பாட்டாலே பரவசம்: கண்மணி அன்போடு காதலன்…

kanmani-anbodu-kadhalan-ilayaraja-kamalhaasan-vaali-guna

“கண்மணி அன்போட காதலன்
நான் எழுதும் கடிதம், கடுதாசி இல்லை கடிதமாகவே
இருக்கட்டும் “

அதை நாயகி பாடுகிறாள். “பாட்டாவே படிச்சிட்டாயா என்று நாயகன் சிரிக்கிறான். அவள் பாட்டாக பாடியவுடன் கேமரா மூலம் நாயகன் மேல் தீப்பந்தம் விழுவதாகக் காட்டப்பட்டுள்ளது . அவள் பாட்டைக் கேட்டவுடன் இவன் தலையில் நெருப்பு வைத்ததைப் போல உணர்வு.

“பொன்மணி உன்வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது “

நாயகன் இதைச் சொல்லச் சொல்ல நாயகி எழுதுகிறாள். “அவளை பத்தி நினைக்கறப்ப கவிதை அருவி மாதிரி கொட்டுது “ என்னும்பொழுது நாயகன் மேட்டில் ஏறுகிறார். அந்த மேட்டில் இருந்து அவன் இறங்கி வருவதே அருவி.

“அத எழுதணும்னு உட்கார்ந்தா வார்த்தை தான் வர மாட்டிங்குது”, உட்கார்ந்தா எனும் பொழுது மேட்டில் ஏறி உட்காருகிறார். இப்பொழுது மேட்டில் ஏறிவிட்டார் இனி கவிதை அருவி போல கொட்டிவிடும். அவ்வளவு அழகான திரைமொழி. அவள் பாடப் பாட இவன் “அதான் அதேதான்” என்று இவன் உற்சாகம் ஆகிறான். உற்சாகமாக அருவி போல எழுந்துவந்து அவள் அருகில் கைகளை ஆட்டிக்கொண்டே அமர்கிறான்.

அவன் காதல் கவிதை கொட்டும் அருவி, அவள் பக்கத்தில் ஒரு நிமிடம் அமர்ந்தால் மறுநிமிடம் மேட்டுப்பகுதியை நோக்கி ஏறுகிறான். இன்னும் ஒரு அடிமேலே போய் அமர்ந்து விடுகிறான்.

நடுவில் வரும் காட்சி இசைஞானியும், இயக்குனரும் போட்டி போடும் இடம். மலைக் குன்றுகளில் எல்லாம் கேமரா செல்கிறது. இந்தக் காதல் சாதாரண காதல் இல்லை என்பதால், சாதாரண இடத்தில் இல்லை. யாருமே போக முடியாத இடத்தில், யாருமே போக முடியாத ஆழத்தில் நாயகனும் நாயகியும் இருக்கிறார்கள். அந்த மலைக்குன்றுகளே பல கதைகள் சொல்கிறது. அந்த மலைக்குன்றும் அவர்களும், காலமும், காதலும் ஒன்று தான். எப்படி அந்த மலைக்குன்றுகளில் நாம் இறங்கிப்போவது கடினமோ? அதைப்போல அந்த காதலனின் உணர்வுகளைக் கடத்துவது கடினம்.

மலைக்குன்றுகளில் கேமரா பறக்கிறது. ஆழங்களில் செல்கிறது. அந்தக் காதல் விரிவை ராஜாவைத் தவிர வேறு யார் இவ்வளவு அழகாகக் கோர்த்திருக்க முடியும்? அந்த உற்சாகமான உயரமான, ஆழமான, காதல் மனநிலைக்கேற்ப வயலின்கள் வருடிக் கொடுக்கின்றன. கேமராவின் கோணம் புரியாத ரசிகனுக்கு ராஜாவின் இசை புரியும். அந்த இசையில் அவனுக்கு அந்தக் காதலின் ஆழம் உணர்த்தப்படுகிறது.

அடுத்த காட்சி இன்னும் கவிதை. ஒரு முக்கோண வடிவில் பாறைகள் நடுவில் நாயகன் நாயகி . ஒரு பாறை மேல் அவள் படுத்துக்கொண்டு இருக்கிறாள். அவன் நின்று கொண்டு கத்தி சண்டை போடுகிறான். பாறைகள் போலவே அவர்கள் உள்ளார்கள். ஒரு பாறை படுத்திருக்கிறது. ஒரு பாறை நிற்கிறது. இரண்டு பாறைகளையும் மேலே உள்ள பாறை இணைக்கிறது. இங்கே இந்த இருவரையும் இணைக்கும் பாறை காதல்.

அவள் படுத்துக்கொண்டு இருக்கிறாள். அவன் உற்சாகமாக கத்தி சண்டை போட்டதில் காதல் அவளுக்குள் வளர்கிறது. பின்னால் நெருப்பு எரிகிறது. அவள் கால் வைக்க ஒரு குச்சியை ஊன்றுகிறான் நாயகன். குச்சி தரையில் அடிக்கப்பட அடிக்கப்பட இசை அதற்கு ஏற்றார் போல் தெறிக்கிறது. சாதாரண காட்சி கூட ராஜாவின் இசையில் கவிதையாய் மாறுகிறது.

