இசைஞானியின் ஆன்மீக நாட்டம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சாதாரணமாக அவரது பாடல்களை கேட்கும் போதே பலருக்கும் கண்கள் குளமாகி விடுகிறது. அவரது ரசிகர்களுக்கு அவர் மட்டுமே கண்ணுக்கு தெரிந்த ‘இசைக் கடவுள்’. அந்த இசைக்கடவுளே, எல்லாம் வல்ல ஈசனுக்கு இசையால் விருந்து படைத்தால் எப்படி இருக்கும்? இசைஞானி நம் கண்களைக் குளமாக்கி, ஊனை உருக்கி, உயிரைப் பிழிந்து பாரங்களை இறக்கி வைத்த ஜீவனாக்கி விடுவார் அல்லவா?
வாருங்கள் இந்த இசைஞானியின் சிவராத்திரி ஸ்பெஷலை முழுதும் அனுபவிக்க….
1ஓம் சிவோஹம்… (நான் கடவுள்)
இசைஞானியின் சமீபத்திய இசை நிகழ்ச்சிகளில் ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு பிறகு தவறாமல் பாடப்படும் ‘ருத்ர தாண்டவ’ பாடல் இது. சிவனின் உடுக்கையில் இருந்து இசை பிறந்ததைப் போல் இசைஞானியின் உடுக்கை இசையில் தான் இப்பாடல் தொடங்குகிறது. முதல் 5 வினாடிக்குள் நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவீர்கள். விஜய் பிரகாஷ் பாடிய இப்பாடல் சிவ பக்தர்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானது. பல வட இந்தியர்களையும் இப்பாடல் வசியம் செய்ய தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யூடூப் தளத்தில் இந்த பாடலைக் கேட்ட ஒரு ராஜா ரசிகர், ‘நீங்க அந்த ருத்ரனின் மறுவடிவம். நாடி நரம்பெல்லாம் எப்படி நடுங்குது இந்த தெய்வீக இசையை கேட்கும்போது. கண்ணீரோடு சொல்றேன் ராஜா சார் அடுத்து பிறவியில் நீங்க சிவனோட “டமருகம்” (உடுக்கையாக) பிறப்பீர்கள் இது நான் வணங்கும் சதாசிவத்தின் மேல் சத்தியம்..’ என்கிறார் உணர்ச்சிப்பெருக்கில்.
ராஜாவோ தனக்கு அடுத்த ஜென்மம் இல்லை என்கிறார் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில். அதே நிகழ்ச்சியில் இப் பாடலை பாடிய விஜய் பிரகாஷ் காலணியை கழட்டி வைத்துவிட்டு பாடினார் என்பதை நோக்கும் போது இது ‘ருத்ரனின் தாண்டவம்’ தான் என்பது நிச்சயம்.
2புற்றில் வாழ் அரவம் அஞ்சேன்… (திருவாசகம்)
திருவாசகம் ஓரட்டோரியோவின் பாடலான இதில் நமக்கு சிம்பொனியை அறிமுகப்படுத்தும் வண்ணம் உரையாடல் ஒன்றை நிகழ்த்தி இருப்பார் ராஜா! திருவாசகத்தில் ஒரு வரியை அவர் பாடியதும் தொடர்ந்து வரும் இசை நம்மை நிச்சயம் திக்கு முக்காட வைக்கும். ஹெட்செட் அணிந்து கேட்டால் இன்னும் கூடுதலாக உள்ளம் உருகப்பெறலாம். ஏனெனில் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
3பூவார் சென்னி மன்னன்… (திருவாசகம்)
பூவார் சென்னி மன்னன் பாடலானது கோரஸ் எனும் மேலதிக மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான இசை மாலையாகும். மாலை பெரிதாக இருப்பினும் பூக்கள் மெல்லியவை தானே அப்படித்தான் இப்பாடலில் ராஜாவின் குரல் இருக்கிறது. கண்கள் மூடி கேட்டால், ‘தாமே தமக்கு சுற்றமும்’ எனும் போது கண்கள் கசிந்துருகுவது நிச்சயம்!
4பொல்லா வினையேன்… (திருவாசகம்)
இப்பாடலின் இடையிடையே வரும் ஆங்கில வரிகள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். சிவன் புகழ் ஆங்கிலத்திலும் அருமை!
5முத்து நல் தாமம் பூ மாலை தூக்கி (திருவாசகம்)
இப்பாடலும் இசையில் உங்களை லயிக்க வைக்கும். கும்மிப்பாட்டு தரும் குதூகலம் போல இப்பாடல் மீண்டும் உங்களுக்கு சக்தியை வழங்கும். கேட்டு சித்தம் சிவனோடு ஆடப்பெறுங்கள்.
மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!