திரையரங்குக்குள்ளே பாதுகாப்பான ஓர் இடத்தில் காரை நிறுத்தி விட்டு, மாலை மங்கியதும், குடும்பத்துடன் கார் முன்பு தரையில் அமர்ந்து, கால்களை நீட்டிக்கொண்டு, இயற்கைக் காற்று நம்மைச் சுற்றி சாமரம் வீச, வானத்தில் விண்மீன்கள் மின்னத் தொடங்க, சிறிது தூரத்தில் தெரியும் வெண் சுவரில் ஓடத்துவங்கும் திரைப்படத்தை ரசித்தால் எப்படி இருக்கும்?அப்படியே இடையிடையே காபி, பாப்கார்ன் என வயிற்றுக்கும் ஈய்ந்து திரைப்படத்தை ரசித்தால் எப்படி இருக்கும்? அப்படி அழகான அனுபவம் தருபவை தான் டிரைவ்-இன் திரையரங்குகள் (Drive-In Theatres).
டிரைவ் இன் திரையரங்குகள் பல ஆண்டுகாலமாக இந்தியாவில் இயங்கி வந்தாலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, சிவாஜி திரைப்படத்தில் வந்த பிறகே தமிழகம் முழுக்க டிரைவ்-இன் திரையரங்குகள் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.
இன்று ரூஃப் டாப் (Roof Top Theatres), திறந்தவெளி திரையரங்குகள் (Open Theatres) என திரையரங்கங்கள் மாறிக்கொண்டே வந்தாலும், டிரைவ்-இன் திரையங்குகள் தரும் அனுபவமே அலாதியானது.
டிரைவ்-இன் திரையரங்குகள் உருவான கதை
1933-ம் வருடம், ரிச்சர்ட் ஹோலிங்ஷெட்(Richard Hollingshead) என்பவர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், முதல் திறந்தவெளித் திரையரங்கை உருவாக்கினார். வைவ்ஸ் பிவேர் (Wives Beware) என்னும் ஆங்கில நகைச்சுவைத் திரைப்படத்தை, விண்மீன்கள் மின்னும் வானத்தின் கீழ் மக்கள் கண்டு களித்தனர். அப்போது ஒரு நபருக்கு 25 சென்ட்ஸ் (25 cents) கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
பின்னர் ரிச்சர்ட், அனைத்து வாகனங்களுக்கும் திரை தெரியும் படியான, வெவ்வேறு உயரங்கள் கொண்ட அடுக்கு போன்ற அமைப்பை உருவாக்கினார். அங்கு ரசிகர்கள் தங்கள் காரின் உள்ளேயே அமர்ந்து திரைப்படத்தைக் காண முடியும். 1933-ம் வருடம் மே மாதம், ரிச்சர்ட் தனது இந்தக் கருத்துக்கு காப்புரிமை பெற்றார். டிரைவ் இன் திரையரங்குகள் உருவாகின.
டிரைவ்-இன் திரையரங்குகளின் வளர்ச்சி
இரண்டாவது டிரைவ் இன் திரையரங்கம், ஷங்வீலெர்(Shankweiler) என்பவரால் உருவாக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் சில தோன்றின. ஆனால், 1940-ம் ஆண்டுகளில், கார்களிலேயே ஸ்பீக்கர்களை இணைக்கத் தொடங்கிய பின்னர் தான் டிரைவ் இன் திரையரங்குகள் வளர்ச்சியடையத் தொடங்கின. 1958-ல் அமெரிக்காவில் மொத்தம் 4,063 டிரைவ் இன் திரையரங்கங்கள் இருந்துள்ளன.

ஏன் இவை மக்களால் விரும்பப்படுகின்றன ?
டிரைவ் இந்த திரையரங்குகளால் வழங்கப்படும் எண்ணற்ற வசதிகள் தான் மக்கள் இவற்றை விரும்பக் காரணம். மூன்று மணி நேரம் அடைத்துப்போட்டது போல ஒரு அரங்கிற்குள் இருக்கத் தேவையில்லை. காற்று வாங்கலாம், குழந்தைகளை அழைத்து வரலாம், காரை விட்டு வெளியே இறங்காமல் படம் முடிந்ததும் வெளியேறி விடலாம். பெரும்பாலான டிரைவ் இன் திரையரங்குகளில் உணவுகளும் கிடைக்கின்றன.
இந்தியாவில் டிரைவ்-இன் திரையரங்குகள்
சென்னையில் உள்ள பிரார்த்தனா திரையரங்கம் தான் இந்தியாவின் முதல் டிரைவ்-இன் திரையரங்கம் ஆகும். மேலும், இந்தியாவில் விசாகப்பட்டினம், அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும் டிரைவ்-இன் திரையரங்குகள் உள்ளன.