28.5 C
Chennai
Wednesday, April 17, 2024

எஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்!

Date:

“சென்னையின் வழக்கமான பரபரப்பான நாளொன்று அது. வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வழக்கம்போல அன்றும் ஒரு இண்டர்வியூவில் தோற்றிருந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் நேரடியாக அண்ணா சதுக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டேன். எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. மதியப் பொழுதின் கடல் எதிரே விரிந்திருக்க சாலையை ஒட்டிய பூங்காவில் வேப்பமரத்தின் கீழே உட்கார்ந்து யூடியூபை மேய்ந்துகொண்டிருந்தேன்.

இளையராஜா – எஸ்.பி.பி யிடம் சரணடைவதற்கு ஏற்றதான சூழல். காலி தண்ணீர் பாட்டில்களை சேகரிக்கும் ஒரு மத்திம வயதுக்காரர் என்னருகே வருகையில் எனது போன் ‘என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட‘ எனத் தொடங்கியது. தோளில் தொங்கிய மூட்டையை எனக்கு எதிரே வைத்துவிட்டு, மரத்தின் நிழலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டார், பெருமாள் போல. அவரது வலது கையில் இருந்த நசுங்கிய கின்லே பாட்டிலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்” என ஸ்வர்ணலதா பாடிக்கொண்டிருந்தார். கையில் இருந்த பாட்டிலை தொடையில் தட்டிய விதம் அவர் பாடலை ரசித்துக்கொண்டிருக்கிறார் என்பது தெளிவானது. என்னைப் பார்த்து மெல்லியதாக சிரித்தார், பதிலுக்கு நானும்.

எங்களது இந்த சிரிப்பிற்கு இடையில் எஸ்.பி.பி உள்ளே நுழைந்து “என்னைத் தொட்டு.. நெஞ்சைத் தொட்டு..” எனத் துவங்கினார். படுத்திருந்தவர் சடாரென எழுந்து “இப்போ சிரிப்பாரு பாருங்க” என்றார். நான் புருவத்தை சுருக்கிக்கொண்ட பொழுதில் “விஷயம் என்னடி” என்ற வரியினை உலகின் மிக அழகான சிரிப்போடு பாடினார் எஸ்.பி.பி.

இதற்கு முன்னால் பல தடவை கேட்டிருக்கிறேன் என்றாலும் எனக்கு அந்த சிரிப்பு முதன்முதலாக பரீட்சயம் ஆனது. எங்கு வரை சென்று சேர்ந்திருக்கிறார் பாருங்கள்… மீண்டும் படுத்துக்கொண்டவரை செக்யூரிட்டி வந்து விரட்டவே எழுந்துபோனார். தனது தொடையில் பாட்டிலை தட்டிக்கொண்டே சென்றது இன்னும் ஞாபகமிருக்கிறது.” இப்படி கூறுபவருக்கு வயது 40 இல்லை! 90களின் இறுதியில் பிறந்த நமது நியோதமிழ் தளத்தின் எழுத்தாளர் மாதவன் தான் இப்படி கூறுகிறார். தலைமுறை கடந்து எப்படி நின்றிருக்கிறார் பாருங்கள். அதுதான் எஸ்.பி.பி. யின் பலம்.

எஸ்.பி.பி எனும் பெரும் பாடகன்

பலருக்கு இளைப்பாறலை தந்திருக்கிறார் என்றால், ஏனைய பேருக்கு அலுப்பில்லாமல் உழைக்கும் மனதை கொடுத்தது அவரது பாடல்கள். பணியின் போது ‘பாட்டு கேட்டா தான் வேலையே நடக்கும்’ என்றிருந்தவர்கள்/என்றிருப்பவர்கள் எத்தனையோ பேர்.

தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் அவருக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழர் இருக்கும் நாடெல்லாமும். தங்களது வாழ்வின் எல்லா தருணங்களையும் அவரது பாடலுடன் பொருத்திப் பார்க்க அவர்களால் முடிந்திருக்கிறது.

அதனால் தான் பல வீடுகளில் தாத்தாவும் பேரனும் எஸ்.பி.பியின் ரசிகர்களாக இருக்க முடிகிறது. இந்தப் பாடலை இன்னும் சிறப்பாக பாடியிருக்கலாம் என யாராலும் சொல்ல முடியாத அளவிற்கான ஆளுமை அவருடையது.

மாநில விருதுகள், தேசிய விருதுகள், கின்னஸ் என எத்தனையோ அவரது சாதனைகளை நேற்றிலிருந்து சமூக வலைத் தளங்களில் அவரது ரசிகர்கள் வெளியிடுவதைப் பார்க்க முடிகிறது. இதெல்லாவற்றையும் தாண்டி இவைகளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே இருக்க முடிந்த எஸ்.பி.பியின் எளிமைதான் இந்த நாளினை இன்னும் துயர் மிகுந்ததாகச் செய்கிறது. உலக வரலாற்றில் இந்த அளவிற்கு மக்களால் கொண்டாடப்படும், நேசிக்கப்படும் ஒரு பாடகர் இருப்பாரா எனத் தெரியவில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தங்களது வீட்டில் நிகழ்ந்த மரணமாகவே இதைப் பார்க்கிறார்கள். கொரோனா காலம் அளித்த அத்தனை துயரங்களையும் எஸ்.பி.பியின் மரணம் ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறது.

கவிஞர் வைரமுத்து கூறியது உண்மை தான். “திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் காலம் தமிழுக்கு தந்த கடைசி பெரும்பாடகன்!” அவருக்கு பிறகு இவ்வளவு பாடல்களை யார் பாடுவார் சொல்லுங்கள்… தமிழக மக்கள் ஆறுதல் தேடிக் கண்டடைந்த செல்வம்…! Evergreen voice – என்பது வேறு யாருக்கு சரியாக பொருந்தும் என சொல்லமுடியவில்லை.

எத்தனையோ பேரின் பல கணமான இரவுகளை லேசாக்கிய மகத்தான கலைஞர் மௌனமாகியிருக்கிறார். இதுநாள் வரையிலும் தமிழர்கள் அருந்திவந்த ஒரு அமுதப் பானை உடைந்து சிதறியிருக்கிறது. அவரது உடல் இறுதியாக எடுத்துச் செல்லப்படுவதைப் பார்க்க சக்தியில்லாமல் எத்தனையோ பேர் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக பகலில் இருள் சூழ்கிறது. அதிலிருந்து நம்மையெல்லாம் மீட்க முடிந்தவரான பாடும் நிலா மௌனமாக கண்ணாடிச் சட்டங்களுக்குள் படுத்திருக்கிறார்.

எஸ்.பி.பி என்னும் கலைஞனின் சொத்து அவரது விருதுகள் அல்ல. அவரது ஆஸ்திகள் அல்ல. அவரது உண்மையான சொத்து அவருக்காக கண்ணீர் சிந்தும் அவரது ரசிகர்கள் தான். பாடும் நிலாவினை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது நியோதமிழ் ஆசிரியர் குழு.

Rest in Peace, SPB Sir.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!