இசை என்பது நம்முடைய நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் காலத்தை நிறுத்தி வைக்கும் சக்தியும் இசைக்கு இருப்பதாகத் தோன்றும். ஒவ்வொருவருக்கும் பாடல்கள் ஒரு வித வித்தியாச உணர்வினை ஏற்படுத்தும். காலங்கள் கடந்து, வாழ்க்கையில் நடந்த துக்கங்கள், இன்பங்கள் ஆகியவற்றை மறந்து திரியும் மனிதருக்கும், அவரின் மனதிற்கு நெருக்கமான பாடல் அவருடைய நினைவுகளை மீட்டெடுத்துத் தரும் வல்லமை பொருந்தியதாக இருக்கும்.
எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சில பாடல்களை நாம் கேட்கும் போது அந்த இசையில் மயங்கி அந்த வரிகளோடு ஒன்றிணைந்து மனம் கல்லாகிவிடும். நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும். எவ்வளவு துயரத்தில் இருந்தாலும் ஒரு சில பாடல்கள் அந்த துயரத்தில் இருந்து நம்மை மீட்டு வேறொரு உலகத்திற்கு அழைத்து செல்லும். இசை ஒரு மகத்துவம் பொருந்திய மாமருந்து.
இவ்வாறு தனித்துவமிக்க இசையின் ஞானி, இளையராஜாவின் இசைக்கென உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் கிட்டதட்ட மூன்று தலைமுறை அவருடைய பாடல்களை கேட்டே வளர்ந்துள்ளது என்றே கூறலாம்.
1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானியின் இசையை, தற்போது மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்க்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியினை சிங்கப்பூரைச் சேர்ந்த மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.