பாட்டாலே பரவசம் : சென்னை வட சென்னை கறுப்பர் தமிழ் மண்ண

Date:

Image may contain: 1 person

ரயில் ஓடும் சத்தத்திலிருந்து பாடல் ஆரம்பிக்கிறது. சென்னை மக்களின் அசுர வேக வாழ்க்கைக்கு ரயில் ஒரு குறியீடு. சென்னை வட சென்னை  பாடலை சட்டென்று ஒரு ரயில்  சத்தத்தை வைத்து ஆரம்பித்தது தற்செயலானது அல்ல.

வட  சென்னையின் படம் வரையப்பட்ட சுவர்கள், கூவம் ஆறு, உழைக்கும் மக்கள் அப்புறம் ஒரு ஏரியல் கழுகுப் பார்வையில் வட சென்னை பற்றிய ஷாட்.  உண்மையில் வட சென்னை மக்கள் வாழ்வியலை, பல ஆயிரக்கணக்கான மனித முகங்களை, உழைக்கும் மக்களை அத்தனை பெரிய திரையில் பார்க்கும்பொழுது மெய்  சிலிர்க்கத்தான் செய்தது. அரிதாரம் பூசி 1000 பேர் நடுவில் நாயகன் நாயகியைப் பல கோணங்களில் காட்டிவிடலாம். ஒரு வரலாற்று ஆவணம் போல அத்தனை உழைக்கும் மக்களையும் ஒட்டுமொத்தமாக நான் திரையில் பார்த்ததில்லை. எங்கு காணினும் அடித்தட்டு மக்கள்.

அந்த ஏரியல் ஷாட்டில் மொத்த வட சென்னையும் தெரிகிறது. ஏரியல் வியூ பொறுமையாக நகர்கிறது. இன்னும் நகரத்தை நெருங்கிப் பார்க்கப் போகிறோம் என்பதை உணர்த்துவது சிலிர்ப்பு. அப்படியே மீன் பிடிக்கும் கப்பல், மீன் விற்கும் ஆயா, பந்து விளையாடும் சிறுவர்கள், சிரித்துப் பேசும் இளைஞர்கள், மார்க்கெட், பேண்ட் வாத்தியம், கூட்டமாய் இருக்கும் சிறுவர் சிறுமியர், வெஸ்டர்ன் நடனமாடும் இளைஞர்கள், கால்பந்தாட்டம் என ஆரம்பமாகிறது பாடல்.

“சென்னை வட சென்னை
இந்தக் கறுப்பர் தமிழ் மண்ண
யாரோ இசைப்பாரோ 
எங்க வேர அசைப்பாரோ

 எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு 
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு”

எங்க ஊரு மெட்ராஸ் என்னும்பொழுது, நாயகன் காளி  பிரேமிற்குள் வருகிறார் கால்பந்தாட்ட வீரராய். இது ஒரு மிகச்சிறந்த அறிமுகக் காட்சி என்பேன்.  நாயகனைத் தனி ஒரு பிம்பமாக காட்டாமல், வீரன் தீரன் என்று காட்டாமல், பல விதமான மக்களைக் காட்டிவிட்டு அந்த மக்களில் ஒருவன் என் நாயகன் என்று அறிமுகம் செய்வது ரஞ்சித் எந்த அளவு அரசியல் பக்குவப்பட்ட இயக்குனர் என்பதைக் காட்டுகிறது. நாயகன் இந்த மாதிரி கூட்டத்தில் ஒருவன், வட சென்னை கூட்டம் முன்னிறுத்தப்படுகிறது. நாயகன் அதற்குள் வருகிறான்.

அழகாக இருக்கிறது திரைக்கதை. முதலில் வட சென்னை பற்றிய அறிமுகம், பின்னர் காட்சிகளில் நாயகன் குடும்பம்,  நாயகனின் நண்பர்கள், அவனுக்குப் பிடித்த விளையாட்டு, நாயகனுக்குப் பெண் பார்ப்பது, நண்பர்களுக்கு ஒன்றெனில் நாயகனும் நண்பர்களும் பஞ்சாயத்திற்குப் போவது என்று கூட்டமாய் வாழும் மனிதர்களைப் பதிவு செய்கிறார் இயக்குனர்.

அத்தனை ஷாட்களிலும் மனிதர்கள் கூட்டம். வட  சென்னையின் சிறிய நெருக்கமான சந்துகள்.
அதே போல மனதிற்கு நெருக்கமான  மனிதர்கள்.

“ரிப்பன் பில்டிங் ஹைகோர்ட்
செங்கல் மணல் மட்டும் அல்ல
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்கு டா”

என்ற வரிகளில் அனைத்து கட்டிடங்களும் காட்டப்படுகிறது. இறுதியாக ஒரு வயதான பாட்டி செங்கல் உடைக்கிறார். உண்மையான பிரமாண்டம் அந்தக் கட்டிடத்தில் இருந்ததை விட அந்த பாட்டியின் உழைப்பில் இருந்தது.

 “கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்தில இருந்து பறவயா பறப்போம்”

என்ற வரிகளில் பேண்ட் வாத்தியம், டான்ஸ், உழைக்கும் மக்களின் கொண்டாட்டம் என்று செல்கிறது பாடல். நாயகனுடைய நண்பன் அன்பு அறிமுகம். அவனின் மனைவி மற்றும் குழந்தை, அவனது அரசியல் கட்டப் பஞ்சாயத்து என நகர்கிறது காட்சி.

