ராகதேவன் இளையராஜாவிற்கு தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நேற்றும், நேற்று முன்தினமும் சென்னையில் நடந்தது. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அனைவரும் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். இளையராஜாவுடனான தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். பின்னணிப் பாடகர்கள் பலரும் இளையராஜாவின் பாடலைகளைப் பாட பார்வையாளர்கள் அனைவரும் இசையில் திக்குமுக்காடிப் போனார்கள்.
காலில் விழுந்த கமல்ஹாசன்
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். மேலும் இளையராஜாவின் இசையில் சில பாடல்களையும் பாடினார் கமல்ஹாசன். இளையராஜாவை சாமி என்று அழைக்கும் காரணத்தை ரஜினி சொல்ல இசைராஜா இன்பராஜாவானார். மேலும் இளையராஜா ஒரு சுயம்பு லிங்கம் போன்றவர் என்றும் புகழாரம் சூட்டினார். வள்ளி திரைப்படத்தில் கார்த்திக் ராஜா இசையமைத்ததையும் நினைவுகூர்ந்தார் ரஜினிகாந்த்.
போதை
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக் இளையராஜா ஆரம்பத்தில் Hungry உடன் சென்னை வந்தார். ஆனால் இன்று Hungary உடன் வந்திருக்கிறார் என்றார். இளையராஜாவின் துயர்மிகுந்த ஆரம்ப நாட்களையும், தற்போது அவருடைய கச்சேரியில் வாசிக்க வந்திருக்கும் ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களையும் குறிப்பிட்டு விவேக் பேசியது சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது.
இரவில் அனைவருடைய சரக்கும் காலியாவதற்கு ராஜாவின் இசையே காரணம் என்று விவேக் சொல்ல அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது.
நிகழ்ச்சிக்கு இடையே யுவன் ஷங்கர் ராஜாவின் குழந்தையைத் தன் மடியில் அமர்த்தி, ஹார்மோனியப் பெட்டியில் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார் இளையராஜா. மாங்குயிலே என குழந்தை வாயசைக்க கூட்டம் உற்சாகத்தால் ஆர்ப்பரித்தது.
பாடல்கள்
நிகழ்ச்சியில் மொத்தம் 35 பாடல்கள் பாடப்பட்டன. அவை பின்வருமாறு,
- குரு பிரம்மா – கோரஸ்
- ஜனனி ஜனனி – இளையராஜா
- ஓம் சிவோஹம் – ஹரிச்சரண்
- இளமை இதோ இதோ – மனோ
- நின்னுக்கோரி வர்ணம் – சித்ரா
- பூவே செம்பூவே – மது பாலகிருஷ்ணன்
- வேகம் வேகம் – உஷா உதூப்
- ஆனந்த ராகம் – விபாவரி
- இதயம் ஒரு கோவில் – இளையராஜா
- ஒளியிலே தெரிவது – பிரசன்னா, பவதாரிணி
- பூவே இளைய பூவே – முகேஷ்
- மடை திறந்து – மனோ
- ராம் ராம் ஹேராம் – கமல், ஷ்ருதி
- நினைவோ ஒரு பறவை – கமல், ஷ்ருதி
- உன்ன விட – கமல், சித்ரா
- ராஜ ராஜ சோழன் – கோரஸ், ராஜா, மது
- என் இனிய பொன் நிலவே – கோரஸ், ராஜா, மது
- நான் பொறந்து வந்தது – A Capella (எந்த இசைக்கருவியும் இல்லாமல் வாய் மூலமே இசையிட்டு நிரப்பி பாடும் ஒரு முறை)
- தென்றல் வந்து தீண்டும் போது – சித்ரா, இளையராஜா
- என்னுள்ளே என்னுள்ளே – விபாவரி
- கண்மணி அன்போடு – கமல், சுர்முகி
- வனிதாமணி – கமல், மனோ, பிரியா ஹமேஷ்
- ராக்கம்மா கையத்தட்டு – ஹரிச்சரண், பிரியா ஹமேஷ்
- கண்மணியே காதல் என்பது – மனோ, விபாவரி
- மாருகோ மாருகோ – சித்ரா, ஹரிச்சரண்
- ஓ பட்டர்பிளை – மனோ ஸ்ரீநிஷா
- காதல் ஓவியம் – கார்த்திக் ராஜா, விபாவரி
- ஹே உன்னைத்தானே – மனோ, அனிதா
- சுந்தரி – மனோ, சித்ரா
- ரம் பம் பம் – உஷா உதூப் மனோ, மனோ
- தண்ணி தொட்டி – உஷா உதூப், ஹரிச்சரண்
- கண்ணே கலைமானே – மது, சுர்முகி
- ஏஞ்சோடி மஞ்சக் குருவி – மனோ சித்ரா
- காட்டுவழி – இளையராஜா
- தென்பாண்டி சீமையிலே – இளையராஜா
நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரைத் தொடர்ந்தாலும் ரசிகர்கள் கடைசிவரை இருந்து முழு நிகழ்ச்சியையும் பார்த்து விட்டுத்தான் சென்றனர். இளையராஜா தனது ரசிகர்களின் மனங்களில் எப்படி வாழ்கிறார் என்பதற்குச் சான்று இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி.