90 – களின் துவக்கம். இளையராஜா மகுடம் தரிக்காத மன்னராக இருந்த காலம். ஆண்டுக்கு இருபது படங்களுக்கு மேல் இசையமைத்துக் கொண்டிருந்த இசை ஞானியை புருவங்கள் தலைக்கு ஏற பார்த்துக்கொண்டிருந்தார்கள் பாலிவுட் பெரும்புள்ளிகள். என்னதான் புதிய இசை, புதிய பின்னணி என்றாலும் தமிழக திரைப்படக் களத்தில் ஒரு வெறுமை பரவியிருந்தது. தமிழின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணி சார் என்னும் மணிரத்னம், இளையராஜா மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புது இசையமைப்பாளரை தேடிக்கொண்டிருந்தார்.

ஒருபுறம் தமிழக மக்களை தன் வரிகளால் கட்டிப்போட்ட கவிப்பேரரசு வைரமுத்துவும் இதே காரணத்தால் இசை ஞானியை விட்டு விலகியிருந்தார். இதனால் பாட்டெழுதும் வாய்ப்பு கிடைக்காமல், எதிர்காலம் குறித்த கவலைகளோடும், கைநிறைய வார்த்தைகளோடும் காத்திருந்தார் கள்ளிகாட்டு இதிகாச நாயகன். கடைசியில் அந்தக் காலமும் வந்தது.
யார் அந்தப் பையன்?
மணிரத்னத்தின் ரோஜா பட போஸ்டர் வெளிவந்ததுமே எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி யார் அது ரகுமான்? தான். விளம்பரப்படங்களுக்கு இசையமைத்த அல்லா ரக்கா ரகுமான் முதல் திரைப்படத்திற்கு இசையமைக்கத் துவங்கினார். வைரமுத்துவின் காத்திருந்த கன்னித்தமிழ் கட்டுக்களை உடைத்து வெளியேறும் காட்டாறின் வேகத்திலும், சிலிர்க்கவைக்கிற காதல் ரசத்தோடும் வெளிவந்தன.
புதிய இசையமைப்பாளர்கள் வருவதும் போவதுமாக இருந்த காலத்தில் “புது வெள்ளை மழை” பாடல் ரகுமான் ஜெயிக்கிற குதிரை என்று நிரூபித்தது. மணி ரத்னத்தின் ஒவ்வொரு பிரேமிலும் கதை சொல்லும் நுணுக்கம், கிறங்கடிக்கிற ரகுமானின் இசை, சொக்கவைக்கிற வைரமுத்துவின் பாடல்கள் என ரோஜா மிகப்பெரிய வெற்றிப்படமாகியது. மூவரும் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அந்த நெருக்கம் இன்றுவரை தொடர்கிறது.

குவிந்த வாய்ப்புகள்
அதீத பேராற்றல் மற்றும் கடும் பொறுமைக்கு காலம் வெகுமதி அளித்துக்கொண்டிருந்தது. கைநிறைய படங்கள். இந்தி திரை உலகிலும் கால் பதித்தார் ரகுமான். அடுத்தடுத்த வெற்றிப்படங்கள். ரங்கீலா இந்தியில் மிகப்பெரிய ரசிகக்கூட்டத்தை ரகுமானிற்கு அளித்தது. தமிழில் புதிய கதையோடு காத்திருந்தார் மணிரத்னம். பெயர் பாம்பே.
இப்படி தமிழகத்தின் முன்னணி இயக்குனர்களோடு கரம் கோர்த்தார் ரகுமான். இவைபோக 1997 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட வந்தே மாதரம் ஆல்பம் இன்னும் இளைஞர்களால் முணுமுணுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கிராமத்து வாசம்
நகரங்களை மையப்படுத்திய கதை. நவீன உலகத்தின் அங்கமாக இருக்கும் நாயகன் இப்படியான களத்திலேயே இருந்த ரகுமானை கைபிடித்து செம்மண் வாசம் வீசும் ஈர நிலத்திற்கு அழைத்துப்போனார் பாரதிராஜா. பால்ய நண்பர்களான இளையராஜாவும், பாரதிராஜாவும் பிரிந்ததினால் ரகுமானிற்கு கிடைத்த வாய்ப்பு என்று கிசுகிசு எழுதப்பட்டது. எனக்கு மேற்கத்திய இசையும் தெரியும், மாட்டுவண்டிகளின் மணிச் சத்தத்தை இசையாக்கவும் தெரியும் என செய்துகாட்டினார் இசைப்புயல். கிழக்குச் சீமையிலே பாரதிராஜாவுன் ட்ரேட்மார்க் படமானது. கிசுகிசுக்களை கிழித்துத் தொங்கவிட்டார் ரகுமான்.
ஆஸ்கார் நாயகன்
ரகுமானின் இசை கடல் பரப்புகளையும் தாண்டி வெளிநாடுகளுக்கும் கேட்கத்தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு அவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் படம் அவருக்கு இரண்டு ஆஸ்கார்களை வழங்கியது. உலக அரங்கில் ஒரு தமிழ் கலைஞனின் பாதம் முதலில் பட்ட தருணம் அதுதான். மொத்த இந்தியாவும் தலைமேல் வைத்துக்கொண்டாடியது அவரை. இசைப்புயல் ஆஸ்கார் நாயகனாக மாறினார்.

ஆறு தேசிய விருதுகள், இரண்டு ஆஸ்கார், கிராமி விருது, ஆறு தமிழக அரசு விருதுகள் என வெற்றி முழக்கமிட்ட ரகுமானிற்கு பத்ம பூஷன் ( Padma Bhushan) விருது மத்திய அரசின் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்திய இசையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இன்று 52 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹெட்போன்களின் பிறப்பே ரகுமானின் இசைக்குத்தான் என நினைக்கும் கோடானுகோடி இளைஞர்கள் சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாடிவருகின்றனர்.