உற்சாகமாக ஓடிக்கொண்டு இருக்கும் இசையில் ஒரு வீணை சுருதி பரிதாபமாக இறங்குகிறது. நாயகன், நாயகியின் அடிபட்ட பாதத்தை குச்சியின் மீது அமர்த்துகிறான். காட்சியிலும் இசையிலும் அந்த மெல்லிய வலியை உணர முடிகிறது.

அவள் இவனிடம் கைகொடுக்கிறாள். பின்னால் ஒரு பாறை இன்னொரு பாறையுடன் கை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அவள், இவனுடைய காயத்தைத் தொட்டுப் பார்க்கிறாள், இசையும் இறங்கி வந்து அந்தக் காட்சியை அழகாக, ஆழமாக உணர்த்துகிறது.

“எனக்கு காயமேற்பட்டால் என் மேனி தாங்கும், உனக்கு தாங்குமா, என் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகையா வருது, ஆனா என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்படிங்குறப்ப வர அழுகை நின்னுடுது “

என்கிறான் நாயகன். “உன் உடம்பு தாங்குமா “ என்னும்பொழுது தாங்காது என்று தலையசைத்துப் படுக்கிறாள் நாயகி. “அபிராமி அபிராமி “ என்கிறான் நாயகன். சட்டென்று ஓடிச்சென்று இரண்டு மலை குன்றுகள் மத்தியில் இயற்கையிடம் நாயகன் பேசுகிறான்.
“மனித உணர்வு கொள்ள இது மனித காதல்
அல்ல
அதையும் தாண்டி புனிதமானது “

என்கிறான். இவன் சொல்வதையே இயற்கை எதிரொலிக்கிறது. இயற்கைக்குக் காதலை கொடுத்தால் காதலை திருப்பித் தரும். ஒலியைக் கொடுத்தால் ஒலியைத் திருப்பித் தரும்.

“உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன
பொன்மானே பொன்மானே ….
என்ன காயமானபோதும் என் மேனி தாங்கி கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே …
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க
ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னை தாக்கும்
என்றெண்ணும் போது வந்த
அழுகை நின்றது
இது மனித உணர்வு கொள்ள இது
மனித காதலல்ல அதையும்
தாண்டி புனிதமானது “

எந்தன் காதல் என்னவென்று என்ற ஏக்கத்தை அவள் பாடும் பொழுது, அவள் மேலே அமர்ந்து இருக்கிறாள். அவளின் ஏக்கத்திற்கான வடிகாலாய் அவன் கீழே நின்று கொண்டு இருக்கிறான். அவள் தூய அன்பின் அழுகை அவனை நனைக்கிறது.

அவளைத் தூக்கிக்கொண்டு

“அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா,
சிவகாமியை சிவனின் நீயும் பாதியே அதுவும் உனக்கு
புரியுமா?”

சிவகாமியே சிவனின் நீயும் பாதியே எனும் பொழுது, இரண்டு இரண்டாக பாறைகள், ஒரே மலையைச் சேர்ந்த இரண்டு பாறைகளின் நடுவில் நாயகன் நாயகியைத் தூக்கிக்கொண்டு வருகிறான்.

அவள் தூங்கிவிட்டாள். அவளைக் கிடத்திவிட்டு இவனும் ஒரு பாறையில் சாய்ந்து கொள்கிறான். அவள் ஒரு பாறையில் தூங்குகிறாள். இவன் பாறையில் சாய்ந்து, உட்கார்ந்த வண்ணம் தூங்குகிறான். பாறைகள் போலவே இவர்களும் காட்சிப்படுத்தப்பட்டது கவிதை. பாறைகள் எந்த அளவு இயற்கையானதோ அந்த அளவு இவர்கள் காதல் இயற்கையாக இருக்கிறது. எந்த அளவு மலை உயரமானதோ அந்த அளவு உயரமாக இருக்கிறது இவர்கள் காதல். பின்னால் வரும் பாறைகள் கூட கதை சொல்கிறது இந்தப் பாடலில். இசையா ? காட்சிகளா ? என சரிக்குச் சமமாக மோதிக்கொள்ளும் பாடல். காட்சி, இசை, படம் என்பதைத் தாண்டி ஒரு உன்னதக் காதலை இப்பாடல் ஒட்டுமொத்தமாக ரசிகனுக்குக் கடத்துகிறது.

கடைசியாக, அவர்கள் தூங்கி விட்டார்கள். மலை அவர்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் தூங்கிவிட்டாலும், அவர்கள் காதல் அமரக்காதலாய் விழித்துக்கொண்டு இருக்கிறது. உலகத்தில் அற்புதமான மூன்று விடயங்கள்,
இசை
இயற்கை
காதல்
அம்மூன்றும் ஒரு சேரும் புள்ளி இப்பாடல்.

இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க இங்கே சுட்டவும் !!