 “கமர்கட்டு கண்ணுக் காரி
திமிரிக்கிட்டு போகும் பொது
அமரன்கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டம் தான்”

ஒரு அழகான காதல் கதையை இந்த வரிகளில் சொல்கிறார் இயக்குனர், ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து காதலைச் சொல்கிறான் இளைஞன். முகத்தில் கோபத்தைக் காட்டுகிறார் அப்பெண். அப்பெண் அவனைத் தொட்டுவிட்டு முன்னால் செல்கிறார். அவன் பின் தொடர்கிறான் என்ற சந்தோசம் வேறு. இக்காட்சி ஒரு சிறிய கவிதை.

வட சென்னையின் விளையாட்டுகள் காரம் போர்டு, கால்பந்தாட்டம் , குத்துச்சண்டை, கபடி எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. பேண்ட் சத்தம், கானா பாடல் எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. போஸ்டர் ஒட்டி வேலை செய்தாலும் மக்களுக்கு ஏமாற்றத்தை விட வேறு எதுவும் கிடைப்பதில்லை.

 “போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு
கூடம் கூடி வோடே போட்டு
ஏமாற்றமே எங்க பண்பாடு தான்

 உழைக்கும் எனமே உலக ஜெயித்திடும் ஒரு நாள்
 விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்” 

மக்களின் விதவிதமான உழைப்புகள் காட்டப்படுகிறது. துணி துவைக்கும் உழைப்பாளியில் இருந்து, அயன் செய்பவரிலிருந்து, நகர் சுத்தம் செய்யும் தொழிலாளிகளில் இருந்து அனைத்து விதமான தொழில்களும் காட்டப்படுகிறது. உழைக்கும் இனத்தினை அழுத்தமாய் பதிவுசெய்யப்பட்ட பாடல்.

பாப் மார்லி படம் வரைந்த சுவருக்குப் பக்கத்தில் வெஸ்டர்ன் ஆடுகிறார்கள் இளைஞர்கள். வட சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் 10 மைக்கேல் ஜாக்சன், ஐந்து பாப் மார்லிகள் தேறுவார்கள் . குறிப்பாய் ஒடுக்கப்படும் இனமான மக்களுக்கு ஜாக்சன் ஒரு விடுதலையின் குறியீடு. உழைக்கும் மக்களிடமிருந்தே உக்கிரமான இசையும், ஆழமான படைப்பும், தன்னிலை மறந்த வெஸ்டர்ன் நடனமும் இருக்கும். அதனாலோ என்னவோ வெஸ்டர்ன் நடனங்களை வெறித்தனமாக ஆடுவார்கள் வட சென்னை வாசிகள். பின்னால்  இருக்கும் பாப் மார்லி படம் வரைந்த சுவர் கூட விடுதலையின் அடையாளமே.

கடைசி ஷாட்  கால்பந்தாட்ட மைதானத்தில் வந்து முடிகிறது. எப்படி நடனமோ, வட சென்னை மக்களுக்கு மேட்டுக்குடி கிரிக்கெட் பிடிப்பதில்லை.  கிரிக்கெட் ஒரு தனிநபர் விளையாட்டு. அதாவது தனிநபர்களை முன்னிறுத்தும் விளையாட்டு. ஆனால் கால்பந்தாட்டம் கூட்டு முயற்சி. மெஸ்ஸி வைத்து உங்கள் டீமில் விளையாடினாலும், கூட்டாய் நீங்கள் விளையாட வில்லை என்றால் தோல்வி உறுதி. குறிப்பாய் விட்டுக்கொடுக்க வேண்டும், பந்தை பாஸ் செய்யவேண்டும்.

வட சென்னை மக்கள் கூட்டமாய் வாழ்ந்து பழகியவர்கள். பகிர்ந்து வாழ்பவர்கள். இயல்பாகவே அவர்களிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்கும். அதனாலேயே அவர்களுக்குக் கால்பந்தாட்டம் பிடித்து இருக்கிறது. வட சென்னையின் ஆஸ்தான விளையாட்டு கால்பந்தாட்டம்.  உலகில் எடுத்துக்கொண்டால் ஏழை நாடு பிரேசில் தான் கால்பந்தாட்டத்தின் கிங். கால்பந்தாட்டத்துடன் பாடல் முடிகிறது.

உழைக்கும் இனமே உலகை ஜெய்திடும் ஒரு நாள். பாடல் முழுவதும் தனிநபர் முன்னிலை படுத்தாத கூட்டமாய் மக்கள் திரளாய் இருக்கும் ஷாட்கள். அனைத்துமே எதார்த்த பதிவுகள், ஒரு பாடல் பார்த்ததே  படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. பெரும்பான்மையான மக்கள் கறுப்பர் மக்கள். இந்த வட சென்னை கறுப்பர்களின் நகரம். நீக்ரோவாக இருக்கட்டும், சென்னையாக இருக்கட்டும். அவர்களே வீடுகள் முதல் கட்டிடம் வரை கட்டுகிறார்கள். மனிதக்கழிவுகளை அகற்றுகிறார்கள். கடுமையான உழைப்பை எல்லாம் அந்த கறுப்பர் இனமே செய்கிறது.

வெயிலில் உழைத்து உழைத்துக் கறுப்பர் இனமாய் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.  இப்பாடல் முழுவதும் கறுப்பர் இன மக்கள் தான். அத்தனை ஷாட்கள். பாடலில் ஒரு மானுட சமூக வாழ்வியலைக் காட்டியுள்ளார் இயக்குனர். உழைக்கும் மக்களின் நிறம் கறுப்பு, சென்னை கறுப்பர் மண் தான்.

இந்தப் பாடலை கேட்டு ரசிக்க இங்கே சுட்டவும் !!

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!