன் வெற்றி பெற்றுவிட்டான் மஞ்சள் ஆடை.
“இரவு பகலும் என்னை வாட்டினாள்…
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்…
காதல் தீயை வந்து மூட்டினாள்…”
இரவும் பகலும் இல்லாத ஒரு மாலைப்பொழுதில் நாயகன் நதி ஒன்றின் மீது நடப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
“நான் கேட்கும் பதில் இன்று வாராதா…
நான் தூங்க மடி ஒன்று தாராதா…
தாகங்கள் தாபங்கள் தீராதா…”
இருவரும் ஒரே மாதிரி மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ளார்கள். இருவரும் ஒத்திசையும் தருணம், தாபத்தில் நாயகி புரண்டு புரண்டு படுக்கிறாள். இருவரும் காதல் என்னும் புள்ளியில் இணைகிறார்கள். ஒரே ஆடை, வெவ்வேறு இடம். நாயகி தூங்கும் இடத்தைச் சுற்றி ஒரு வெண்திரை இருக்கிறது. படுக்கையும் வெண்ணிறத்தில் உள்ளது. அடுத்த காட்சியில் நாயகன் வெள்ளை ஆடை அணிந்துள்ளான்.
“தாளங்கள் ராகங்கள் சேராதா…”
நாயகியைச் சுற்றி வெள்ளைத் திரையும், அடுத்த காட்சியில் நாயகன் வெண்ணிற உடையில் வருவதும், நாயகியின் உடை நாயகன் என்பதைச் சொல்கிறது. அந்தத் தாளமும் இந்த ராகமும் ஒன்று சேர்ந்துவிட்டது. காதல் காட்சியை விரசமாகக் காட்டாமல், அந்த தாபத்தை அழகாய் காட்சி படுத்தியது கவிதை.
உறுதியான காதல் மனநிலையில் நாயகன் இருப்பதை நாயகனின் கருப்பு வெள்ளைநிற உடையின் மூலம் தெரியப்படுத்துகிறார் இயக்குனர். ஆனால் நாயகியோ பல வண்ண உடைகளில் வருகிறாள். ஒவ்வொரு உடைக்கும் ஒரு உணர்வு. பெண்கள் உணர்வு மாறிக்கொண்டே இருக்கிறது அவன் காத்துக்கொண்டே இருக்கிறான், அழகான காட்சி. நாயகன் வெவ்வேறு திசைகளில் பார்க்கிறான். ஒவ்வொரு திசையிலும் நாயகி ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவள் என்ன யோசிக்கிறாள் என்பதை நாயகனால் அறிய முடியவில்லை. அவள் மனதைப் பின்தொடர அவனால் முடியவில்லை. பெண்கள் மனது சூட்சமமானது இதை அவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.
கடைசியாய், அவன் கண்ணை மூடிக்கொண்டு யோசிக்கிறான், அவளை முதன்முதலாக பார்த்த காட்சி. ஆம் அவள் கண்களில் காதல் இருந்தது. அம்மாவிடம் தன் காதலியை அறிமுகம் செய்வது, அவள் போட்டோவை காண்பிப்பது எவ்வளவு ஆனந்தம். தந்தையிடமும் அந்தப் போட்டோவை காண்பிக்கிறான். இது எல்லாம் அவன் கனவில். கண் மூடியவன் கண் திறக்கிறான்… புல்வெளி விரிகிறது.
“எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்”
இரவு அவள் கூந்தலில் பகல் அவள் பார்வையில், காலம் எல்லாம் அவள் காதலில். இரவுக்குக் கறுப்பு, பகலுக்கு வெள்ளை என கருப்பு வெள்ளை சட்டையாக நாயகன் உடை.
“நாளைக்கு நான் காண வருவாளோ…”
என்னும் வரிகளில் சட்டென்று விளக்குகள் எரிகின்றது.
கடைசியாய் வரும் “தங்கத் தேராட்டம் வருவாளோ” என்ற வரிகளுக்கு அலைகள் அவனை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. வருவது போல வந்து பின்னால் போகிறது. கடைசிக் காட்சியில் இருவருக்கும் கருப்பு வெள்ளை உடை கொடுக்கப்பட்டுள்ளது. நாயகி தாலாட்டாவும் வரலாம், ஏமாற்றமும் தரலாம்.
பாடலில் நாயகன் நாயகியின் உடை , அடுத்தடுத்த காட்சி அமைப்புகள், இரு காட்சியை கோர்க்கும் பொழுது கிடைக்கும் புதுக் கதை என்று எடிட்டிங் அபாரமாக உள்ளது. இளையராஜாவின் இசை இதயத்துடிப்பு போல் பின்தொடர்வது அபாரம். உணர்வுகளுக்கு ஏற்ப அழகாய் இணைகிறது மெட்டு.