அரசியல்-கேங்ஸ்டர் படம் – வடசென்னை – திரைவிமர்சனம்

0
130

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி, வெற்றிக் கூட்டணி என்பதை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது வடசென்னை.

இப்போது திரையுலகில் சாமானிய மக்களின் உரிமை, அவர்களுக்கான அரசியலைப் பேசும் படங்களை எடுப்பது ஒரு ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால், 10 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட திரைக்கதையில் அழுத்தம் திருத்தமாக அரசியலைப் பேசி இருக்கிறார் வெற்றிமாறன்.

ஜில் ஜங் ஜக் திரைப்படத்தில் ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ என்று ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார்கள். ஒரு விஷயம் அதற்கு சம்பந்தப்பட்டவர்களை, எந்த விதத்திலும் சம்பந்தமே படாதவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும். அது போன்ற ஒன்று தான் படத்தின் கரு.

ஒரு கொலையில், ஒரு துரோகத்தில் தொடங்கும் கதை, அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒருவன் அவனே அறியாமல் அந்தக் கொலைக்குப் பழியெடுக்கத் தொடங்குவதில் முடிகிறது. அதற்கான காரணமும், அதன் ஒற்றுமையும் தான் வடசென்னை திரைப்படம்.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் கொஞ்சம் நீளமான திரைப்படம். ஆழமான, அடர்த்தியான கதைக்களம். முதல் பாதியில் கதாபாத்திரங்களை மனதில் நிறுத்துவதில் சற்று குழப்பம் ஏற்பட்டாலும், இரண்டாம் பாதியின் தீவிரம் அதீதம். ஒரு இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படம், ஒரு பகுதி மக்களின் வாழ்வியலை, அரசியலை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறது.

வெற்றிமாறன் எப்போதும் கதாபாத்திரத் தேர்வுகளை கச்சிதமாக செய்பவர். வடசென்னையிலும் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ராதாரவி என அனைவரும் நடிப்பில் புகுந்து விளையாடியுள்ளனர்.

தனுஷை எந்த அளவுக்குப் பாராட்டலாமோ அதே அளவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷையும் பாராட்ட வேண்டும். அசாத்திய நடிப்புக்குச் சொந்தமான திராவிட அழகி. அதே போல் ஆண்ட்ரியா தான் கதையின் உண்மையான நாயகி. அமீருக்கு ஏன் ஆண்ட்ரியா ஜோடியானார் எனத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சமுத்திரக்கனியையும், கிஷோரையும் மற்ற இயக்குனர்களைப் போல வீணாக்காமல் விளையாட விட்டிருக்கிறார் வெற்றிமாறன். டேனியல் பாலாஜியும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

குப்பமும், சிறைச்சாலையும் மட்டும் தான் கதை நகரும் இடங்கள்.  ஆனாலும், கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல், நம்மை நகர விடாமல் கட்டிப் போட்டு விடுகிறது திரைக்கதை.

வடசென்னையைக் கொண்டாட மற்றொரு காரணம், ஒரே ஒரு சண்டையில் கையில் முத்தம் வாங்கிக் கொண்டு, “இனிமேல் எல்லாம் அப்டித் தான்” என்ற ஒற்றை வசனத்தில் தலைவனாகாமல், ஒரு சாமானியன் சூழ்நிலை காரணமாக அடுத்தடுத்த நகர்வுகளால் தலைவனாகத் தலையெடுப்பதைக் காட்டியிருப்பது. நில உரிமை அரசியலை, அதற்கெதிரான கேள்விகளை அழுத்தமாகப் பேசியிருப்பது.

கதைக்களத்திற்கேற்ப ஒளிப்பதிவும் அருமை. ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்திற்கு முற்றிலும் பொருந்திப் போகும் விதத்தில் கேமராவை கொம்பு சீவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

திரைப்படத்தின் மற்றுமொரு நாயகன் சந்தோஷ் நாராயணன். சந்தோஷ் மண்ணின் இசையைக் கொடுப்பதில் கில்லாடி. மெட்ராஸ், பரியேறும் பெருமாள் திரைப்படங்களில் வியக்க வைத்தவர். இந்தப் படத்தில் அசால்ட்டு பண்ணியிருக்கிறார். ஜீவனாகக் கதையில் கலந்திருக்கிறது இசை. திரையரங்கில் படம் முடியப்போகிறது என்று தெரிந்தவுடன் கிளம்பி விடாமல், அந்த இறுதி இசையை முழுவதும் கேட்க முயலுங்கள். அபார இசையமைப்பு.

வடசென்னையில் வண்ண வண்ணமாகக் கெட்ட வார்த்தைகள் இருக்கும். ரத்தம் தெறிக்கத் தெறிக்கப் பழி வாங்கும் வெறியும், துரோகமும் இருக்கும். ஆனாலும் திரைப்படம் கொண்டாடப்படும். புதுப்பேட்டை திரைப்படம் வெளியான போது அதற்குக் கிடைக்காத அங்கீகாரம் இந்தப் படத்திற்குக் கிடைக்கும். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை வரிசையில் மீண்டும் ஒரு தரமான திரைப்படம் வடசென்னை. வடச்சென்னை முதல் பாகத்தின் முடிவு அன்பின் ஆட்டத்தின் தொடக்கமே. இரண்டாம் பாகம் தான் அவன் எழுச்சி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

பின்குறிப்பு :

திரைப்படத்தில் நீங்கள் கேட்ட மற்றும் கேள்வியே படாத கெட்ட வார்த்தைகள் உண்டு, சில பல முத்தக்காட்சிகள் உண்டு. எனவே குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் கூடுமான வரை தவிர்த்து விடுங்கள்.