பாட்டாலே பரவசம்: நான் உனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்… சேர்ந்ததே நம் ஜீவனே…

Date:

‘வெண்ணிற இரவுகள்’ கார்த்திக் வர்ணனையில், வெளிவரும் ‘பாட்டாலே பரவசம்‘ தொடரின் முதல் பாடலாய் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’. திரையிசைப் பாடலை பற்றிய புத்தம் புதிய அனுபவத்தை தரக்கூடிய வகையிலான எழுத்து தோழர் கார்த்திக் அவர்களுடையது. படித்து பாடலை அனுபவியுங்கள்.

போருக்குச் சென்ற நாயகனுக்காகக் காத்திருக்கிறாள் நாயகி. குதிரைச் சத்தம் நாயகனின் வருகையை உறுதி செய்கிறது. காத்திருப்பு, ஆச்சர்யம், நாயகனைப் பார்ப்போமா என்ற ஏக்கம் கலந்து இசையை ஆரம்பிக்கிறார் இளையராஜா. நாயகனைப் பார்த்தவுடன் அழகாக ஒரு flute பின்னால் வருகிறது. இருவரும் பார்த்தவுடன் ஆச்சர்யம், உற்சாகமாக மாறுகிறது இசையில். உற்சாகத்துடன் நாயகி நாயகனை நோக்கி ஓடுகிறாள். நாயகன் குதிரையில் நாயகியை நோக்கி விரைகிறான். இளையராஜாவின் வயலின்களுடன் சந்தோஷ் சிவன் கேமரா பறக்கிறது. உடனே நாயகியை நாயகன் தூக்கிச் செல்கிறான் குதிரையில். இசை உச்சத்தை அடைகிறது. நாயகன் நாயகியை மணக்கிறான். சரியாக 50 நொடியில் பாடல் ஆரம்பிக்கிறது. அது வரை இசை ஆலாபனை மட்டுமே. இசையால் கதை சொல்கிறார் ராஜா. பாடல் ஆரம்பமாகிறது.

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!

நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!….”

நாயகனும் நாயகியும் மணந்து கொள்கிறார்கள். விளக்கு வெளிச்சத்தில் நாயகன் நாயகி காட்சி கவிதை. “சேர்ந்ததே நம் ஜீவனே” என இரு ஜீவன்களும் சேர்கிறது. சொல்லப்போனால் ஒரு ஜீவனின் இரு உடல்கள் ஆண் – பெண்.

அரண்மனை திறக்கிறது. இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் போருக்கான சூழலையும் காட்சியையும் காட்டுவதற்கு முன்னரே டிரம்ஸ் மற்றும் பிற வாத்தியங்களில் இது போர் என்று இளையராஜா காண்பித்து விடுகிறார். குதிரைகள் போருக்குச் செல்கின்றன. எதிர் எதிர் திசையில் இரு அணியினரும் அணிவகுத்து நிற்கின்றனர். வயலின் மற்றும் டிரம்ஸ் போருக்கான சூழலையும் அதன் அழுத்தத்தையும் விவரிக்கிறது.

இசையில் ஒரு போர்; போரின் இறுதியில் இசை உச்சத்தை அடைகிறது. சட்டென்று இசை மாறுகிறது. நாயகி காத்திருக்கும் காட்சி. போரின் உச்ச நிலையில் இருந்து நாயகியின் காத்திருப்புக்கு… இசை மாறுகிறது. ஒரு இயக்குனராக, ஒரு ஒளிப்பதிவாளராக இந்தக் காட்சி மாற்றம் எளிது. ஒரு இசையால் ஒரு உணர்வில் இருந்து இன்னொரு உணர்விற்கு ஜம்ப் ஆகாமல் செல்ல முடியுமா? அங்கே தான் உயர்ந்து நிற்கிறது இந்தப் பாடல்.

போரின் உக்கிரமான இசையில் இருந்து நாயகியின் தனிமை நோக்கி இசை இறங்கிக் கிறங்கடிக்கிறது. உணர்வுகளின் எழுச்சி தானே இசை! போர் உணர்வில் உச்சமும், தனிமையில் தணிந்தும் இருக்கிறது இசை. முழுவதுமாக வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையை ஆக்கிரமிக்கிறது. நாயகி, நாயகனை நினைத்து விளக்கேற்றுகிறாள்.

நாயகி :
“வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?”

இந்த வரிகள் ஆரம்பிக்கும் பொழுது நாயகி விளக்கேற்றுவாள். பின்னால் காற்று வீசும் மரங்கள் ஆடிக்கொண்டிருக்கும். காற்றும், நெருப்பும் காதலுக்குச் சாட்சியாய் இருக்கிறது. நாயகன் போரின் இடையில் ஓய்வு எடுக்கும் பொழுது… அங்கே குளிர் காய்கிறான். பின்னால் நெருப்பு. அந்தப்பக்கம் காற்று. அங்கே அவள் விளக்கேற்றுவதில், இங்கே இவன் குளிர் காய்கிறான் என்றும் இந்த காட்சியை புரிந்து கொள்ளலாம். அங்கே அடிக்கும் காற்றும் இங்கே அடிக்கின்றது எனவும் கூட புரிந்துகொள்ளலாம். நாயகி இடத்தில் மரம், நாயகன் இடத்தில் கொடிகள்.

நாயகி :
“தேன் நிலவு நான் வாழ
ஏன் இந்த சோதனை?”

நாயகியின் பின்னால் சிகப்புக் கொடி பறக்கிறது.

நாயகன் :
“வான் நிலவை நீ கேளு!
கூறும் என் வேதனை!”

நாயகன் பின்னாலும் கொடிகள் பறக்கின்றன.

இருவருக்கும் உண்டான தொடர்புகளை அடுக்கடுக்காகப் பின்னிக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். போரில் பிரிந்து இருந்தாலும், இருவரும் சேர்ந்தே இருக்கின்றனர். “சேர்ந்ததே நம் ஜீவனே” என்னும் வரிகள் தான் இப்பாடலின் சாரம். காதலர்கள் பிரிந்து இருந்தாலும் இருவரும் இணைவதற்கான புள்ளி இருந்து கொண்டே இருக்கிறது.

அந்த வானிலவை நாயகன் கேட்கச் சொல்கிறான். அவன் வேதனையை புரிந்துகொள்ள இதற்கு உண்டான காட்சி பின்னால் வரும். “என்னையே தந்தேன் உனக்காக” எனும் பொழுது நாயகி  குதிரையின் சிற்பத்தைப் பார்க்கிறாள். அதில் இருந்து மறுபடியும் யுத்தக் காட்சி… குதிரைகள் கோர்க்கப்படுகிறது. இயக்குனர் மற்றும் எடிட்டரின் திறமைக்குச் சாட்சி சொல்லும் காட்சி அதுதான்.

மறுபடியும் கீழிருந்து மேலே செல்கிறது இசை, போர் முரசு கொட்டுகிறது. மறுபடியும் போருக்கான காட்சிகள். பார்க்கவில்லையென்றாலும், இசையை கேட்டாலே இது போர் தான் என்ற காட்சி. ஒரு இரவு போகிறது, நிலவு மேலே மேகம், நாயகி வானை நோக்கிப் பார்க்கிறாள். நாயகன் வான் நிலவை நீ கேளு என்றதால் வானைப் பார்க்கிறாள் நாயகி. வரிகள் எப்பொழுதோ வந்திருக்கும், நாயகன் அப்பொழுது சொன்னதை நாயகி இப்பொழுது தான் கேட்கிறாள். அழகான கவிதைக் காட்சி.

நிலவு என்னும் காதல் குறியீட்டை போர் மேகங்கள் மறைத்து விட்டதை நாயகி உணர்வதாக கூட இந்தக்காட்சியை புரிந்துகொள்ளலாம்.

“சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால் !
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால் !

மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்”

இங்கே Relativity Theory சொல்லப்படுகிறது. காத்திருப்பை Relativity Theory தானே அழகாய் சொல்ல முடியும். காதலி கூட இருக்கும் பொழுது மாதங்கள் வாரங்கள் ஆகின்றன.

கடைசியாய் நாயகி வாயிலைப் பார்க்கிறாள்… அந்தக் காத்திருப்பை லைட்டிங், கேமரா, இசை சொல்கிறது. வாயில் வெறுமையாய் இருக்கிறது. அந்த வெறுமையை நாயகன் நிரப்புகிறான். வாயில் நாயகியின் மனது, நாயகன் அதை நிரப்புகிறான் என்று கூட அந்தக் காட்சியை புரிந்துகொள்ள முடியும்.

“தளபதி தளபதி” என்ற குரல் கேட்கிறது, நாயகன் வந்தே விட்டான். நாயகி ஓடி வருகிறாள். நாயகன் போரில் இருந்து மீண்டுவிட்டான். ஒரு உயிரின் இரு உடல்கள் சேர்ந்து கொள்கின்றன.

படித்து ரசித்த பின் பாடலை இங்கே பார்த்து ரசியுங்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!