இளையராஜா இந்திய இசைத்துறையின் உச்ச முகட்டில் வீற்றிருக்கும் இசைப்பிரம்மா. தமிழ் சினிமாவின் ரசிகர்களை தன் இசை என்னும் மந்திரத்தால் கட்டிப்போட்டவர். அவருடைய 75 வது பிறந்தநாளை தமிழக திரைத்துறையின் தயாரிப்பாளர் சங்கம் வெகு விமர்சியாக கொண்டாட இருப்பதாக அறிவித்துள்ளது. அந்நாளில் நடிகர் நடிகையர் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 மற்றும் 3 – ஆம் தேதிகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ராக தேவன்
கர்நாடக கீர்த்தனைகளும், ஹிந்துஸ்தானியும் தமிழகத் தெருவெங்கிலும் ஒலித்துக்கொண்டிருந்த நேரம் அன்னக்கிளி படத்தின்மூலம் அறிமுகமானார் இளையராஜா. கேட்டவுடன் உருக்கிவிடும் இசை. வெளிப்படுத்த முடியா தவிப்புகளை, மனித குலத்தின் சொல்ல இயலா உணர்ச்சிகளை ஒலிச்சித்திரமாக வடிவமைத்தார் இளையராஜா. 16 வயதினிலே வெளிவந்து இந்தியா சினிமா ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. பாரதிராஜா, கமல்ஹாசன், இளையராஜா என மாபெரும் “தலைகள்” ஒன்று சேர்ந்திருந்தன. கடலோர கவிதைகள், அபூர்வ சகோதரர்கள், மூன்றாம் பிறை, முதல் மரியாதை, முள்ளும் மலரும் என தமிழ் இசை மரபையே மாற்றிக்கட்டினார் இளையராஜா. வடக்கே புகழ் பெற்றிருந்த இசைமேதைகள் கூட தெற்கில் ஒரு சூரியன் உதித்துக்கொண்டிருகிறது என்றார்கள். அடுத்தடுத்த வெற்றிப்படம். அவரது இசைக்குத் தமிழகம் அடிமையாகிக் கொண்டிருந்தது. இல்லை அவர் அடிமையாக்கிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்.இளையராஜா, ராஜா ஆனார். பின்னர் அப்பெயர் ராஜா சார் என்றானது.

நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமின்றி பஞ்சமுகி என்னும் கர்நாடக செவ்வியல் ராகத்தைக் கண்டுபிடித்து சங்கீத ஜாம்பவங்களை எல்லாம் திகைப்பில் ஆழ்த்தினார். இதுவரை நான்கு முறை தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். அது தவிர்த்து தமிழ், மலையாளம், ஆந்திர அரசுகள் அவருக்குப் பல விருதுகளை அளித்துச் சிறப்பித்திருக்கிறது. தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மபூஷன், பத்ம விபூஷன் விருது ஆகியவை இளையராஜாவின் அசாத்திய உழைப்பிற்குக் கிடைத்த பரிசுகள்.
இசை ஞானி 75
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் சில கல்லூரிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தன. கோவையில் உள்ள P.S.G தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆர்ப்பரிக்கும் மாணவர்களின் முன்னால் தன்னுடைய ஆர்மோனியத்தில் மெட்டுக்களை அமைத்து அசத்தினார். கடைசியாய் தென்றல் வந்து தீண்டும்போது பாடலை அவர் இசைக்க அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்துபோனது. சென்னையில் உள்ள M.G.R பல்கலைக்கழகம் இளையராஜாவின் பிறந்தநாளில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தியது. அதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 – ஆம் தேதிகளில் தயாரிப்பாளர் சங்கம் இளையராஜாவிற்கு ,” இசை ராஜா 75 ” என்னும் பெயரில் விழா எடுக்க உள்ளது.
ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதியுதவி செய்வதற்காக இசைக்கச்சேரி நடத்த இருப்பதாக இளையராஜா அறிவித்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கமே விழா எடுப்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் அனைத்து நிதியும் தயாரிப்பாளர் சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இந்திய திரைத்துறையினர் பெரும்பாலானோர் இந்நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள உள்ளனர். இசையின் அரசனுக்கு நடத்தப்படும் விழவைக்கான ஏராளமான அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
